பிளஸ் 2 தேர்வு - மே 16-இல் முடிவு வெளியாகும்

தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமையுடன் (ஏப்.6) நிறைவடைந்தது.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,900 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. ஏறக்குறைய ஒவ்வொரு பாடத் தேர்வுக்கும் இடையே 5 நாள்கள் விடுமுறையில் தேர்வுகள் நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வில் பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவியரும், தனித் தேர்வர்களாக 44 ஆயிரத்து 686 பேருமாக மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதியுள்ளனர்.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்தன. இந்த நிலையில், 3 நாள்கள் இடைவெளிக்கு பிறகு தொடர்பு ஆங்கிலம், இந்தியப் பண்பாடு, கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. கணினி அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்தனர். 
கணினி அறிவியல்: இது குறித்து சென்னையைச் சேர்ந்த கே.தீபிகா, ஆர்சௌமியா, பி.வினோத்குமார் உள்ளிட்டோர் கூறியது: கணினி அறிவியல் வினாத்தாளில் பகுதி 1-இல் ஒரு மதிப்பெண் வினாக்கள் 75 இடம்பெற்றிருந்தன. அவற்றில் ஓரிரு வினாக்களைத் தவிர மற்ற அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தன. அதேபோன்று பகுதி 2-இல் (இரண்டு மதிப்பெண்) 25 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் ஏதேனும் 20 வினாக்களுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். அதில் தரவுத்தளம் என்றால் என்ன, பக்கங்களின் ஓரங்களை எவ்வாறு ரூலர் கொண்டு மாற்றுவாய் ஆகியவை உள்ளிட்ட பெரும்பாலான வினாக்களுக்கு எளிதாக பதிலளிக்க முடிந்தது. 
பகுதி 3-இல் (5 மதிப்பெண்) பகுதியில் 110-ஆவது வினாவாக இடம்பெற்றிருந்த பின்வரும் சிபிளஸ் பிளஸ் நிரலின் வெளியீட்டினை எழுதுக என்ற கேள்வி மட்டும் சற்று கடினமாக இருந்தது. எனினும் கணினி அறிவியல் வினாத்தாளில் 180 மதிப்பெண்ணுக்கும் மேல் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என்றனர். பிளஸ் 2 வகுப்புக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்வுகளுடன் பொதுத்தேர்வுகள் முழுவதுமாக முடிவடைந்தன. 
எப்படி இருந்தது பொதுத்தேர்வு? ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதம், பொருளியல், உயிரியல் வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாகவும், இயற்பியல், வேதியியல், கணக்குப் பதிவியியல் சற்று கடினமாக இருந்ததாகவும் பிற தேர்வுகள் முற்றிலும் எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். 
ஏப். 11-இல் விடைத்தாள் திருத்தும் பணி: இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி புதன்கிழமை (ஏப்.11) முதல் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் 44 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 40,000-த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 16-ஆம் தேதி வெளியாகவுள்ளன.

Share this

0 Comment to "பிளஸ் 2 தேர்வு - மே 16-இல் முடிவு வெளியாகும் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...