Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நவோதயா பள்ளிகளை மறுத்ததன் மூலம் தமிழகம் என்ன பயன் பெற்றது?

நவோதயா பள்ளிகளை மறுத்ததன் மூலம் தமிழகம் என்ன பயன் பெற்றது என்று காந்திய மக்கள் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்துக் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் குமரய்யா வெளியிட்டுள்ள அறிக்கை:

''கிராமப்புற மாணவர்களின் கல்வியில் நவோதயா பள்ளிகள் ஏற்படுத்தும் நேர்மறை விளைவுகளை எடுத்துரைத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை, தமிழக மக்களின், ஏழை மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ள சமூகச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரும் கூர்ந்து படிக்க வேண்டும். நவோதயா பள்ளிகளை மறுத்ததன் மூலம் தமிழகம் என்ன பயன் பெற்றது என்பதை இதயச் சுத்தியோடு திரும்பிப் பார்க்க வேண்டும்.

'நவோதயா பள்ளிகளில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளில் பயிலும் 20 சதவீதத்திற்கு மேலானோர், அகில இந்தியத் தேர்வுகளில் வெற்றி பெற்று வருகின்றனர். மும்மொழி கொள்கை  கடைப்பிடிக்கப்படுகிறது என்று தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் கட்சிகள் புறக்கணித்து வருகின்றன. தமிழ்நாட்டில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைதான் இருக்கிறது. மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் திமுக, அதிமுகவினர், அவர்களின் உறவினர்கள் இன்று சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்துவது வியப்பாக இருக்கிறது. அதேபோன்று இந்தக் கட்சிகளின், தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்தப் பள்ளிகளில் பயிலும்போது, கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் நவோதயா பள்ளிகளைப் புறக்கணிப்பது சரியல்ல' என்று பாலகுருசாமி கூறி இருக்கிறார். 'அதேபோன்று எட்டாம் வகுப்பு வரை மாநில மொழியிலேயே பாடம் நடத்தப்படுகிறது. ஆங்கிலம் இரண்டாவது மொழியாக இருக்கும். இது தமிழ்நாட்டின் பயிற்று மொழி சட்டத்திற்கு எந்த வகையிலும் எதிரானதாக இருக்காது' என்றும் கருத்துகளை முன் வைத்துள்ளார்.

தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா பள்ளிகள்  உள்ளன. 1986-ம் ஆண்டுத் தேசியக் கல்விக் கொள்கை வெளியானபிறகு, மத்திய அரசு 'ஜவஹர் நவோதயா பள்ளிகள்' என்ற பெயரில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கியது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை உள்ள இந்தப் பள்ளியில், நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும். 8-ம் வகுப்புவரை பயிற்று மொழி, தாய்மொழி அல்லது மாநில மொழியாக இருக்கும். அதன் பிறகு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் வழியாகவும், சமூக அறிவியல் பாடங்கள் இந்தி அல்லது ஆங்கிலம் வழியாகவும் பயிற்றுவிக்கப்படும். முழுவதும் மத்திய அரசின் நிதியில் இயங்கும் இந்தப் பள்ளிகள் இரு பாலரும் பயிலும் உறைவிடப் பள்ளிகளாகச் செயல்படுகின்றன. உணவு, சீருடை, பாடநூல்கள் உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக 600 ரூபாய் பெறப்படுகிறது.

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் எனில், மாதந்தோறும் ரூபாய் 1,500 அல்லது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பெறுகின்ற குழந்தைகள் கல்வி உதவித் தொகை இவற்றில் எது குறைவானதோ அது வசூலிக்கப்படும். தமிழகம் நீங்கலாக, இந்தியா முழுக்கத் தற்போது 636 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு நவோதயா பள்ளி  தொடங்குவதுதான் மத்திய அரசின் திட்டம். கிராமப்புற மக்கள், பழங்குடி மக்கள், பெண்கள் என அடித்தட்டு ஏழை மக்களுக்கும் நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் நவோதயா பள்ளிகள்  உருவாக்கப்பட்டன. இதற்கான கட்டிடம், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. மாநில அரசு அப்பள்ளிக்கு உரிய இடத்தை மட்டும் அளித்தால் போதும். வேறெந்தச் செலவும் அதற்குக் கிடையாது. நவோதயா பள்ளியைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர், மத்திய அரசின் பிரதிநிதி, பெற்றோர், அந்த ஊரின் முக்கியமான நபர்கள் உள்ளிட்ட ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் வழிகாட்டலின்படியே பள்ளி இயங்கும்.

நவோதயாவில் இந்தி கற்பிக்கப்படுகிறது. அதனால், அப்பள்ளி எங்களுக்கு வேண்டாம் என்று தமிழகத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். இது சரியல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், அவை கட்சியினர் நடத்தும் பள்ளிகளாக இருந்தாலும், இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. விருப்பம் உள்ள பெற்றோர் பள்ளியில் சேர்க்கப் போகிறார்கள். சிலர், 'எல்லோருக்கும் நவோதயா பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா' என்று கேட்கிறார்கள். ஒரு நவோதயா பள்ளியில் ஒரு வகுப்புக்கு 80 பேர் என்றால், 6 முதல் 12-ம் வகுப்பு வரை 560 பேர் படிக்கலாம். தமிழ்நாட்டில் சுமார் இருபதாயிரம் மாணவர்கள் பலன் அடைவார்கள். அதுவும், மாநில அரசுக்கு எந்தவித நிதிச் சுமையும் கிடையாது.

பெற்றோர்களுக்கு இன்றிருக்கும் பெரும் தவிப்பு, தங்கள் பிள்ளைகளுக்கு சரியான கல்வியைத் தேர்வு செய்வதுதான். தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக, வீட்டையும் வேலையையும்கூட மாற்றிக் கொள்வோர் இருக்கிறார்கள். எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்ற கேள்வியில் தொடங்கி, எந்தப் பாடத் திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதுவரை ஏகப்பட்ட குழப்பங்கள், சந்தேகங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் நவோதயா பள்ளி மிக அவசியம்.

எனவே, தமிழக அரசு நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் கொண்டு வருவதற்கு உரிய முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். இதில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், அது மாநிலக் கட்சியாக இருந்தாலும் சரி, தேசியக் கட்சியின் மாநிலப் பிரிவுகளாக இருந்தாலும் சரி, தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

விமர்சனக் கணைகளைத் தேர்தல் நேரங்களில் செலுத்த வைத்துக்கொண்டு, மற்ற நேரங்களில் மக்கள் நலனுக்காகத் தமிழக அரசியல் கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இனிமேலாவது, ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு தட்டிப் போவதைத் தவிர்ப்பதற்கு அனைவரும் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும்''.

இவ்வாறு காந்திய மக்கள் இயக்கம்  தெரிவித்துள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive