Best NEET Coaching Centre

GENERAL KNOWLEDGE 1 :பூமியின் தோற்றமும் அமைப்பும்!

பேரண்டவெளியில் உள்ள 100 பில்லியன் நட்சத்திரத் தொகுதிகளுள் (Galaxies) ஒன்றான சுழல் வடிவ பால்வெளி நட்சத்திரத் தொகுதியில் நமது சூரியக் குடும்பம் உள்ளது. சூரியக் குடும்பம் என்பது, சூரியன், எட்டுக் கோள்கள், அவற்றின் துணைக்கோள்கள், பறக்கும் பாறைகள் மற்றும் விண்வெளித் துகள்களை உள்ளடக்கியது. இந்தச் சூரியக் குடும்பத்தில் சூரியன் எனும் 5 பில்லியன் ஆண்டுகள் வயதான நடுவயது நட்சத்திரமே மிகப் பெரிய உறுப்பினர். ஹைட்ரஜன் வாயுவை உட்கரு இணைவு மூலமாக ஹீலியம் வாயுவாக மாற்றி ஆற்றலை வெளியிடும் சூரியனே சூரியக் குடும்பத்தின் ஆற்றல் மூலமாகத் திகழ்கிறது.

கோள்கள் தத்தம் துணைக் கோள்களுடன் தங்கள் அச்சில் தனித்தனியாகச் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன. அவற்றைக் கீழ்க்காணும் இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. சிறிய, அடர்த்தி மிகுந்த, பெருமளவு பாறைகளையும், சிறிதளவு வாயுக்களையும் கொண்ட புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய உள்வட்டக் கோள்கள் (அ) பாறைக் கோள்கள்.

2. அளவில் பெரிய, அடர்த்தி குறைந்த, சிறிதளவு பாறைகளையும், பெருமளவு வாயுக்களையும் கொண்ட வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய வெளிவட்டக் கோள்கள் (அ) வாயுக் கோள்கள்.

பூமியின் தோற்றம்

பூமி மற்றும் பிற கோள்களின் தோற்றம் பற்றி பல அறிவியல் வல்லுநர்கள், பல புனை கொள்கைகளையும் (Hypotheses) கோட்பாடுகளையும் (Theories) வெளியிட்டு உள்ளனர்.

1950-களில் வெளியிடப்பட்ட பெரு வெடிப்புக் கோட்பாடே பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்தக் கோட்பாட்டின்படி, 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு ஒற்றை வெப்பப் பந்திலிருந்துதான் பேரண்டம் உருவானது. அந்த வெப்பப் பந்து ஒரு காஸ்மிக் வெடிப்புக்குள்ளானது. இவ்வெடிப் பிலிருந்துதான் நமது பூமி உட்பட பேரண்டத்தின் அனைத்து பருப் பொருள்களும் ஒரே நேரத்தில், ஒரு கணப்பொழுதில் தோன்றின. மேலும், அதிலிருந்த பல நட்சத்திரத் தொகுதிகள் ஒன்றிடமிருந்து மற்றொன்று விலகி, விலகி விரிவடைந்தன. இவ்வாறு விரிவடைந்த அண்டமும் அதில் முன்னம் இருந்த வெப்பப் பந்தும் விரிவடைந்ததால் குளிரடைந்தன என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது.அறிவியல் அறிஞர்கள் இப்பெருவெடிப்புக் கொள்கையை பிரான்ஸ், சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனிவா நகரை ஒட்டி அமைந்துள்ள உலகின் மிகப்பெரும் பார்ட்டிகிள் பிஸிக்ஸ் சோதனைக் கூடமான CERN பரிசோதனைக் கூடத்தில் சோதனை செய்து வருகிறார்கள்.

இங்குள்ள 27 கிலோமீட்டர் நீளமுள்ள விசேஷ குகை ஒன்றில் புரோட்டானைப் புரோட்டானுடன் மோதவிடும் சோதனைகள் நடைபெறுகின்றன. இந்தக் குகையில் பெருவெடிப்பு நடந்தபோது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கினர். லார்ஜ் ஹெட்ரான் கொலைடர் (Large Hedron Collider) என்ற சாதனத்தின் மூலம் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.

இந்தச் சோதனையிலிருந்து 'ஹிக்ஸ் போஸான்' எனும் துகள் கண்டறியப்பட்டுள்ளது. பிரபஞ்சம் பற்றி நாம் அறியாத பல விஷயங்களை அறிய நமக்குத் தேவையான மிஸ்ஸிங் லிங்க் அல்லது தொடர்புப் பகுதிதான் 'கடவுள் துகள்' எனச் செல்லப் பெயர் சூட்டப்பட்ட இந்த 'ஹிக்ஸ்போஸான்'. லியான் லெடன்மேன் என்ற விஞ்ஞானிதான் இந்தப் பெயரை முதன்முதலில் கூறினார்.

புவியின் அமைவிடம்

கோள வடிவம் கொண்ட பூமி. சூரியனிடம் இருந்து அகலாது அணுகாது தீக்காய்வார் போல, சரியான தொலைவில் அமைந்துள்ள காரணத்தால், உயிரினங்கள் தோன்றி வளர உகந்த வெப்பநிலையைக் கொண்டுள்ளது.

புவியின் வயது

'தொடக்கத்தின் எந்த மிச்சமும் இல்லை; முடிவின் எந்த தோற்றமுமில்லை' எனப் புவியின் தோற்றம் பற்றி அறிய எந்தத் துப்பும் இல்லாதது குறித்து ஜேம்ஸ் ஹட்டன் எனும் அறிஞர் வருந்தினார். இருப்பினும் புவியின் வயது சற்றேறக்குறைய 4.6 பில்லியன் வருடங்களாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

புவியின் உள்ளமைப்பு

புவியின் உள்ளமைப்பு பற்றி அறிய சீஸ்மாலஜி எனப்படும் நிலநடுக்கம் பற்றிய அறிவியல் படிப்பு உதவுகிறது. பாறைகளின் அடர்த்தி, பாறைகள் மற்றும் மேற்பகுதியில் உள்ள எடையினால் (Super incumbent load) ஏற்படும் அழுத்தம், சுரங்கங்களுக்குள் செல்லச் செல்ல அதிகரிக்கும் வெப்பநிலை, எரிமலை வெடிப்புப் பொருட்கள் மற்றும் புவி அதிர்வு அலைகள் போன்றவற்றின் மூலம், புவியின் உள்ளடுக்குகளின் தன்மையை அறிவியல் வல்லுநர்கள் அறிந்தனர். புவியின் உட்பகுதியானது வேதிப்பொருட்களின் கட்டமைப்பு மற்றும் பண்புகளின் அடிப்படையில் மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்படுகின்றது. அவை:

i. புவிமேலோடு (Crust)

ii. கவசம் (Mantle)

iii. கருவம் (Core)

சூயஸ் என்ற அறிஞர் புவி உள்ளடுக்குகளின் வேதிக்கூட்டுப் பொருள் அமைவினைப் பொருத்து, அவற்றை சியால் (SIAL), சிமா (SIMA) நைஃப் (NIFE)என வகைப்படுத்தி உள்ளார்.புவிமேலோடு

நிலக்கோளத்தின் மேற்பகுதி மேலோடு (Crust) எனப்படுகின்றது. இந்த மேலோடு குறைந்த அடர்த்தி உடைய படிவுப் பாறைகளால் ஆனது. மிக மெல்லிய அடுக்கான இது, சிலிகேட், மைக்கா, ஃபெல்ஸ்பார் போன்ற வேதிப்பொருட்களைக் கொண்ட பாறைகளால் ஆனது. புவி மேலோடு பெரிதும் எரிமலைச் செயல்களால் உருவானதாகும். இது சிலிக்கா (Si) மற்றும் அலுமினியம் (Al) ஆகியவற்றை மிகுதியாகக் கொண்ட சியால் (SIAL) எனும் மேல் அடுக்கினையும், சிலிக்கா (Si) மற்றும் மக்னீசியம் (Ma) ஆகியவற்றை மிகுதியாகக் கொண்ட சிமா (SIMA) எனும் கீழ் அடுக்கினையும் உள்ளடக்கியது. இவற்றை முறையே, கண்ட மேலோடு, கடலடி மேலோடு எனவும் அழைக்கலாம்.

கண்டங்களின் மேலோடு சியால் என அழைக்கப்படுகிறது. இவ்வடுக்கு கிரானைட் அடுக்குகளால் உருவானது ஆகும்.

கடலடி மேலோடு சிமா என அழைக்கப்படுகிறது. பசால்ட் அடுக்குகளால் உருவானது. இவ்வடுக்கே எரிமலை வெடிக்கும் போது வெளிப்படும் மேக்மா மற்றும் லாவா குழம்புகளின் ஆதாரமாக விளங்குகிறது என சூயஸ் கூறுகிறார். இந்தக் கடலடி மேலோடு, கண்ட அடுக்கைவிட, தடிமன் குறைந்ததாகும். இதன் ஆழம் 0-10 கி.மீ ஆகும். பெருங்கடல் ஓட்டில் உள்ள பசால்ட் பாறைகள், கண்ட ஓட்டில் உள்ள கிரானைட் பாறைகளை விட, அதிக அடர்த்தியாகவும் கனமாகவும் உள்ளன. ஆகையால், லேசாக உள்ள கண்ட மேலோடு அதிக அடர்த்தி கொண்ட பெருங்கடல் மேலோட்டின் மீது மிதந்த வண்ணம் உள்ளது.

கவசம்

கவசம், புவிமேலோட்டுக்கும் கருவத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தக் கவசம் ஏறக்குறைய 2,900 கி.மீ. தடிமன் உடையது. பூமியின் எடையில் 83 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதன் சராசரி அடர்த்தி 4.6 கிராம் செ.மீ ஆகும். இது பல தட்டுக்களைக் கொண்டுள்ளது. இவ்வடுக்கு பெரிடோடைட் (Peridotite) எனும் கனிமத்தால் உருவானது ஆகும். இவ்வடுக்கின் மேல்பகுதி அஸ்தினோஸ்பியர் (Asthenosphere) என அழைக்கப்படுகிறது. இது 100 கி.மீ தடிமன் உடையது.

அஸ்தினோஸ்பியர் மிருதுவான மற்றும் குறைந்த வலிமையை உடைய அடுக்காகும். இதற்குக் கீழ் அமைந்துள்ள கீழ்க் கவசப்பகுதி 2,900 கி.மீ ஆழம் வரை பரவி உள்ளது. இந்தப் பகுதி மேக்மா (Magma) எனும் குழம்பு நிலையையும் நெகிழும் தன்மையையும் கொண்டுள்ளது. இந்தப் பகுதி மிகுந்த வெப்பத்தையும், உயர் அழுத்தத்தையும் கொண்டுள்ளது.

கருவம்

பூமியின் உள்மைய அடுக்கான கருவம் பேரிஸ்பியர் (Barysphere) எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வடுக்கில் நிக்கல் (Ni) மற்றும் இரும்பு (Fe) ஆகியன இருப்பதன் காரணமாக நைஃப் (NIFE) எனவும் கூறப்படுகிறது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive