தளி, சூளகிரி, கெலமங்கலம் ஒன்றியத்தில் 102 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த ஒசூர் அசோக் லேலண்ட் நிறுவனம், அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது.
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் பெரு நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் கல்வி மேம்பாட்டுத் திட்டமான சாலையில் இருந்து பள்ளிக்கு என்ற திட்டத்தை ஒசூர் பகுதியில் மேலும் 102 பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விரிவுபடுத்தியுள்ளது.
சூளகிரி,தளி, புழல், மீஞ்சூர், மற்றும் நாமக்கல் பகுதிகளைத் தொடர்ந்து ஒசூர் பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த இந்த திட்டம் உதவும். தளி,சூளகிரி வட்டங்களில் அதிகப் பள்ளிகள் மற்றும் கெலமங்கலம் வட்டத்தில் சில பள்ளிகள் என பல அரசுப் பள்ளிகள் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அதில் பயிலும் மாணவர்கள் பயன் பெறுவார்கள். மிகவும் உள்ளடங்கிய, வசதிகள் அற்ற கிராமங்களில் உள்ள மக்களுக்கும் சமூக நீதியை நிலை நாட்டுவதே அசோக் லேலண்ட் செயல்படுத்தும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். கூடுதலாக தற்போது இந்த பள்ளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம் 255 பள்ளிகளில் பயிலும் சுமார் 25 ஆயிரம் மாணவர்களுக்கு இது பெரும் பயன் அளிக்கும். அவர்களது கல்வித் தரத்தில் இது மிக நல்ல, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் எனப்படும் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி (சிஎஸ்ஆர்)திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.
இந்த விரிவாக்கத்தை கிருஷ்ணகிரிமாவட்டத்தின் முதன்மைக் கல்விஅலுவலர் கே.பி. மகேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார். அதைத் தொடர்ந்து ஒசூர் கல்வி மாவட்டத்தின் மாவட்டக் கல்விஅலுவலர் கே. சுப்பிரமணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இந்த விழாவில் பேசிய சிஎஸ்ஆர் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன், ஒசூர் அசோக் லேலண்ட் நிறுவனம் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் 102 பள்ளிகளைத் தத்தெடுத்து, அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், தேவையான ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்து, மாணவர்களுக்கு தேவையான கல்வியை மேம்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தினால் மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவர் என்றார்.
அசோக் லேலண்ட்நிறுவனத்தின் மனித வள, தகவல் தொடர்பு மற்றும் பெரு நிறுவன சுமூக பொறுப்புணர்வுத் திட்டம் ஆகிய பிரிவுகளின் தலைவர் என்.வி.பாலசந்தர் பேசுகையில், " அசோக் லேலண்ட்நிறுவனம் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அதை வளர்த்து வலுவாக்கி வருகிறது. சாலையில் இருந்து பள்ளிக்கு
என்ற பெயரிலான இந்த கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை பெரு நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக மட்டுமே பார்க்கவில்லை. நம் அனைவருக்கும் தேவையான திட்டம் மற்றும் இந்த சமூகம் பயன்பெறும் திட்டம் ஆகும். கல்வியின் சக்தியை நாங்கள் பெரிய அளவில் நம்புகிறோம். இந்தத் திட்டத்தில் எங்களது பயணம் இப்போது வரை மிக திருப்திகரமாக உள்ளது என்றார்.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இந்தத் திட்டமானது அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பிற நடவடிக்கைகள் என இரண்டிலுமே வளர்ச்சியை ஏற்படுத்த உதவும்.
உள்ளடங்கிய, அணுகுவதற்குச் சிரமமான கிராமப்புறங்களில் இருந்துவரும் குழந்தைகளின் ஆரோக்கியம், சுகாதாரம், உடற்கல்வி, உளவியல் மேம்பாடு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தி, அவற்றை மேம்படுத்துவது இந்தத் திட்டத்தின்
முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...