Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமூக நீதியும் பள்ளி ஆசிரியர்களும்!

            (முன்பெல்லாம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் கல்வி நிர்வாகத் துறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது, ஆசிரியர் பணிக்கே சம்பந்தம் இல்லாதவர்கள், நேரடியாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி டி.இ.ஓ., சி.இ.ஓ., பதவிக்கு வந்துவிடுகின்றனர். இவர்களுக்கு பள்ளி கல்வியின் பிரச்னைகள் ஏதும் தெரிவதில்லை. ஏனெனில் இவர்கள் தான் ஆசிரியர்களாகவே இருந்ததில்லையே!)

               பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது கல்வி என்பதை, இன்று அனைவருமே ஏற்றுக்கொள்வர். அறிவு சார் தொழில்கள்தான் இன்றைய இன்றியமையாத தேவை. உற்பத்தி துறை, சேவை துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு கல்வி மிக மிக அவசியம்.
  
             நன்கு படித்து, நல்ல புத்திக்கூர்மையுடன் விளங்கும் மனிதவளம் தான் இந்தியாவுக்கு தேவை. பலரும், இந்தியாவின் மக்கள் தொகை, அதிலும், 25 வயதுக்குக்கீழ் இருக்கும் இளைஞர்களின் தொகையை பார்த்துவிட்டு, இந்தியா உலகையே ஆளப்போகிறது என்று நினைக்கின்றனர். அப்படி மேடையிலேயே பேசவும் செய்கின்றனர். ஆனால், இது உண்மையல்ல. இந்த இளைஞர்களுக்கு சரியான கல்வியும், திறனும் கொடுக்கப்படவில்லை என்றால், இவர்கள் இந்தியாவின் சொத்தாக இருக்க மாட்டார்கள், சுமையாக தான் இருப்பர். சுமையை, சொத்தாக மாற்றக்கூடிய திறன், பள்ளி ஆசிரியர்களிடம் மட்டும் தான் உள்ளது.

தமிழக பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் வெறும், 31 சதவீதம் பேருக்குத்தான் எழுத்துக்கூட்டி படிக்க தெரியும் என்ற, புள்ளிவிவரத்தை நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். அடிப்படை பயிற்சிகளான, எழுத்துக்கூட்டி படிப்பது, எளிமையான கணக்குகளை போடுவது போன்றவற்றைக் கூட மாணவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பது ஏன்? இந்த இடத்தில், ஒரே ஒரு குற்றவாளியை மட்டும்தான் இனம் காண முடியும். ஆசிரியர்கள்.

கடந்த 20 ஆண்டு காலத்தில், தமிழக ஆசிரியர்களின் தரம் தாறுமாறாக இறங்கி உள்ளது. இதற்கு பல காரணங்களை சொல்லலாம். அதில் முக்கியமானது, யாரெல்லாம் ஆசிரியராக போகின்றனர் என்பது தான். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மிக சிலவே இருந்தன. நுழைவு தேர்வு வைத்து தான், அதில் சேருபவர்கள், தேர்ந்தெடுக்கப் பட்டனர். அப்படி சேர்க்கப்பட்டவர்களுக்கு போதிய அளவு பயிற்சியும் கொடுக்கப்பட்டது. அதன்பின், எப்படி பொறியியல் கல்லூரிகள் கட்டுப்பாடற்று திறக்கப்பட்டனவோ, அதேபோல, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் தெருவுக்குத் தெரு முளைக்கத் துவங்கின. தனியார் பொறியியல் கல்லூரிகளில், ஆசிரியர் களின் தரம் மோசமாக இருந்தாலும், தினமும் வகுப்புகள் நடக்கும். ஆனால், பெரும்பாலான தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் முழு மோசடிகள் மட்டுமே. இந்த கல்லூரிகளில் சேர்ந்து, தினமும் வகுப்பு களுக்கு நீங்கள் போகவே வேண்டாம். காசு கொடுத்துவிட்டால் போதும், நீங்கள் வீட்டில் இருந்தபடியே, ஓராண்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றதற்கான டிகிரியை வாங்கிவிடலாம்.

சமீபத்தில், ஒரு முதன்மை கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். 'டெட்' பரீட்சை (ஆசிரியர் தகுதி தேர்வு) பற்றி பேச்சு வந்தது. 'டெட்' எழுதி, 'பாஸ்' செய்ய முடியாத நிலையில் தான், இன்றைய ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்றேன். அதற்கு, 'அது கிடக்கட்டும், எழுதி 'பாஸ்'ஆன ஆசிரியர்களின் பட்ட சான்றிதழை பாருங்கள். ஆளுக்கு ஏழெட்டு 'அரியர்ஸ்' வைத்து தான், பட்ட படிப்பை முடித்து உள்ளனர்' என்றார் அவர். இது தான் நம் ஆசிரியர்களின் இன்றைய நிலை. எல்லா படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு ஒழிக்கப்பட்டு, சமூக நீதி காக்கப்பட்டதல்லவா? அதன் விளைவாக, ஆசிரியர் பயிற்சி கல்விக்கான நுழைவு தேர்வும் ஒழிக்கப்பட்டு, இன்று, முற்றிலும் தகுதியே இல்லாதவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக வருகின்றனர். ஆசிரியர் தொழில் மீது, பக்தியும், காதலும் கொண்டு வருபவர்கள் ஒரு சிலரும் கூட, இப்படி நடக்கும் ஊழலை தாங்க முடியாமல் மனம் வெறுத்து போகின்றனர்.

ஒரு சில ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் தினமும் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால், அங்கே படிக்க வருபவர்களோ, கல்வி திறன் மிகவும் குறைந்தவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் நன்கு படிப்பவர்கள் பலரும், பொறியியல், மருத்துவம், அறிவியல், சட்டம், 'பிசினஸ்' என்று, பணமும், மதிப்பும் அதிகம் உள்ள துறைகளுக்கு சென்று விடுகின்றனர். பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு, நான்கு வார்த்தை ஒழுங்காக எழுத தெரிவதில்லை. அவர்கள் தங்களுடைய 'மாடல்'களை எல்லாம், கடையில் காசுக்கு வாங்கி சமர்ப்பிக்கின்றனர். அவர்களுடைய பி.எட்., எம்எட்., பிராஜெக்ட் ரிப்போர்ட்டுகளையும், யாரிடமோ காசு கொடுத்து, எழுதி வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள் படிக்கும் நாட்களில் தத்தம் துறையின் அடிப்படை நுணுக்கங்களை ஒருபோதும் தெரிந்துகொள்வதில்லை. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் யாருக்குமே புத்தகம் வாசிக்கும் பழக்கமே இல்லை. இவர்களை பொறுத்தமட்டில், ஆசிரியர் வேலை என்பது, பிழைப்புக்கு ஒரு வழி. அது அவர்கள் ஆத்மார்த்தமாக செய்யும், ஒரு மதிப்புமிக்க வேலை அல்ல. இது இப்படி என்றால், கல்வி துறையை நிர்வாகம் செய்வதிலும் பிரச்னைகள் உள்ளன. முன்பெல்லாம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் கல்வி நிர்வாகத் துறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது, ஆசிரியர் பணிக்கே சம்பந்தம் இல்லாதவர்கள், நேரடியாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி டி.இ.ஓ., சி.இ.ஓ., பதவிக்கு வந்துவிடுகின்றனர். இவர்களுக்கு பள்ளி கல்வியின் பிரச்னைகள் ஏதும் தெரிவதில்லை. ஏனெனில் இவர்கள் தான் ஆசிரியர்களாகவே இருந்ததில்லையே! ஆக, இப்படி தயாரிக்கப்படும், நிர்வகிக்கப் படும் ஆசிரியர்கள் தான், உங்கள் பிள்ளைகளுக்கான பாட திட்டத்தை தயாரிக்கின்றனர். இவர்கள் தான் பாட புத்தகங்களை எழுதுகின்றனர். இவர்கள் தான் வகுப்பறைகளில் பாடங்களை சொல்லி தருகின்றனர். இவர்கள் தான் 'சிலபஸை' திடீரென மாற்றுகின்றனர். நாளைக்கு 10ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதையும், முடிவு செய்யப் போகின்றனர். பள்ளி பொது தேர்வுகளுக்கான வினாத்தாளில், ஏன் தவறுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன? ஏன் தரமற்ற பாட புத்தகங்கள் எழுதப்படுகின்றன? யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்களை வைத்துக்கொண்டு, உலகின் வல்லரசாக நம்மால் ஆக முடியுமா? நம் பிள்ளைகள் தான் திறமைசாலிகள் ஆவார்களா? சிந்தியுங்கள்.

பத்ரி சேஷாத்ரி, நிறுவனர், கிழக்கு பதிப்பகம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive