ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் விருது: இந்திய அளவில் காரைக்கால் மாவட்டம் 3-ஆவது இடம்

ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் என்கிற பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் தூய்மைப் பணிக்காக, இந்திய அளவில் வழங்கப்படும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில், காரைக்கால் மாவட்டம்  3-ஆவது இடத்தைப் பெற்றது. இதற்கான விருதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் பள்ளிகளில் கையாளப்படும் தூய்மைப் பணி, மாணவர்கள் கை கழுவும் விதம், கழிப்பறை பராமரிப்பு உள்ளிட்டவைகளை ஆய்வு  செய்து, ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் விருது வழங்கப்படுகிறது.
 நிகழாண்டு இந்த விருதுக்கு, அதிக பள்ளிகள் தேர்வான நிலையில், அதில் காரைக்கால்  பள்ளி 3-ஆம் இடத்தைப் பிடித்தது.  புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவனுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இதற்கான விருதை வழங்கினார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மை முக்கியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு, சோப்பு பயன்பாட்டுடன் மாணவர்கள் கை கழுவும் முறை, பள்ளிகளில் தூய்மை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் விருது வழங்கப்படுகிறது.  நாடு முழுவதும் இந்த விருது பெறுவதற்காக 6 லட்சம் பள்ளிகள் விண்ணப்பித்திருந்தன. உரிய குழுவினரால் பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 54 பள்ளிகள் நாடு முழுவதுமிருந்து விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன. இதில் 7 பள்ளிகள் புதுச்சேரி மாநிலத்திலிருந்து தேர்வாகின. மாவட்ட அளவில் புதுச்சேரிக்கு முதல் பரிசும், ஆந்திர மாநிலம் திருக்காகுளம் மாவட்டம் 2-ஆவது பரிசும், காரைக்கால் மாவட்டத்தில் அகழங்கண்ணு அரசு தொடக்கப் பள்ளி, கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப் பள்ளி ஆகிய 2 பள்ளிகள் தேர்வானதால் 3-ஆவது பரிசும் கிடைத்தது.
நாட்டிலேயே புதுச்சேரிக்கும், காரைக்காலுக்கும் பள்ளிகளில் தூய்மை பராமரிப்பதில் சிறப்பிடம் கிடைத்தது பெருமைக்குரியது. இந்த பெருமைகள் பள்ளி நிர்வாகத்தினருக்கும், மாணவர்களுக்குமே உரித்தாகக்கூடியது என்றார் ஆட்சியர்

Share this

0 Comment to "ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் விருது: இந்திய அளவில் காரைக்கால் மாவட்டம் 3-ஆவது இடம் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...