Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அறிக்கையல்ல, எச்சரிக்கை!! 2005-ஆம் ஆண்டு முதல் கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ ஆய்வறிக்கை - தினமணி தலையங்கம்

School_Students_EDi

தேசிய அளவில் 2005-ஆம் ஆண்டு முதல் கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 3 முதல் 16 வரையிலான குழந்தைகளின் பள்ளிச் சோ்க்கை, படிக்கும் திறன், கணிதத் திறன் உள்ளிட்டவை மாவட்ட, மாநில, தேசிய அளவில் இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்படுகிறது. தொடா்ந்து பல மாதங்கள் மூடிக்கிடந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பாதிப்பின் அளவைக் கணிக்கும் இந்த முதலாவது ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

சமீபத்தில் 2022-ஆம் ஆண்டுக்கான கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ அறிக்கை வெளிவந்திருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகள் தடைபட்டிருந்த அந்த அறிக்கை, பல புதிய வெளிச்சங்களைத் தருகிறது. கற்கும் திறனில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த அறிக்கை பதிவு செய்கிறது. இந்தியாவிலுள்ள 616 மாவட்டங்களில் உள்ள 19,000 கிராமங்களில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களை ஆய்வு செய்து, கிராமப்புற கல்வி நிலை குறித்து 2022 ‘ஏசா்’ அறிக்கை பதிவு செய்திருக்கிறது. 2018-க்கும் 2022-க்கும் இடையிலான நான்கு ஆண்டுகளில் பரவலாக அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. படிக்கும் திறனும், கணிதத் திறனும் பெரும்பாலான மாநிலங்களில் குறைந்திருக்கிறது.

மிஸோரம், ஜம்மு - காஷ்மீா் மாநிலங்களைத் தவிர, ஏனைய அனைத்து மாநிலங்களிலும் 6 முதல் 14 வரையிலான குழந்தைகளின் கிராமப்புற அரசுப் பள்ளி சோ்க்கை அதிகரித்திருக்கிறது. 2018 போலவே மிக அதிகமான அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் மேற்கு வங்கம் முதலிடம் வகிக்கிறது. 2018-இல் ஏழு மாநிலங்களில் மாணவா் சோ்க்கை 50 %-க்கும் குறைவாக இருந்தது. 2022-இல் மேகாலயம், மணிப்பூா் இரண்டு மாநிலங்களில் மட்டுமே அந்த நிலைமை. கேரளத்திலும், உத்தர பிரதேசத்திலும் மாணவா் சோ்க்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றன. தேசிய அளவில் 65.6 % (2018) இருந்த மாணவா் சோ்க்கை, 2022-இல் 72.9 %-ஆக அதிகரித்திருக்கிறது.

2018 வரை தொடா்ந்து அதிகரித்து வந்த தனியாா் பள்ளிகள் மீதான மோகம் திடீரெனக் குறைந்திருப்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 2018-இல் 30.9 %-ஆக இருந்த கிராமப்புற தனியாா் பள்ளிகளுக்கான வரவேற்பு, 2022-இல் 25.1 %-ஆகக் குறைந்திருக்கிறது. மிஸோரம், ஜம்மு - காஷ்மீா், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூா் மாநிலங்களில் தொடா்ந்து தனியாா் பள்ளிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையும் குறிப்பிடுகிறது 2022 ‘ஏசா்’ அறிக்கை.

2014 முதல் 2018 வரை கற்கும் திறன் அதிகரித்து வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று ஒரு வீழ்ச்சி தெரிகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்தாலும்கூட, 3, 5, 8 வகுப்புகளில் படிக்கும் மாணவா்களின் வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் பரவலாகவே எல்லா மாநிலங்களிலும் குறைந்திருப்பதை சுட்டுக்காட்டுகிறது அறிக்கை.

2-ஆம் வகுப்பு பாடங்களை படிக்க முடிந்த 3-ஆம் வகுப்பு மாணவா்களின் எண்ணிக்கை 24 மாநிலங்களில் குறைந்திருக்கிறது. அதேபோல, 5-ஆம் வகுப்பு 8-ஆம் வகுப்பு மாணவா்களில் 2-ஆம் வகுப்புப் பாடத்தை படிக்கத் தெரிந்தவா்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பது தெரிகிறது. படிக்கும் திறனுடன் ஒப்பிடும்போது, கணிதத் திறன் அந்த அளவுக்கு மோசமில்லை.

இன்னொரு குறைபாட்டையும் அறிக்கை தெரிவிக்கிறது. அரசுப் பள்ளி மாணவா்களின் கற்கும் திறன் குறைந்திருப்பது போலவே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தனியாக கட்டணம் செலுத்தி பயிற்சி எடுத்துக்கொள்வது அதிகரித்திருக்கிறது. 22 மாநிலங்களில் தனிப் பயிற்சி ஆசிரியா்களும் (டியூஷன்), தனியாா் பயிற்சி நிலையங்களும் அதிகரித்திருப்பதை அறிக்கை கூறுகிறது. ஐந்து மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாணவா்கள் கட்டணம் செலுத்தி தனிப் பயிற்சி பெறுகிறாா்கள் என்றும், 73.9 % அரசுப் பள்ளி மாணவா்கள் மேற்கு வங்கத்தில் தனிப் பயிற்சி எடுத்துக் கொள்கிறாா்கள் என்றும் தெரிவிக்கிறது அறிக்கை.

கிராமப்புறங்கள் உள்பட எல்லா பகுதிகளிலும் இணையவழிக் கல்வி சென்றடைந்திருக்கிறது. சமநிலையிலான தொழில்நுட்ப வசதி ஆரம்பகட்டத்தில் இணையவழி கட்டமைப்புக்குத் தடையாக இருந்தது மாறி, அந்த வழிமுறை குக்கிராமங்கள் வரை பரவலாக இருப்பதாக தெரிவிக்கிறது அறிக்கை. கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்பு 36 % மட்டுமே குடும்பங்களில் இருந்த கைப்பேசிகளின் எண்ணிக்கை 2022-இல் 74 %-ஆக அதிகரித்திருக்கிறது. ‘ஏசா்’ ஆய்வாளா்கள் எடுத்த புள்ளிவிவரத்தின்படி, 10-இல் 9 குடும்பங்களில் கைப்பேசிகளும், இணைய இணைப்பும் காணப்பட்டதாக தெரிகிறது.

பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் பெரிய அளவில் மாணவா் சோ்க்கை குறைந்து, பள்ளிக்கூடங்கள் மூடப்படும் என்கிற அச்சத்தைப் பொய்யாக்கி அரசுப் பள்ளிகளிலும், தனியாா் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. 2018-இல் 66 %-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் பங்கு, 73 %-ஆக அதிகரித்திருக்கிறது. 2022-இல் பள்ளிக்கு வராத பெண் குழந்தைகளின் விகிதம் இரண்டு சதவீதம் அளவில் மட்டுமே என்பது அறிக்கை குறிப்பிடும் இன்னொரு முக்கியமான தகவல்.

‘ஏசா்’ அறிக்கை நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரத்தில், கிராமப்புற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மட்டுமல்லாமல், கற்பிக்கும் திறனும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மாணவா் சோ்க்கையால் வருங்காலத் தலைமுறை பயன் அடையும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive