Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

தபால் ஓட்டு - ஆசிரியை உட்பட 3 பேர் கைது!


தபால் வாக்குப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, வேறு ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம், சுரண்டையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள். இவரது தபால் வாக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த தபால் வாக்குச் சீட்டு முகநூல், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தென்காசி மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சமீரனுக்கு சமூக ஊடகங்களில் வெளியான தபால் வாக்கு புகைப்பட ஆதாரத்துடன் தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி புகார் அளித்தார்.

இதையடுத்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமிக்குத் தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி தபால் வாக்கு ரகசியம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் ஆசிரியர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாளைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து, அதற்கான ஆணையை வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க, பள்ளித் தாளாளருக்கு தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்டச் செயலாளர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதில், “சுரண்டை ஆர்.சி. நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பணியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் முறையாகத் தபால் வாக்கைப் பெறாத நிலையில், அவரது தபால் வாக்கை முறைகேடாக வெளி நபருக்கு வழங்கி, தபால் வாக்கின் ரகசியத்தை முகநூலில் பதிவிடச் செய்த அதிகாரிகள் மீதும், முகநூலில் பதிவிட்ட நபர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, தேர்தல் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் தென்காசி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சமூக வலைத்தளத்தில் பரவியது ஆசிரியர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாளின் தபால் வாக்கு அல்ல என்பதும், அது வெள்ளக்கால் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் கிருஷ்ணவேணி (50) என்பவருடைய தபால் வாக்கு என்பதும் தெரியவந்தது.

தேர்தல் பயிற்சி வகுப்புக்குச் சென்ற ஆசிரியை கிருஷ்ணவேணி, தபால் வாக்குப் படிவத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அதைத் தனது மகனிடம் காட்டி இதுதான் தபால் வாக்குப் படிவம் என்றும், அதில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். வாக்களித்தபின் தபால் வாக்குச் சீட்டு படிவத்தை கிருஷ்ணவேணியின் கணவர் கணேஷ் பாண்டியனின் செல்போனில் அவரது மகன் போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோ கணேஷ் பாண்டியனின் செல்போனில் வாட்ஸ் அப் மூலம் ஒரு குழுவுக்குப் பகிரப்பட்டுள்ளது.

அதைத் தென்காசியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் முகநூலில் பகிர்ந்துள்ளார். இது தெரியவந்ததும் ஆசிரியர் கிருஷ்ணவேணி, அவரது கணவர் கணேஷ் பாண்டியன் (50), தென்காசியைச் சேர்ந்த செந்தில்குமார் (47) ஆகிய 3 பேர் மீதும் தென்காசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாளை சஸ்பெண்ட் செய்ய பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆசிரியர் கிருஷ்ணவேணி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive