பொறியியல் படிப்புகளுக்கான புதிய
பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டிலேயே, வரும் 18ம் தேதி வெளியிடப்படும்
என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கு புதிய
பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
முதற் கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள்
மாற்றப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. பாடத்திட்டத்தின் பெரும்பகுதி
தொழில்துறையினர் பங்களிப்பு இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்
அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்திருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டிலேயே
புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
அதன்படி, காலத்துக்கேற்ப மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் வரும் 18ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்துக்கு வரும் 12ம் தேதி நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. வேலைவாய்ப்பு, தனித்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்குப் பின் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், தொழிற் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல், ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல், சராசரி மாணவர்களின் தனித்திறனை வெளிக் கொணருதல், தொழில் முனைவோராக உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுவதாக விளக்கமளித்துள்ளது. இதன் மூலம் நடப்பு கல்வியாண்டிலேயே புதிய பாடத்திட்டம் அமலாகிறது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...