Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வியைப் பாதிக்கும் முட்டுக்கட்டையாக ஆசிரியர் தகுதித் தேர்வு!

 முன்பொரு காலத்தில் மருத்துவமனைகளில் அனைத்து விதமான நோய்களுக்கும் சர்வ ரோக நிவாரணியாக தானா ஆனா மாத்திரை இருந்து வந்தது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆனாலும் அது நோயுற்றவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்கியதோடு கேலியாகப் பேசுபடு பொருளாக இருந்தது என்பதும் மறக்க இயலாது. ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றிற்கு தானா ஆனா மாத்திரை போன்று தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வை முன்மொழிவதும் கட்டாயமாக்குவதும் அதையொட்டிப் பதவி உயர்வு கலந்தாய்வு நடைமுறையை ஒத்திவைப்பதும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வே ஆசிரியருக்குரிய தகுதியான பொது மற்றும் தொழில் கல்வி தேர்ச்சி அடையாதோருக்காக முன்மொழியப்பட்ட ஒன்றாகும். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத்திற்கும் முறையான கல்வித் தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இனச் சுழற்சி முறையில் நியாயமாக நடைபெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஊரோடு ஒத்து வாழ் என்னும் முதுமொழிக்கேற்ப ஏனைய மாநிலங்கள் செய்வதைப் பின்பற்றி 2012 க்குப் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டு வருவது அறியத்தக்கதாகும். எனினும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழக்கம்போல் ஆசிரியர் தேர்வு வாரியம் அவ்வப்போது நடத்தும் ஆசிரியர் போட்டித் தேர்வு மட்டும் வைத்து பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறை இல்லை. 

இச்சூழலில், ஓர் இடைநிலை ஆசிரியர் வெறும் பத்தாம்/பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலோ அல்லது பணியின் போது இறந்த ஆசிரியர்களின் வாரிசுகளுக்கு அரசு அளித்துள்ள கருணை அடிப்படையிலோ அலுவலக இளநிலை உதவியாளர் ஊதிய விகிதத்தில் பணி நியமனம் ஆக மேனிலைக்கல்வி இரண்டாம் ஆண்டுத் தேர்ச்சி அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பட்டயப் படிப்புத் தேர்ச்சி அதன் பிறகு ஆண்டிற்கு இரு முறை (இது முறையாக நடத்தபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி இறுதியாக, நியமனப் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணி நியமனம் பெறமுடியும் என்ற புதிய அறிவிப்பு வேறு.

அப்பப்பா! எத்தனைத் தேர்வுகள்! இத்தனைத் தேர்வுகள் இந்திய ஆட்சிக் குடிமைப்பணிகளில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்குக் கூட இருக்குமா என்பது ஐயமே. ஓர் குறைந்த ஊதியவிகிதத்திற்கு மூச்சைப் பிடித்துக் கொண்டு இத்தனைத் தடைதாண்டிய ஓட்டம் தேவையா என்பது மலைப்பாகத்தான் உள்ளது. அத்தனைத் தடைகளையும் தாண்டிய பிறகும் பணி நியமனங்கள் நடைபெற்றதா என்றால் அதுவும் கேள்விக்குறியே! இடைநிலை ஆசிரியர் புதிய பணி நியமனங்கள் நடைபெற்று பத்தாண்டுகள் ஆகப் போகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று பல்லாயிரம் பேர் அடுத்த போட்டிக்காகக் காத்துக் கிடக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நாட்டில் பணிக்கு வந்து விட்ட ஓர் ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் தம் அடுத்தடுத்த பதவி உயர்வுகளுக்கு புதியதொரு போட்டித் தேர்வு அல்லது தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்றால்தான் அடைய முடியும் என்கிற நிலைமை இருப்பதாகத் தெரியவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற மற்றும் பணிநியமனப் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெறவிருக்கும் இருபால் இடைநிலை ஆசிரியர்கள் அதன் பின்னர் தம் பணி மூப்பு மற்றும் உயர் கல்வித் தகுதி தேர்ச்சி ஆகிய போதிய தகுதிகள் இருந்தாலும் அடுத்தகட்ட பட்டதாரி ஆசிரியர் அல்லது தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுகளுக்கு மறுபடியும் ஒரு தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெறவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது கொடுமையானது. இதோடு முடிந்துவிடவில்லை. முதல்கட்ட பதவி உயர்வு அடைந்தவர்கள் அதற்கடுத்த பதவி உயர்வுகளைப் பெற தகுதித் தேர்வு எழுத வேண்டிய நெருக்கடி நிலையுள்ளது.

இந்த நிலைமை வேறு பல்வேறு நிலைகளில் உள்ள உயர் அலுவலர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சோதனை மேல் சோதனை என்பது ஆசிரியர் பெருமக்களுக்குத் தான் என்கிற போது, 'போங்கடா! நீங்களும் உங்கள் வேலையும்!' என்று தம் பணியை உதறிச் செல்கின்ற ஒரு நகைச்சுவைக் காட்சி தான் நினைவிற்கு வருகிறது. 

அறுபது வயதைக் கடந்து பணிநிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்கிற தற்போதைய நிலையில் பேசாமல் இந்தப் பாடு படுவதற்கு நிம்மதியாகக் கூலிவேலை செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் தான் அண்மைக்காலத்தில் பணி செய்வதில் விருப்பமிருந்தாலும் இதுபோன்ற பணி நெருக்கடி மற்றும் பணிச்சுமை காரணமாக 'போதுமடா சாமி!' என்று வெறுப்பு மேலோங்க விருப்ப ஓய்வு கொடுத்துச் செல்லும் நோக்கும் போக்கும் ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது. இதை வெறுப்பு ஓய்வு என்று எடுத்துக் கொள்வதில் ஒரு தவறும் இல்லை எனலாம்.

இதுபோன்ற புறவயத் தேர்வுகளால் ஒரு நல்ல ஆசிரியரை ஒருபோதும் உருவாக்க முடியாது. ஆசிரியர் பணி என்பது அகவயப்பட்டதும் கூட. குழந்தை மற்றும் பதின்பருவத்தினர் உளவியல் சார்ந்த தக்க போதிய பாடக் கல்வித்தகுதிகள், நல்ல வகுப்பறைச் சூழல், பணியில் சுதந்திரம் மற்றும் நிம்மதி முதலானவை ஆசிரியர் பணிக்கு என்றும் இன்றியமையாதவையாகும். இதை எழுது; அதை எழுது என்று விரட்டிக் கொண்டே இருப்பது யாருக்கும் அழகல்ல. இதுபோல், இனி அனைத்துத் துறைகளிலும் அனைத்து வகையான பணி நியமனங்களுக்கும் பதவி உயர்வுகளுக்கும் உரிய கல்வித் தகுதிக்கு அப்பாற்பட்டு தகுதித் தேர்வு தேர்ச்சியைக் கட்டாயப்படுத்தினால் நிலைமை என்னவாகும்?

மேலும், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நாட்டின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் இரு அவை உறுப்பினர்கள் ஆகியோரும் மக்களுக்கு உரிய உகந்த உன்னத பணிபுரிய ஒவ்வொரு நிலையிலும் அரசியல் தகுதித் தேர்வு தேர்ச்சிப் பெறுவது இன்றியமையாதது என்று வலியுறுத்துவது என்பது சமூக ஏற்புடையதாக அமையுமா? அல்லது நடைமுறை சாத்தியம் தான் படுமா? 

குறிப்பாக, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பவர் வெறும் பாட ஆசிரியர் மட்டும் அல்லர். அவர் அப்பள்ளியின் நிர்வாகத் தலைவரும் ஆவார். பள்ளி நிர்வாக மேலாண்மை, பணியாளர் ஒருங்கிணைப்பு, திட்டமிடல் மற்றும் செயலாக்கம் புரிதல், பள்ளி விதிகள் மற்றும் செயல்முறைகள் நடைமுறைப்படுத்துதல், உளவியல் சார்ந்த மாணவர் மற்றும் பெற்றோர் சிக்கல்கள், சமுதாயத் தொடர்பு, நேரம் மற்றும் நிதி நிர்வாகம் முதலானவற்றை அறிந்திருத்தலும் செயல்படுத்துதலும் இன்றியமையாதது. இதற்கு, அடிப்படைக் கல்வித்தகுதி சார்ந்த கற்பிக்கும் முதன்மைப் பாடங்கள் அடிப்படையிலான கொள்குறி வகைப் புறவயத்தேர்வும் கட்டாயத் தேர்ச்சியும் எந்த வகையிலும் பயனளிக்காது என்பது கண்கூடு. 

அதற்காக, ஆசிரியர் சமூகம் தேர்வைக் கண்டு அச்சம் கொள்கிறது என்று நினைப்பதற்கு இல்லை. பதவி உயர்வுகளுக்காகப் பலதரப்பட்ட கல்வித் தகுதிகளுடன் முனைவர் பட்டத்தையும் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிநியமனத்திற்குரிய தேசிய மற்றும் மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பல்வேறு நவீன தொழில்நுட்ப பயிற்சிகளையும் துறைத் தேர்வுகளில் அடைவுப் பெற்று இருப்பினும் இன்னும் இடைநிலை ஆசிரியராகவே இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்கள் பலர் இருக்கின்றனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

இன்று ஆசிரியருக்குத் தகுதித் தேர்வு வேண்டும் என்று கூறுபவர்கள் யாவரும் ஒரு காலத்தில் குறைந்தபட்ச அடிப்படைக் கல்வித் தகுதிகளுடன் மட்டுமே தேர்ச்சி பெற்றும்/ பெறாமலும் பணிபுரிந்த இடைநிலை/ இளநிலை ஆசிரியர்களிடம் கல்வியறிவு பெற்று உயர்ந்தவர்கள்தாம். ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. முதுகலைப் பட்டமும் கல்வியியல் பட்டமும் பெறாதவர்களை அடையாளம் காண்பது என்பது இயலாதது. அதுபோல், பல்வேறு துறைத் தேர்வுகளிலும் தேர்ச்சிப் பெற்றும் காணப்படுகின்றனர். இதில் கூடுதல் சுமையாக, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுதல் கட்டாயம் என்பது அமைகிறது. 

ஓர் ஆசிரியர் கல்வியால் உயர்வதும் அறிவால் மேம்படுவதும் பலவகையான திறன்களில் அடைவு பெறுவதும் தேவையான ஒன்று. அதற்கு குறைந்த விழுக்காடு தேர்ச்சி வாய்ப்பு உள்ள தகுதித் தேர்வும் அதை எதிர்கொள்ளும் திறமும் அதற்கான நேர காலமும் தோல்வியிலிருந்து மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் மனப்பக்குவமும் காலம் கடந்த வயதும் நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளைக் கடந்து மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளும் அலுவலகம் சார்ந்த பணி நெருக்கடிகளும் வகுப்பறை சார்ந்த கற்பித்தல் சிக்கல்களும் சுய கற்றலுக்கான நேர ஒதுக்கீடுகளும் அதுகுறித்த சக பணியாளர்களுக்கு இடையில் நிகழும் உரையாடல்களும் அங்கலாய்ப்புகளும் மன வருத்தங்களும் மாணவர்கள் நலனைப் பாதிக்காது என்பதற்கு ஒரு உறுதிப்பாடும் கிடையாது. சாதாரண தேர்விற்கும் போட்டித் தேர்விற்கும் நிறைய வேறுபாடுகள் நிறைந்துள்ளன. 

அதீத உழைப்பும் நெடுநேர ஆழ்ந்த வாசிப்பும் போட்டித் தேர்வுகளுக்கு இன்றியமையாத பண்புகள் ஆகும். இதுவரையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அனைத்தும் போட்டித் தேர்வுகளை விட கடினமானதாகவே இருந்து வந்துள்ளன. இதை ஒவ்வொரு முறையும் தேர்ச்சி பெற்ற விழுக்காட்டினர் வழியாக அறிந்துணர முடியும். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அறிவிக்கபட்ட ஆண்டிலிருந்து ஒரே சீராக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடந்ததாகவும் வரலாறு இல்லை. அனைத்துத் துறை உயர் மற்றும் கடைநிலை அலுவலர்களுக்கும் இருக்கும் நியாயமான தொழிலாளர் நல சட்டத்திற்கு உட்பட்ட ஆசை போல தம் பதவி உயர்விற்காக ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயத் தேர்ச்சி பெற வேண்டி தம் இல்லங்களிலும் வகுப்பறைகளிலும் மாணவர்கள் உள்ளங்களிலும் அவர்தம் பெற்றோர்கள் நம்பிக்கை எண்ணங்களிலும் இருந்து வழுவி, கற்பித்தலைத் துறந்து, முழுநேர புத்தகப் புழுக்களாக ஆக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதனால் கல்வி அடியோடு பாழ்படும்.

முடிவாக, போதுமான உரிய கல்வித் தகுதியும் ஏனைய எல்லா வகையான துறைகளிலும் கடைபிடிக்கப்படும் பணிமூப்பு முன்னுரிமையும் அடிப்படையில் ஏற்கனவே நடைமுறையில் பதவி உயர்வு பெறுவதற்கு இருந்து வரும் அடிப்படை தகுதிகளே போதுமானவை. அதை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு கலந்தாய்வுகள் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பதே சாலச்சிறந்தது. இது எளிய நடைமுறையும் கூட. இதன் காரணமாகக் கற்றல் கற்பித்தல் நிகழ்வில் துளியும் பாதிப்பு ஏற்படாது. குறிப்பாக, ஆசிரியர்களுக்கு நல்ல பயனுள்ள சூழலை ஏற்படுத்திக் கொடுத்து சுதந்திரமாகப் பாடம் கற்பிக்க வழிவிடுங்கள். அதைவிடுத்து ஆளாளுக்கு ஏதேதோ பாடம் எடுக்க முயன்று கல்விக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்!

எழுத்தாளர் மணி கணேசன் 





2 Comments:

  1. 50வயதை கடந்த இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவையெனில் தற்போதுள்ள வயது வரம்பில் கூட தளர்வு இல்லையே பிறகு எப்படி தகுதி தேர்வு எழுதுவது சட்டம் போடும் கோர்ட்டும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்

    ReplyDelete
  2. Thankkenru Vali varumbothu thaan katainilai oozhiyanin nilai puriyum.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive