NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சரஸ்வதி பூஜை! - பூஜிப்பது எப்படி? பூஜிக்க உகந்த நேரம் எது?


எப்படி ஒரு மரத்தின் வளர்ச்சிக்கு அதன் வேரில் தண்ணீர் ஊற்றினால் பயன் கிடைக்கிறதோ அதுபோல், அன்னைக்கு செய்யக்கூடிய அனைத்து வழிபாடுகளும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் சென்று அடைகிறது என்று நமது முன்னோர் அறிந்து இவற்றை தவறாது செய்து வந்தனர். அப்படியான வழிபாடுகளில் ஒன்று நவராத்திரி வழிபாடு.

நவராத்திரி நாட்களில் பிரதமை முதல் நவமி வரை இன்னின்ன தெய்வங்களை இன்னின்ன நாட்களில் முறைப்படி வழிபட வேண்டும் என்று விளக்குகின்றன ஞானநூல்கள். முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபட்டு வேண்டிய அருள் பெறலாம். இது பொதுவான முறை. விரிவான முறையில் வழிபடுவோர், புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும்.

ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள்.அதேபோன்று, மகா நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங் களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன் படுத்தாமல் அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட் களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.
அவ்வகையில் இன்று (9.10.16) துர்காஷ்டமி. நாளை (10.10.16) மகாநவமி; சரஸ்வதி பூஜை.
பூஜிப்பது எப்படி?
சரஸ்வதி பூஜைக்கு முதல்நாளே (அதாவது இன்று) பூஜை அறையைக் கழுவி சுத்தம் செய்து அலங்கரித்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும்.
அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு. பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.
சரஸ்வதி பூஜை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும். பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது அம்பாளின் திருவடிவம் அல்லது திருவுருவப் படத்தை வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு மாவிலைகளை மேலே வைத்து, பூஜையைத் துவங்க வேண்டும்.


மகாநவமி திருநாளில் நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப் படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங் களையும் பூஜையில் வைத்து வழிபடுவது விசேஷம் என்று பார்த்தோம் அல்லவா. அதன்படி குழந்தைகளின் பாடப்புத்தகங்களையே மேடையாக அடுக்கி8, அதன் மீது அன்னையை எழுந்தருளச் செய்யும் வழக்கமும் உண்டு. சிலர், சரஸ்வதிதேவியின் திருமுன் புத்தகங்களை அடுக்கிவைப்பார்கள்.

இப்படி எல்லாம் தயார் செய்தபிறகு, பூஜை நல்லபடியாக நிறைவேறவும், பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்தருளும் படியும் மனதார மனதார வேண்டிக்கொண்டு, உரிய துதிப்பாடல்களைப் பாடி, வணங்கவேண்டும். பின்னர் முறைப்படி தூப, தீப ஆராதனைகளைச் செய்யவேண்டும். நைவேத்தியமாக பழரசம், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், சித்ரான்னங்கள் ஆகியவற்றைப் படைத்து வழிபடவேண்டும்.
மலைமகள் துதிப் பாடல்...
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே



அலைமகள் துதிப் பாடல்...
நீங்காது நின்மகனும் நீண்ட திருமாலும்
பாங்காக அன்றுவந்த பாற்கடல்போல் தேங்காமல்
நன்றாக நீயிருந்து நாளும் வளம் பெருக்கி
என்றைக்கும் நீங்காதிரு
கலைமகள் துதிப்பாடல்...
மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாய்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலா வல்லியே
பூஜிக்க உகந்த நேரம்
நாளை (10.10.16 திங்கள்) சரஸ்வதி பூஜை. அன்று காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் அல்லது நண்பகல் 12 முதல் 1 மணிக்குள் ஏடு அடுக்கி வழிபடலாம். மறுநாள் விஜயதசமி அன்று (11.10.16) காலை வேளையில் எளிய பூஜையுடன், ஏடு பிரிக்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive