NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Postpond Regarding Request - DMK Acting Leader Mr.Stalin

     பெரும் குழப்பம் நிலவுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை தள்ளி வைக்க வேண்டுமென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


வேலையில்லாத் திண்டாடம் இளைஞர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் மூன்று வருடங்களாக “ஆசிரியர் தகுதித் தேர்வை” நடத்தாத அதிமுக அரசு இப்போது அவசர அவசரமாக 2017ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. கட்டாயக் கல்வியுரிமைச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற ஏப்ரல் 29 மற்றும் 30ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கால அட்டவணையை வெளியிட்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஆசிரியர் கல்வி பயின்றவர்கள் எல்லாம் ஏகப்பட்ட குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அச்சடிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பிழை ஏற்பட்டு, அதற்கு பதிலாக இப்போது புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. அரசு பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதற்கு “குற்றவாளி வழிகாட்டும்” அரசின் நிர்வாக குழப்பங்களே காரணம் என்பதை நினைக்கும் போது தமிழக அரசு நிர்வாகம் இன்னும் எந்த அளவிற்கு மோசமாகப் போகிறதோ என்ற கவலையே ஏற்படுகிறது.


சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறும்(Aided) மற்றும் அரசு உதவி பெறாத (non government aided) கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயக் கல்வியுரிமைச் சட்டத்திலிருந்து உச்சநீதிமன்றமே விலக்களித்துள்ள நிலையில், இந்த கல்வி நிறுவனங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்துமா என்பது குறித்து “2017 அறிவிக்கையில்” தெளிவான விளக்கங்கள் ஏதுமில்லை TET லிருந்து பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு பற்றிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என்பது கவலையளிக்கிறது. 

இதற்கு முன்பு எல்லாம் வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஏப்ரல் மாதத்திலேயே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டின் இறுதி நாளான ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து 9 நாட்களுக்குள், அதாவது ஏப்ரல் 29ஆம் தேதியே தேர்வு எழுத வேண்டும் என்பது ஆசிரியர்களாக பணியாற்றும் பலருக்கும் குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும்.
இறுதி வேலைநாளுக்குப் பிறகு தேர்வுத்தாள் திருத்தும் பணியைச் செய்வதா அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதா என்ற குழப்பம் ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அவர்களால் உரிய முறையில் தயாராகி தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆகவே மூன்று வருடங்கள் காலத்தைக் கடத்திவிட்ட அதிமுக அரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றவுடன் அவசர அவசரமாக தேர்வை நடத்துவதில் பல சந்தேகங்கள் எழுகிறது. ஆகவே ஆசிரியர்களுக்கும் இந்த தேர்வு பயன்படும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ. நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கல்வியில் இளநிலை பட்டம் பெற்ற வணிகவியல் பட்டதாரிகள் கூட ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த காலங்களில் கணினிப் பட்டதாரிகளைக் கூட ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த தகுதித் தேர்வை எழுத அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையில் கல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்கும் அனைத்து பட்டதாரிகளும் “ஆசிரியர் தகுதித் தேர்வு” எழுத முடியுமா என்பது தெளிவாக்கப்படவில்லை. ஆகவே கல்வியில் இளநிலை பட்டம் பெற்ற அனைத்து பட்டதாரிகளும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு அதிமுக அரசு அனுமதிப்பதுதான் பட்டதாரிகள் அனைவருக்கும் சம நீதி வழங்கியதாக அமையும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி 5 மதிப்பெண் வழங்கும் அரசு ஆணையையும், இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவர்கள் பெற்ற கல்வியின் அடிப்படையில் வழங்கும் 40 “வெயிட்டேஜ்” மதிப்பெண்களையும் உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தாலும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு நீண்ட காலமாக காத்திருப்போருக்கு நீதி வழங்கும் பொருட்டும், சமூகநீதியின் உண்மையான நோக்கம் வேலை தேடும் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் ஆசிரியர் பணி கிடைப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு கொள்கை முடிவை இந்த அரசு எடுக்க வேண்டும். அதற்காக துணை வேந்தர்கள் உள்ளிட்ட சிறந்த கல்வியாளர்கள் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து அப்படியொரு ஆக்கபூர்வமான கொள்கை முடிவை எடுத்து ஆசிரியர் கல்வி படித்து விட்டு காத்திருக்கும் அனைவரையும் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டிற்கு இரு முறை நடத்துவது, மற்ற மாநிலங்களில் உள்ளது போல் வகுப்பு வாரியாக மதிப்பெண் உச்சவரம்பை குறைப்பது, பழைய பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கும், புதிய பாடதிட்டத்தின்படி படித்தவர்களுக்கும் இடையில் மதிப்பெண்களில் சலுகை வழங்குவது, நீண்ட காலமாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு காத்திருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் முன்னுரிமை அளிப்பது போன்றவற்றையும் ஆராய்ந்து ஆசிரியர் கல்வி படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வரம்புகளை மாற்றி அமைப்பது குறித்து மாநில அரசு தீவிர பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற ஒரே காரணத்திற்காக வீட்டுக்கு அனுப்பிவிடக் கூடாது என்றும், அவர்கள் அந்த தேர்வில் வெற்றி பெற போதிய வாய்ப்புகள் மற்றும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழு விலக்கும் 
வழங்கப்பட வேண்டும்  என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




2 Comments:

  1. Already passed pupils kaga kuda peasunga sir please

    ReplyDelete
  2. Already passed pupils want to need tntet weightage seniority

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive