இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இரு தேர்வுகள் கூடாது; ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர். தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவது மனிதநேயமற்ற செயலாகும்.
தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 10 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் வாடி வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. மாறாக கடந்த 9 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாத தமிழக அரசு தான் இதற்கு காரணம் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை அதனடிப்படையில் ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்; போட்டித் தேர்வுகளை நடத்தக்கூடாது என்ற அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது; அதை தமிழக அரசு ஏற்க மறுப்பது நியாயமற்றது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு மட்டும் தான் நடத்தப்படுகிறது; கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு தகுதித் தேர்வு மட்டும் தான் நடத்தப்படுகிறது. ஆனால், அந்த பணிகளை விட குறைந்த கல்வித் தகுதியும், ஊதியமும் கொண்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதலில் தகுதித் தேர்வு, பின்னர் போட்டித்தேர்வு என்பதை ஏற்க முடியாது. இது பெரும் அநீதி.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது தான் தகுதி ஆகும். 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அதே நிலையே இப்போதும் தொடர வேண்டும் என்பது தகுதித் தேர்வில் வென்றவர்களின் கோரிக்கை. அதை ஏற்று அவர்களுக்கு பணி ஆணை வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...