NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவ நுழைவுத் தேர்வு: தவறான வழியில் தமிழகம் பயணிக்கக் கூடாது! ராமதாஸ்

       மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் தவறான வழியில் தமிழகம் பயணிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான மத்தியஅரசின் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET)குறித்த மாணவர்களின் ஐயங்களும், குழப்பங்களும் இன்னும் தீரவில்லை. இக்குழப்பங்களைத்  தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நிலவும் குழப்பத்தை மேலும் அதிகரித்து வருகிறது.


மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுக்கவும், அடிப்படைத் தகுதி இல்லாத மாணவர்கள்  மருத்துவப் படிப்பில் சேருவதைத் தடுக்கவும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த 2010-ஆம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகம் செய்தது. அதன்பின் பல்வேறு  நிலைமாற்றங்களுக்குப் பிறகு 2016-17 ஆம் ஆண்டு முதல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு மட்டும் இத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்தின் உதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஆண்டு மட்டும் இத்தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. வரும் ஆண்டு முதல் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு இவ்வாறு இருந்தாலும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பது தான் உண்மை. நாடு முழுவதும் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட நிலையில், விண்ணப்பித்த மாணவர்களில் கல்லூரி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை வெள்ளையிலும், நன்கொடையை கருப்பிலும் செலுத்தத் தயாராக இருந்தோர் மட்டுமே தகுதியுள்ளவர்களாக கருதப்பட்டு சேர்க்கப்பட்டனர். தகுதியிருந்தும் பணம் இல்லாதவர்களுக்கு தனியார் கல்லூரி கதவுகள் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு நன்கொடையும், கட்டணமும்  அதிகரித்துள்ள நிலையில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயம் ஆக்கப்படுவது தடுக்கப்பட்டு விட்டதாக கூறுவது சிறந்த நகைச்சுவை என்பதைத் தவிர வேறல்ல.

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நடப்பாண்டில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடைமுறைப் படுத்தப்படாததால் சமூக நீதி ஓரளவு காப்பாற்றப்பட்டது. வரும் ஆண்டில் இத்தேர்வு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்பட இருப்பதால் ஏற்படும் முதல் பலி சமூக நீதி தான். மருத்துவ நுழைவுத் தேர்வு மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால்(CBSE) அதன் பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படுவதால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களால் இத்தேர்வில் சாதிக்க  முடியாது. இத்தேர்வுக்காக நடத்தப்படும் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிப்பவர்களுக்கு மட்டுமே வெற்றி சாத்தியமாகும். இதனால் ஏழை மற்றும் ஊரக மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கனவாக மாறிவிடும். இதற்கெல்லாம் மேலாக மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக தகுதியை இத்தேர்வின் மூலம் மட்டும் தீர்மானித்து விட முடியாது. தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு 2007-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்ட பிறகு மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் 5 அணியினர்  படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர். அவர்களின் தகுதி எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தலைசிறந்த மருத்துவர்களாக உருவெடுத்து சேவை செய்கின்றனர்.

கல்வியில் அனைவருக்கும் சமவாய்ப்பை ஏற்படுத்தித் தராமல், அனைவருக்கும் சம தகுதி  என்று பேசுவதில் அர்த்தமில்லை. தகுதி என்ற போர்வையால் அழுத்தி சமூக நீதியை சாகடித்து விடக் கூடாது. அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களையும் சேர்த்து தமிழ்நாட்டில் 6510 இளநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே,  தமிழகம் அதன் அனைத்து சக்தியையும் திரட்டி மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிராக போராடுவது தான் சரியானதாக இருக்கும். ஆனால், அத்துறைக்கு சற்றும் தொடர்பே இல்லாத பள்ளிக்கல்வி அமைச்சர், வரும் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது என்று கூறி வருகிறார். அவர் தமிழக அரசின் பிரதிநிதியாக பேசுகிறாரா அல்லது தனியார் தனிப்பயிற்சி நிலையங்களின் பிரதிநிதியாக பேசுகிறாரா? என்பதே புரியவில்லை. அவரது கருத்து ஒட்டுமொத்த அமைச்சரவையின் கருத்தா? என்பதை உடல் நலம் தேறியுள்ள முதல்வர் தான் விளக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பார்த்தால், வரும் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இத்தேர்வு நீட்டிக்கப்பட வேண்டும் என்பது தான் இன்றைய நிலைமை. அதை முறியடிக்க வேண்டும் என்பது தான் நமது தேவை. அதைவிடுத்து மாணவர்களுக்கு அச்சமூட்டும் செயல்களில் அமைச்சர் ஈடுபடக் கூடாது. மாறாக....
1.   தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்ட வல்லுனரை அமர்த்தி வாதிட வேண்டும்.
2.    தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்களிக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
3.  தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீடிக்கலாம். எனினும், தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை ஒற்றைச்சாளர முறையில் மாநில அரசே நடத்தும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.
4.   தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் போலவே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவப் படிப்புக் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வகை செய்யப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதியாக வலியுறுத்துவதுடன், தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தொடர வேண்டும். இக்கோரிக்கைகளுக்காக அனைத்து தமிழக கட்சிகளும் பாராளுமன்றத்திலும் குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive