தமிழகம் முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலையின் அங்கீகாரம் மற்றும் இணைப்பு அந்தஸ்து பெற்று, இயங்கி வருகின்றன.இவற்றில், தன்னாட்சி அந்தஸ்து பெறாத கல்லுாரி களின் மாணவ - மாணவி யருக்கு, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை சார்பில், செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
இந்தத் தேர்வை எழுதவும், பட்டச் சான்றிதழ் வழங்கவும், கல்லுாரிகள் தரப்பில், மாணவர் களிடம் தனியாக கட்டணம் பெறப்படுகின்றன. இந்தக் கட்டணத்தை, உரிய நேரத்தில், அண்ணா பல்கலையிடம் கல்லுாரிகள் செலுத்த வேண்டும்.ஆனால், கடந்த ஆண்டு முதல், மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தை, பல்கலையிடம் செலுத்தாமல், பல கல்லுாரிகள், 'டிமிக்கி' கொடுத்துள்ளன.
இதன் காரணமாக, அந்தக் கல்லுாரிகளின் மாணவர்கள், மார்ச்சில் முடிந்த செமஸ்டர் தேர்வு களில் பங்கேற்றாலும், தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை நிறுத்தி வைத்து உள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட கல்லுாரிகளின் மாணவர்கள், அண்ணா பல்கலையிடம் புகார் அளித்து உள்ளனர். தாங்கள் கட்டணம் செலுத்திய பிறகும், தேர்வு முடிவு கிடைக்கவில்லை என, கூறியுள்ளனர்.
இதையடுத்து, மாணவர்களிடம் கட்டணம் வசூலித்த பிறகும், அதை பல்கலை நிர்வாகத்தில் செலுத்தாத, 26 கல்லுாரிகளுக்கு, பல்கலை தரப்பில் நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்கப் பட்டு உள்ளது. தேர்வு முடிவை வெளியிடும் வகையில், தாமதமின்றி தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும், கல்லுாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...