Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அறிவியல்:இயற்கையிலிருந்து எடுத்த நகல்கள்

        அறிவியலாரில் இரண்டு வகையுண்டு. இயற்கையில் இருக்குமரகசியங்களை வெளிப்படுத்திய நியூட்டன் போன்றவர்கள்கண்டுபிடிப்பாளர்கள். புதிய சாதனங்களை உருவாக்கிய எடிசன், கிரஹாமபெல் போன்றவர்கள் புதுப்புனைவர்கள். பல சமயங்களில் இந்த இரு வகையினரைப் பிரித்துக் காட்டும் கோடு மங்கி விடுகிறது. ஏனெனில் பல புதுப்புனைவுகள் முன்னரே விலங்குகளிலும் தாவரங்களிலும் காணப்படும் சிறப்பு அமைப்புகளை ஒத்தவையாகவே உள்ளன.
 
         கண்ணின் அமைப்பை ஒளிப்படக் கருவிகளும், வெளிக்காது மற்றும் காதின்  உட்புறத்திலுள்ள செவிப்பறையின் அமைப்பை ஒலிபெருக்கிகளும் பெரிதும்  ஒத்திருப்பதைக் காண்கிறபோது அவை அசல் படைப்புகளா அல்லது இயற்கையைக் காப்பியடித்தவையா என்ற சந்தேகம் எழும்.சிட்டுக்குருவியின் அலகின் உட்பகுதியைப் பார்த்த ஒரு விவசாயி நெல்லின் உமியை அரிசி உடையாமல் நீக்கும்படியான யந்திர உறுப்பை வடிவமைத்தார். கெட்டிலின் மூடியை நீராவி தூக்குவதைப் பார்த்த ஜேம்ஸ் வாட்டுக்கு நீராவியின் அழுத்தத்தைக் கொண்டு இயங்கும் ஓர் எந்திரத்தை உருவாக்கும் திட்டம் மனதில் தோன்றியது.
 
ஸ்விட்சர்லாந்தில் ஜார்ஜ் த மெஸ்ட்ரல் என்பவர் தன் நாயுடன் காட்டுக்குள்
உலாவப் போனபோது சில புதர்ச் செடிகளின் விதைப் பைகள் அவருடைய காற்சட்டையிலும் நாயின் மயிரடர்ந்த உடலிலும் ஒட்டிக்கொண்டதைப் பார்த்தார். எவ்வளவு உதறினாலும் அவை கீழே உதிரவில்லை. அவர் அவற்றை வீட்டுக்கு எடுத்துப் போய் ஓர் உருப்பெருக்கிக் கண்ணாடி மூலம் பரிசோதித்தார். அவற்றின் மேற்பரப்பில் ஏராளமான நுண்ணிய கொக்கிகள் தென்பட்டன. அந்தக் கொக்கிகள் உடையிழைகளிலும் நாயின் மயிரிலும் சிக்கிக் கொள்ளுமாறு அமைந்திருந்தன. தாவரம் தன்னிடத்திலிருந்து வெகுதூரம் சென்று விதைகள் தரையில விழுமாறு செய்ய தன் விதைப் பைகளில் கொக்கிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. நம் ஊரிலும் நெருஞ்சி, நாயுருவி போன்ற செடிகளின் விதைகள் இவ்வாறு நம் உடைகளிலும் விலங்குகளின் உடலிலும் ஒட்டிக்கொண்டு வேறிடங்களில் சென்று விழும். விதைகளை பரவலாக விநியோகம் செய்ய தாவரங்கள் பலவிதமான உத்திகளை கையாளுகின்றன. எருக்கஞ் செடியின் காய் முற்றியவுடன் வெடித்துசசிதறும் விதைகளின் பஞ்சு போன்ற இழைகள், விதைகள் காற்றில் பறந்து தொலைவில் சென்று விழ உதவுகின்றன. கடற்கரையில் வளரும் ராவண மீசை என்ற செடியின் விதைகளின் நீட்சிகள ஒரு பந்தைப் போல விரிந்து காற்றின் திசையில் ஓடச் செய்யும்.கடற்கரைகளிலுள்ள தென்னை மரங்களிலிருந்து விழுந்த மட்டைத் தேங்காய்கள்
கடலில் மிதந்து சென்று உலகு முழுவதும் பரவியிருக்கின்றன. மெஸ்ட்ரல் ஒரு படலத்தில் கொக்கிகளையும் இன்னொரு படலத்தில் வளையங்களையும் அமைத்து இரண்டும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ள வைக்கலாம் என்று திட்டமிட்டார். எட்டு ஆண்டுகள் உழைத்து அவர் "வெல்க்ரோ' என்ற அமைப்பை உருவாக்கினார். அவற்றை லேசாக ஒரு திசையில் தடவினால் ஒட்டிக் கொள்வதோடு எதிர்த் திசையில் இழுத்து எளிதாகப் பிரிக்கவும் முடிந்தது இன்று பித்தான்களுக்கும் "ஸிப்' இணைப்புகளுக்கும் மாற்றாக வெல்க்ரோ உடைகளிலும், காலணிகளிலும், பயணப் பைகளிலும் விண்வெளி ஓடங்களிலும் இரு பரப்புகளை ஒட்டி வைக்கப பயன்படுத்தப்படுகிறது.
உலகெங்கிலும் ஆய்வர்கள் தாவரங்களிலும் விலங்குகளிலும் தென்படுகிற அசாதாரணமானவையும் சாதுரியமானவையுமான அமைப்புகளைச் சோதித்து, மனிதர்களுக்கு உதவக் கூடிய தன்மைகளைக் கொண்ட நகல்களை உருவாக்க முனைந்திருக்கிறார்கள். உயிரியல் வழிப் பொருள் அறிவியல் என்ற புதியதோர் ஆய்வுக்களமாக வளர்ந்திருக்கிறது. சிலந்தி இழை ஆய்வு அவற்றில் ஒன்று.
சிலந்தியின் இழை சில குறிப்பிட்ட கலப்பு உலோக இழைகளை ஒத்த அடர்த்தியையும் நீட்சி வலுவையும் பெற்றுள்ளது. அதை ஐந்து மடங்கு நீளத்துக்கு இழுத்து நீட்டினாலும் அறுந்து போவதில்லை. சிலந்தியிழையின் கூட்டமைப்புள்ள இழைகளைச் செயற்கையாக உருவாக்கி, குண்டு துளைக்காத கவச உடைகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். அவை கார், விமானம் ஆகியவற்றின் உடல் பரப்புகளைக் கூட உருவாக்க உதவுகின்றன. வீட்டுப் பல்லியின் பாத அமைப்பு இயற்கையின் அற்புதப் படைப்புகளில் ஒன்று. பல்லி எத்தகைய பரப்பிலும் செங்குத்தாக விரைந்து ஏறவும், உட்கூரையில்தலைகீழாக நடக்கவும் அது உதவுகிறது. பல்லியின் பாதத்தை எலக்ட்ரான்நுண்ணோக்கியின் மூலம் பார்த்தால் அதில் லட்சக்கணக்கான, நுண்ணியமயிர்க் கால்கள் தெரியும். அவை பல்லியின் எடையைத் தாங்குமளவுக்குச்சுவரில் ஒட்டிக் கொண்டாலும், பல்லி தன் கால்களை எளிதாக எடுத்து வைக்கவும் முடியும். தற்போது ஆய்வர்கள், விண்வெளி வீரர்கள், மலையேறிகள் போன்றவர்களின்காலணிகளில் பல்லியின் பாதத்தைப் போன்ற அமைப்புகளைப் பொருத்தமுயற்சி செய்து வருகிறார்கள். கையுறைகளில் அவற்றைப் பொருத்தினாலஸ்பைடர்மேன் போல சுவர்களில் தொற்றிக் கொண்டு ஏறி விடலாம். இவ்விஷயங்களில் முக்கியமான அம்சம் என்னவெனில், தனிப்பட்ட சிலந்தியிழையும் பல்லியின் பாத இழையும் வலுவற்று எளிதில் உடையும் தன்மைகள் கொண்டவையாயுள்ளன. ஆனால் அவை ஆயிரக்கணக்கில்அணிவகுத்திருக்கிறபோது அவற்றுக்கு அசாத்திய வலுவும் உறுதியும்
ஸ்திரத் தன்மையும் உண்டாகி விடுகிறது. பட்டுப்பூச்சிக் கூட்டின்இழையிலும் இதே விளைவு ஏற்படுகிறது

நாம் சிறுவயதில் படித்த ஒரு கதையில் ஒரு தகப்பன் தன் மகன்களுக்கு ஒற்றுமையின் பலத்தை விளக்குவதற்காக ஒரு விறகுக்கட்டை அவிழ்த்து ஒவ்வொரு விறகாக உடைக்கச் சொல்லுவார். அவர்கள்எளிதாக உடைத்து விடுவார்கள். பிறகு விறகுகளை ஒன்றாக சேர்த்து கட்டி அந்த விறகுக் கட்டை உடைக்கச் சொல்லுவார். அவர்களால்அது முடியாது. அதேபோல தனித்தனியாக வலுவற்ற துகள்கள் ஓர் ஒழுங்கான அமைப்பில்சேர்ந்து ஒரு பொருளாக உருப்பெறும்போது அந்தப் பொருள் மிகுந்த வலிமையுடையதாகி விடுகிறது. வைரம் போன்ற தாதுக்களிலும் கரிமப்-படிகங்களிலும் இந்த விளைவைக் காணலாம். கனடாவிலுள்ள மாக் கில் பல்கலைக்கழக ஆய்வர்கள் பற்களின் மேற்பரப்பிலுள்ளகடினமான எனாமலையும், சிப்பி ஓடுகளின் உட்பரப்பிலுள்ள படலத்தையும்
ஆராய்ந்து அவற்றின் உறுதித் தன்மைக்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.

            பல்லின் எனாமலில் ஏராளமான தண்டுகள் பல்லின் புறப்பரப்புக்கு லம்பமாகப் புரதங்களால் பிணைத்து வைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக உடலிலேயே உச்சபட்சமான உறுதியுள்ளதாக எனாமல் அமைந்திருக்கிறது. அதேபோலச் சிப்பி ஓடுகளின் உட்பரப்பில் நுண்ணிய கால்சியச் சேர் வில்லைகள் புரதங்களாலும் பாலி சாக்கரைடுகளாலும்ஒன்றோடொன்று ஒட்டி வைக்கப்பட்டுள்ளன. எனாமலிலோ, சிப்பி உட்பரப்பிலோ அழுத்த விசைகள் செலுத்தப்பட்டால் அந்தப் புரதப் பசைகள் நெகிழ்ந்து கொடுத்து அந்த விசைகளைப் பரவலாக்கி நீர்த்துப் போகச் செய்கின்றன. அதன்மூலம் எனாமலும் சிப்பி ஓடும்உடையாமல் தப்பிக்கின்றன. மாக் கில் பல்கலைக்கழக ஆய்வர்கள் நுண்ணிய தண்டுகள் அல்ல செதில்களுடனகூடிய கண்ணாடிகளை உருவாக்கியுள்ளனர். அவை அடிபட்டால்உடைந்து சிதறாது. அவற்றைச் சற்று வளைத்து நிமிர்த்தவும் முடியும்.அத்தகைய கண்ணாடியாலான ஒரு பாத்திரம் கை தவறிக் கீழே விழுந்தால் கூட உடையாமல் லேசான நசுங்கலுடன் தப்பித்து விடும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive