பொதுத்தேர்வுக்குத் தயாராவோம்!
ஆக்கம்:
‘நல்லாசிரியர்’ ச.சேட்டு மதார்சா,
ஈ.கே.எம்.அ.க. மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி, ஈரோடு.
மின்னஞ்சல்: settumatharsha@gmail.com
வாழ்வின் திருப்பு முனையான 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவிருக்கும் நேரமிது. தேர்வின் போது நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை இனி நோக்குவோம்.
தன்னம்பிக்கை கொண்டோரின் வாழ்வுதான் நாளைய சரித்திரம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற சொல்லுக்கேற்ப என்னால் முடியும் என்பவரே முழு மனிதன். தேர்வை நல்ல முறையில் எதிர்கொள்ள இயலும் என்ற எண்ணத்தினை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் விதைக்கும் விதைகளெல்லாம் முளைப்பதில்லை. விரும்பும் விதைகள்தான் முளைக்கின்றன.
மனம் நிரப்பப்படவேண்டிய பாத்திரம் அல்ல. அது தூண்டப்பட வேண்டிய தீபம் என்பது மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டின் நிலை, வறுமை, தாழ்வு மணப்பான்மை, சலிப்பு. நாமெல்லாம் நல்ல மதிப்பெண் வாங்க முடியுமா ? என்ற சிந்தனையை ஒழித்து விடுங்கள். சுடர் விளக்காயினும் தூண்டு கோள் வேண்டும் என்பர். அதுபோல மாணவர்கள் தங்கள் மனமெனும் சுடர் விளக்கினை, "நான் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவேன்" எனும் வாசகத்தை நினைத்துக் கொண்டே இருந்தால். உன் மனமெனும் விளக்கு சாதனை தீபமாய் சுடர் விடும் என்பதில் ஐயமில்லை!
சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பது போல, உடல் நலமாக இருந்தால் தான் தேர்வினை நல்ல முறையில் எழுதிட முடியும். தேர்வு நெருங்குகிறதே. அதிகம் படிக்க வேண்டுமே என்று புலம்பிக் கொண்டிருப்பதோ. அதிக நேரம் இரவில் கண்விழித்து படிப்பதோ கூடாது. தலைவலி, கண்ணெரிச்சல், உடல் சுறுசுறுப்பின்மை ஆகியவை இதனால் ஏற்படும்.
மேலும். கோடைகாலம் என்பதால் செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், விரைவு உணவுகள். எண்ணைப் பலகாரங்கள் ஆகியவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள். தயிர், மோர் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
'காலம் பொன் போன்றது" ஒவ்வொரு வினாடியும் திரும்ப கிடைக்காதது என்பதை மனதில் கொண்டு, நேரத்தை வீணாக்க வேண்டாம். அலைபேசி, தொலைக்காட்சி கட்டாயம் ஆகியவற்றையும் முற்றிலும் தவிர்த்தல் வேண்டும்.பதட்டம் நம் மூளையைச் செயலிழக்கச் செய்யும். ஆகவே. தேர்வுக்குப் படிக்கும் போதோ? தேர்வு அறைக்குச் செல்லும்போதோ? எக்காரணம் கொண்டும் பதட்டப் படாதீர்கள். இது நீங்கள் நன்கு மனனம் செய்த வினா விடைகளைக் கூட மறக்கச் செய்யும் என்பதை மறந்து விடக்கூடாது.
எந்தப் பாடத்தில் எத்தனை வினா விடைகள் படித்துள்ளோம் என்பதை திட்டமிடல் வரைபடமாக வரைந்து வைத்துக் கொள்ளுங்கள். பாடத்தலைப்பு, படித்த புத்தகம். ஒரு மதிப்பெண், குறுவினா. சிறு வினா. நெடுவினா. பிற வினாக்கள் ஆகியவற்றை வரிசையாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இவ்வாறு எழுதி வைத்திருக்கும் பட்சத்தில் அந்தப் பாடத்தையோ, வினா விடையையோ தேட வேண்டிய அவசியமில்லை. இக்குறிப்புகள் திருப்புதலுக்குப் பயன்படும். எந்தப் பாடத்தை முதலில் திருப்புதல் செய்ய வேண்டும். எத்தனை மணிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் திருப்புதலை வேகமாக செய்ய முடியும்.
தேர்வுக்கு முதல் நாள் "எண்ணித் துணிக கருமம்" என்பது போல் துணிவுடன் தயாராகுங்கள். ஏற்கனவே படித்த வினா விடைகளை மறு நினைவூட்டல் செய்து கொள்ளுங்கள். தேர்வுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தயார் படுத்திக் கொள்ளவேண்டும். தேர்வுக்காக புது பேனா வாங்குவதைத் தவிர்த்து ஏற்கனவே பழக்கப்பட்ட பேனாவையே உபரியாகிப்பது தேர்வை விரைவாகவும், கை வலி போன்ற பிரச்சனைகள் இன்றியும் தேர்வை எழுத உதவும்.
தேர்விற்கு முதல் நாள் இரவு நாளை வினாத்தாள் எப்படி இருக்குமோ என்ற சிந்தனையோடு தூங்காமல் சிந்திப்பது மிகவும் தவறு. ஏனெனில், தூக்கமின்மை தேர்வு எழுதும் போது உடல் மற்றும் மனச்சோர்வைத் தரும். ஆகவே, இரவு நன்றாக உறங்கி அதிகாலை எழுந்து கொள்ளுங்கள்.
தேர்வுக்குச் செல்லும் கடைசி நேரத்தில் உணவு உட்கொள்வதை தவிர்த்து 1 மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதே போல் தேர்வு மையத்திற்கு 1 மணி நேரம் முன்பாகவே சென்று விடுங்கள். தாமதமாகிவிட்டது என்று பதட்டத்துடனோ? வேகமாகவோ? ஓடிப் போய் பேருந்தில் ஏறுவதோ, ஓடுவதோ கூடாது. நிதானத்தையே பிரதானமாக கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும்.
தேர்வறைக்குச் செல்லும் முன் "இந்த வினா தேர்வில் வரும் என்று" யாராவது சொன்னால் படிக்க வில்லையே என்று பதட்டப்படுவதோ, புத்தகத்தைப் புரட்டுவதோ கூடாது. கண்காணிப்பாளர் அனுமதியளித்த பிறகே .தேர்வறைக்குள் செல்லவேண்டும். அவர் தரும் குறிப்புகளை நன்கு காது கொடுத்து கேட்க வேண்டும். வினாத்தாளை கொடுத்தவுடன் அதை வாங்கும் போதே அனைத்து வினாக்களும் எளிமையாகவே இருக்கும் என்ற நம்பிக்கை நினைவோடு தான் வாங்க வேண்டும். வினாத்தாள் முழுமையாக அச்சாகி இருக்கிறதா ? என பார்த்தப் பிறகே பதிவு எண்ணை எழுத வேண்டும். வினாத்தாளில் விடைகளை குறிக்கவோ, குறிப்புகளை எழுதவோ கூடாது.
அடுத்து மிக மிக கவனமாக இருக்க வேண்டிய பகுதி விடைத்தாள்
நாம் எழுதப் போகும் விடைக்குரிய வினா எண்ணை மறக்காமல் எழுத வேண்டும்.
அடித்தல், திருத்தல், விளம்புதல் ஆகியவற்றை விடைத்தாளில் செய்தல் கூடாது.
இடம்விட்டு தெளிவாக விடைகளை எழுத வேண்டும்.
வினாவிற்குரிய விடைகளை மட்டும் எழுதினால் போதும். மீண்டும் வினாவை எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
வினாவிற்குரிய விடை முழுவதையும் எழுதிய பிறகு கோடிடுக.
* முக்கிய நிகழ்வுகள், ஆண்டு, இடம், குறியீடு. சமன்பாடுகள், சூத்திரங்கள், இறுதி விடைகள் ஆகியவற்றை அடிக்கோடிட்டு காட்டலாம்.
*ஒரு பகுதியில் எத்தனை வினாவிற்கு விடை எழுதச் சொல்லியிருக்கிறார்களோ அதற்கு மட்டுமே விடையளிக்க வேண்டும்.
கூடுதலாக மிகை விடைகள் எழுதக்கூடாது.
* விடைத்தாளில் பதிவு எண், பெயர்,ஊர், மாவட்டம் ஆகியவற்றை எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடக் கூடாது.
*விடைத்தாளில் அழகு படுத்துவதில் நேரத்தை வீணடிக்கக்கூடாது.
* கொடுக்கப்பட்ட நேரத்திற்கு 10 நிமிடம் முன்னதாகவே விடைகளை முடித்து விட்டு எழுதிய அனைத்து விடைகளையும் சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.
* முடிந்த தேர்வைப்பற்றி நன்றாக எழுதியிருக்கிறோமா என்று சிந்தித்துக் கொண்டே இருப்பது கூடாது.
* தேர்வு முடிந்ததுமே அடுத்த தேர்வுக்காக உடனே புத்தகத்தை எடுத்து படிப்பதைத் தவிர்த்து சற்று ஓய்வுக்குப் பின் படிக்கத் தொடங்குங்கள்.
முயற்சி + தொடர் பயிற்சி + கடின உழைப்பு = சாதனை
முயற்சிப்போம்... முந்திச் செல்வோம்... முதன்மை பெறுவோம் என்று பொதுத்தேர்வை எழுதும் மாணாக்கர்கள் அனைவரையும் பாடசாலை தேர்விலும், வாழ்விலும் ஈடு இணையில்லா வெற்றி பெற வாழ்த்துகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...