தீபாவளியில் தீபம் ஏற்றுவோம் !

          திருநாளில் தீபம் ஏற்றுவது சிறப்பு! இருளைக் கொண்டு ஒரு மலையையே மறைக்கலாம். ஆனால் மலையளவு இருளால் கூட ஓர் அகல்விளக்கை மறைக்க முடியாது.
           விளக்கில் உள்ள தீபத்தை தலைகீழாகப் பிடித்தாலும் அது மேல்நோக்கியே எரியும். மனிதனின் லட்சியமும் மேலும் உயர வேண்டும் என்பதையே அது காட்டுகிறது. விளக்கின் ஒளி அகன்றும் ஆழ்ந்தும் கூர்மையாகவும் இருக்கும். மனிதனின் அறிவும் அப்படியே இருக்க வேண்டும்.
உலகமெல்லாம் நிறைந்து விளங்கும் இறைவனை நாம் வழிபடும் இடத்தில் எழுந்தருளச் செய்ய தீபாவளி திருவிளக்கு வழிபாடு வழி செய்கிறது. விளக்கின் தலையிலுள்ள ஐந்து முகங்களும் அண்டத்தில் உள்ள ஐந்து பூதங்களையும் பிண்டத்தில் (உடம்பில்) உள்ள ஐந்து பொறிகளையும் குறிப்பவை. விளக்கினை ஏற்றி அவ்வொளியால் கண், காது, மூக்கு, வாய், தோல் என்ற ஐம்பொறிகளையும் ஒளிபெறச் செய்ய வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
சூரியன், கணபதி, மகேஸ்வரர், அம்பிகை, விஷ்ணு என்ற ஐந்து தெய்வங்களை வணங்குவதாகவும் இது பொருள்படும். விளக்கின் அடிப்பாகம் பிரம்ம சொரூபம் என்றும் அதன் தண்டு விஷ்ணு பாகம் என்றும் அதன் ஐந்து முகங்கள் சிவபாகம் என்றும் வர்ணிக்கப்படும். திரி எரிந்து எழுகின்ற சுடரில் முத்தேவிகளும் குடியிருப்பர் என்பது ஐதீகம். சுடரை திருமகளாகவும் தீப்பிழம்பை கலைமகளாகவும் அதில் எழும் உஷ்ணமாகிய சூட்டை பராசக்தியாகவும் எண்ணி மக்கள் வழிபடுவர்.
"இறைவனை ஜோதி வடிவமாகக் கண்டார்கள். அவன் அருட்பெருஞ்சோதியன் அவனை அடைய தனிப்பெருங்கருணை வேண்டும்' என்றார் வள்ளலார். மாலும் அயனும் சிவபெருமானின் அடிமுடி தேடிய நேரத்தில் அவன் ஜோதிப்பிழம்பாக நின்றான்.
வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் விளக்கு சற்று மங்கலாக எரிந்தபோது விளக்கில் இருக்கும் நெய்யை உண்ணச் சென்ற எலி, தனது மூக்கால் திரியை கொஞ்சம் நகர்த்திவிட, தீபம் சுடர்விட்டு எரிந்தது. அந்தப் புண்ணியத்தால் அடுத்த பிறவியில் அந்த எலி, சக்ரவர்த்தியாக பிறந்தது என்கிறார் அப்பர் சுவாமிகள்.
"இருட்டைப் பழித்துக் கொண்டு இருக்காதீர்கள், விளக்கை ஏற்றுங்கள்' என்கிறார் ஒரு மகான்.
- பேராசிரியர் முனைவர் பி.கி. சிவராமன்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive