Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.02.2026

  திருக்குறள்: 

அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை 

குறள் 561: 

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங் கொறுப்பது வேந்து. 

விளக்க உரை: 

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

பழமொழி :

Laughter is the best medicine. 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்று நற்குணங்களுடன் அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமயமாகிவிடும்        

விவேகானந்தர்

பொது அறிவு : 

01.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை நூல்  எது?

சந்தியா சங்கீத்' (Sandhya Sangit - மாலைக்கால கவிதைகள்)

02."சிலம்புச் செல்வர்"என்று அழைக்கப்படும் தமிழறிஞர் யார்?

 ம.பொ. சிவஞானம் (மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்)
Mylai Ponnuswamy Sivagnanam.

English words :

Terminate –to end, முடிவுறுதல், முடிவுறச் செய்தல்

culminate –to reach a final result.

இறுதி முடிவை எட்டுதல்

தமிழ் இலக்கணம்: 

 நர்/ னர் 
எந்த விகுதி எந்த வார்த்தையின் பின் வரும் என்பதை இன்று பார்க்கப் போகிறோம்.
கட்டளை சொல்லின் பின்னால் 
 நர் வரும். மற்ற சொற்களின் பின்னால் னர் வரும் 
* அனுப்பு (கட்டளை) = அனுப்புநர்
* பெறு (கட்டளை) = பெறுநர்
* அளித்த (கட்டளை இல்லை) = அளித்தனர்
* பேசி (கட்டளை இல்லை) = பேசினர்

அறிவியல் களஞ்சியம் :

துவக்கத்தில் பூமியின் விரைவான சுழற்சியால் ஒரு நாள் = 6 மணி நேரம் இருப்பினும் சில மதிப்பீடுகள் சந்திரனை உருவாக்கிய மாபெரும் மோதலுக்குப் பிறகு உடனடியாக 4 மணி நேரம் வரை குறுகியதாக இருந்தது. ஒரு நாளின் நீளம் காலப்போக்கில் அதிகரித்து, சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் என்பது, சுமார் 12 மணி நேரத்தையும், சுமார் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 19 மணி நேரத்தையும் எட்டியது.

நீதிக்கதை

 தேவதை கொடுத்த பரிசு

ஒரு கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் மதன். மற்றவன் பெயர் குணா. இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர். அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.

நண்பனே! இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத்திற்கும் போதிய உணவுப்பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம் என்றான் குணா.

அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே. நீயே எடுத்துக்கொள் என்றான் மதன். இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் குணா.

இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமையில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன், என்று அழுத்தமாகக் கூறினான் மதன். ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். 

அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர். மீனவர்களே, என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இருவரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப்பது போன்று தெரிகிறது. அது என்னவென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன், என்றாள் கடல் தேவதை.

தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.

என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும்படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று! என்றான் குணா.

கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது. நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இருவருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன் என்றது கடல் தேவதை.

பிறகு, மதன் முன்பும், குணா முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள். இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன. இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக்காரர்கள் ஆனார்கள்.

இன்றைய செய்திகள்

25.02.2026

⭐திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

⭐இனி கேரளா அல்ல 'கேரளம்'... பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

⭐தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

⭐தமிழ்நாட்டில் சுட்டெரிக்க தொடங்கிய வெயில்-அதிகபட்சமாக ஈரோட்டில் 100 டிகிரி பதிவு

⭐உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், மாஸ்கோவின் 4 விமான நிலையங்களையும் மூடுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக  இந்திய அணி தோல்வியடைந்தபோதும் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை படைத்திருக்கிறார்.இவர் ஐ.சி.சி. பந்து வீச்சுக்கான தர வரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்து உள்ளார்.

Today's Headlines

⭐ The Chief Minister inaugurated the silver jubilee entrance gate of the Thiruvalluvar statue.

⭐ No longer “Kerala” but “Keralam”… The Union Cabinet has approved the name change of  Kerala!

⭐ The Election Commission of India has released the final electoral roll for Tamil Nadu.

⭐ The heat has started scorching in Tamil Nadu – the highest temperature of 100 degrees was recorded in Erode.

⭐ Due to the war between Ukraine and Russia intensifying again, Russia has announced the closure of four airports in Moscow.

🏀 Sports News

🏀 Although the Indian national cricket team lost to the South African national cricket team in the T20 World Cup match, Indian player Varun Chakravarthy has created a record. He has secured the number one position in the ICC bowlers' ranking. 

Covai women ICT_போதிமரம்

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive