Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்விக்கு முக்கியம் சிலபஸா? பள்ளியா?


       பள்ளிகளில் பாட முறை மாறிக் கொண்டே இருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 
 
           தற்போது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி முறையில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.இதனால் சிறுவயது முதல் வேறு கல்வி முறையில் படித்து வரும் மாணவர்களுக்கு, திடீரென்று பாட முறையில் மாற்றம் ஏற்படுவதால், பாடம் எப்படி இருக்கும்? படிக்க முடியுமா? நல்ல மதிப்பெண் எடுக்க முடியுமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், ஆசிரியர்களுக்கும் இது புதிய முறை என்பதால் கற்பித்தலிலும், மதிப்பெண்கள் இடுவதிலும் சற்று குழப்பம் ஏற்படலாம்.

         மெட்ரிக் பள்ளிகளிலும், சமச்சீர் கல்வி முறையே பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிவிட்டதால், இதுவரை மெட்ரிக் முறையில் பயின்று வந்த மாணவர்களுக்கும் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. சில மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வி முறையை தேர்வு செய்வதற்கு பதிலாக சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றிக் கொள்கின்றன.

               இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க இருக்கும் பெற்றோர், சமச்சீர் கல்வியா முறையா, மெட்ரிக் பள்ளியில் சேர்பதா அல்லது சிபிஎஸ்இ பள்ளியில் சேர்பதா என தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர்

          சிபிஎஸ்இ படிப்பு முறையை தேர்வு செய்யும் பெற்றோர், இந்த பாட முறையில் தமிழை மொழிப் பாடமாக படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு பதில் இந்தி அல்லது வேறு ஒரு முறையை முதல் பாடமாக படிக்கலாம். சிபிஎஸ்இ., பாட முறையில் மாணவர்கள் பயில்வதால் வெளி மாநிலத்துக்கு சென்று வேலை பார்க்கும் போது எளிதாகிறது. படிப்பு மட்டும் அல்லாமல் புராஜெக்ட் என பல விஷயங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதால், அனைத்து விஷயங்களை மாணவர்களால் எளிதாகக் கையாள முடிகிறது. அது மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கும் நல்ல வாய்ப்பாக சிபிஎஸ்இ பள்ளி அமைகிறது. மேலும் படிப்பு முடித்துவிட்டு நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது தைரியமாக எதிர்கொள்ளவும் முடிகிறது என்கிறார்கள் பெற்றோர்.

              சிபிஎஸ்இ பள்ளிகளைப் பற்றி சில பெற்றோர் இவ்வாறாகவும் கூறுகிறார்கள். அதாவது, மாணவர்களின் நலன் கருதி 2009ம் ஆண்டுக்கு பிறகு சிபிஎஸ்இ பாடங்கள் வெகுவாகு குறைந்து விட்டது. மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஒன்று வைத்தால் தான் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், மாணவர்களிடையே போட்டியும் ஏற்படும். எனவே கட்டாயமாக பொதுத்தேர்வு வைக்க வேண்டும் என்கிறார்கள் சிலர்

          சமச்சீர் கல்வி முறை பற்றி சிலர் கூறும்போது, பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வு நேரத்தில் வாந்தி எடுக்கும் முறை ஸ்டேட் போர்டு கல்வி முறை. ஆனால் சிபிஎஸ்இ பாட திட்டத்தில் சிந்தனையைத் தூண்டும் விதமாக பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

          அதே சமயம் 10ம் வகுப்பு புத்தகங்களில் அறிவியல், கணித பாடங்களில் சிபிஎஸ்இ பாட முறையை விட சமர்ச்சீர் பாடமுறையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றது. என் பையன் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கிறான் என்று பெருமையாக சொல்லாமே தவிர மற்றபடி பெரிய வித்தியாசம் இல்லை என்கின்றனர் சில ஸ்டேட் போர்டு கல்வியை விரும்பும் பெற்றோர்கள்.

            தமிழ்நாடு அரசு சமச்சீர்/மெட்ரிக் பாடத்திட்டத்தில் படித்தால் தான் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தருகின்றது. அதனால் தான் 10ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்தில் படித்தாலும் +1, +2 வரும் போது ஸ்டேட் போர்டு கல்விக்கு மாறி விடுகின்றனர்.

             சிபிஎஸ்இ பாட முறையில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாமே தவிர, மதிப்பெண் அதிகமாக எடுக்க முடியாது. பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது நல்ல கல்லூரியில் சீட் கிடைக்கின்றது. அது மட்டுமில்லாமல் மாணவர்கள் படித்து முடிக்கும் வரை அரசு முழு பொறுப்பையும் எடுத்து கொள்கின்றது. தற்போது வந்துள்ள சமச்சீர் கல்வி முறையில் மாணவர்களுக்கு பயனுள்ள நிறைய விஷயங்களை இணைத்துள்ளனர். எனவே சிபிஎஸ்இ கல்வியை படித்தால் மட்டுமே சிறந்து விளங்க முடியும் என்பது தவறான கருத்தாகும்.

              கல்வி எதுவாக இருந்தாலும் சரி..... நாம் படிக்கும் பள்ளியில் நமக்கு அமையும் குருவை பொறுத்து தான், நல்ல மதிப்பெண் எடுப்பதும் எடுக்காததும். ஒரு மாணவனுக்கு நல்ல ஆசிரியர் ஆசான் அமைவது முக்கியமான விஷயமாகும். மாணவர்கள் மனநிலை என்ன? அதை எவ்வாறு கையாளுவது என்று ஆசிரியருக்கு மட்டுமே தெரியும். ஒரு மாணவன் முதல் மதிப்பெண் எடுக்கிறான் என்றால் அதற்கு முழு காரணம் ஆசிரியர்களாக தான் இருப்பார்கள். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரும் சென்டம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வழிநடத்தினாலே போதும் மாணவர்கள் அனைவரும் சென்டம் எடுக்கலாம் என்கின்றனர் பெற்றோர்கள்.

               ஆக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பெரிய பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று எண்ணாமல், குழந்தைகளுக்கு நல்ல அறிவை புகட்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலே போதும் மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive