Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக் கல்விக் கட்டணம்... திட்டமிட்டால் திண்டாட்டம் இல்லை!

     கல்விக் கட்டணம் என்பது இன்று குடும்ப வருமானத்தில்  கணிசமான பகுதியை விழுங்கும்  விஷயமாக மாறிவருகிறது. தவிர, முன்பெல்லாம் பள்ளி நிர்வாகங்களே மே மாதத்தில்தான் அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை வசூலிக்கும். ஆனால், தற்போது ஏப்ரல் மாதத்திலேயே அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியிருக்கின்றன. பெற்றோர்களும் கடன் வாங்கியாவது தங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டுகின்றனர். பிற்பாடு வட்டியோடு கடனைக் கட்ட முடியாமல் திண்டாடுகின்றனர்.
ஆனால், அடுத்த ஆண்டு உங்கள் குழந்தைக்குக் கட்டவேண்டிய கல்விக் கட்டணத்துக்கான பணத்தை இப்போதிருந்தே சேமிக்கத் தொடங்கினால், கலவரப்படாமல் கச்சிதமாகக் கல்விக் கட்டணத்தைக் கட்டி முடிக்கலாம் என்கிறார் வெல்த் ட்ரைட்ஸ் ஃபைனான்ஷியல் பிளானர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், பதிவுபெற்ற நிதி ஆலோசகருமான அபுபக்கர் சித்திக்.

''இன்றைக்கு பிரீகேஜி படிக்கும் குழந்தைக்கான பள்ளி கட்டணமே 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் ஆகிவிடுகிறது. வகுப்பு மாற மாற இந்தக் கட்டணம் உயருமே தவிர குறைந்தபாடில்லை. ஒரே ஒரு குழந்தை இருப்பவர் தனது ஆண்டு வருமானத்தில் 10 சதவிகிதத்தை செலவழிக்க வேண்டியிருக்கிறது.

தவிர்க்க முடியாத இந்தச் செலவுக்கான பணத்தை சிரமப்படாமல் சேமிக்க, சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் உண்டு. இந்தச் சேமிப்பைத் தொடங்கும் போது வெறும் கல்விக் கட்டணத்துக்கான பணத்தை மட்டும்  சேமிக்காமல் அதனோடு தொடர்புடைய மற்ற கட்டணங்களுக்கான பணத்தையும் சேமிப்பது நல்லது. உதாரணமாக, ஓர் ஆண்டுக்கு ஒரு குழந்தைக்கான கல்விக் கட்டணம் ரூ.45,000 ஆகவும், வாகனக் கட்டணம், தேர்வுக் கட்டணம், பாடபுத்தகக் கட்டணம் எனப் பல்வேறு கட்டணங்கள் ரூ.15,000 ஆகவும் உள்ளது எனில், உங்கள் சேமிப்பை ரூ.60,000 என்று தீர்மானித்து, மாதம் ரூ.4,500 முதல் 5,000 வரை சேமிக்கலாம்.
எந்தமாதிரியான திட்டங்கள்?
இந்தச் சேமிப்புக்காக நீங்கள் திட்டமிடும்போது சீட்டு நிறுவனங்கள், அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. குழந்தைகளின் கல்விக் கட்டணங்களுக்கு சிறந்த முதலீடாக இருப்பது ரெக்கரிங் டெபாசிட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டின் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் மற்றும் லிக்விட் ஃபண்டுகளே.
ரெக்கரிங் டெபாசிட்களைப் பொறுத்தவரை, வங்கிகள், தபால் நிலையங்களில் முதலீடு செய்வது சிறந்தது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு  எஸ்ஐபி முறையில் டெப்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. மேலும், குறுகிய கால மியூச்சுவல் ஃபண்டுகளான லிக்விட் ஃபண்ட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்வது மிகவும் சிறந்தது. இதற்கு வரிச் சலுகையும் உண்டு. இவற்றை நீங்கள் வங்கிக்குச் சென்றோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு சென்றோ கட்டவேண்டிய அவசியமில்லை. இ.சி.எஸ் மூலம் எளிதாகக் கட்டலாம் அல்லது உங்கள் செல்போனிலிருந்தே கட்டவேண்டிய தொகையை எஸ்.எம்.எஸ் வழியாகக்கூடச் செலுத்தலாம்.
இந்தத் திட்டங்களில் நீங்கள் ஒரேநாளில்கூட உங்கள் முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெற முடியும். மேலும், இதில் முதலீடு செய்யும்போது உங்கள் தேவை என்னவோ, அதைவிட 10 - 15% அதிகம்  சேமிப்பது அவசியம். ஏனெனில், இன்று இருக்கும் கல்விக் கட்டணமே அடுத்த ஆண்டும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு தவணைகளில் கட்ட நேரிடும்போது இந்தமாதிரியான திட்டங்களில் முதலீடு செய்வதே நல்லது. ஏனெனில், இதில்தான் வேண்டியபோது உங்கள் முதலீட்டை திரும்ப எடுத்துக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாதமும் பணம் சேர்க்க முடியாதவர்கள், போனஸ் அல்லது வியாபாரத்தில் லாபம் என மொத்தமாக ஒருதொகை வரும்போது, அதை குழந்தைகளின் கல்விச் செலவுக்காக எடுத்துவைத்துவிடுவது நல்லது'' என்றார் அபுபக்கர். கல்விக் கட்டணத்தை இனியாவது திட்டமிட்டு, திண்டாட்டத்தைத் தவிருங்கள்!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive