நாட்கள் : 1 & 2 செப்டம்பர்
வருடா வருடம் A3 இன் ஆசிரியர் தின விழா திருவிழாவாகத்தான் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொவொரு வருடமும்இயற்கை
சார்ந்த சூழலில் கூடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் சற்று வித்யாசமாக பாரம்பரியமும் பழமையும் வாய்ந்த சோழ மண்டல பிரம்மிப்பின் அடையாளமான தஞ்சாவூரில் கூடுவதென முடிவு செய்யப்பட்டது.
சேலம் , நாமக்கல் , ஈரோடு , திருச்சி , மதுரை , விழுப்புரம் ,திருவண்ணாமலை , தர்மபுரி ,சென்னை , விருதுநகர் ,திருவாரூர் , தஞ்சாவூர் ,காஞ்சிபுரம் , புதுக்கோட்டை , நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் ,ஆசிரியப் பயிற்றுநர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
விழாவின் முதல் நாள் மாலையிலிருந்தே வரத்தொடங்கிய இவர்களை அளவற்ற அன்புடன் வரவேற்று பாதுகாப்புடன் தங்குவதற்கு இரு நாட்களும் தங்குமிட வசதி , உணவு இன்னபிற வசதிகளனைத்தும் செய்திருந்ததோடு ,
அடுத்தடுத்த நாட்களில் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சி நிரலை மிகச் சரியாக வழிநடத்தி பெரும் விழாவாக மாற்றிய அனைத்தும் தஞ்சை மாவட்ட அசத்தும் ஆசிரியரும் இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளருமான குழந்தைசாமி அவர்களையேச் சாரும்.
1. 9.18 நிகழ்ச்சிகள் :
வருகைப் பதிவு
காலை 8.30 மணிக்கு வருகைப் பதிவு ஆரம்பமாக அந்தப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார் சேலம் ஆசிரியர் நாகராஜன்.
வாழ்தல் கலை
ஆசிரியர்கள் வர வர அவர்களுக்கு காலை முதல் 1 மணி நேரம் கலைப் பொருட்கள் பயிற்சி இலக்கியா அவர்களால் விளக்கங்களுடன் செய்து காட்டப்பட்டது. நிமிடங்களில் அழகான ஒரு மேசை அலங்கார விளக்கை செய்தார் நமது பங்கேற்பாளரான நீலகிரி மாவட்ட தலைமை ஆசிரியர் சந்திரசேகர்.
பாடல்
தொடர்ந்து ஆசிரியர் தாமரைச் செல்வன் தனது உணர்ச்சி மேலிடும் பேச்சு & பாடல்களால் ஆசிரியர்களைத் தன்னோடு பயணிக்க வைக்க , நினைவுப் பரிசுகளுக்கான புகைப்படங்கள் புகைப்படக் கலைஞர் அசோக் அவர்களால் எடுக்கப்பட , க்ரீன் டீ இடைவேளையை வரவேற்றது.
பாரதி புத்தகாலயம்
உடன் தஞ்சை பாரதி புத்தகாலயத் தோழர்கள் அரங்கிற்குள் புத்தகங்களைக் காட்சிப் படுத்த ஆசிரியர்கள் ஆர்வமும் விருப்பமும் கொண்டு தங்களுக்கான தேடலில் மூழ்கினர். இந்த புத்தக அரங்கில் உதவியாக தஞ்சை மாவட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரும் நமது பங்கேற்பாளருமாக வந்த தோழர் சந்திரமௌலி பணியாற்றினார் , ஒரு நாள் முழுவதும் இரவு 9 மணி வரை புத்தக அரங்கு செயல்பட்டது.
ஆசிரியர்களது ஆர்வம் வாசிப்பை நோக்கி மாற்றம் பெற்று வருவதாகக் குறிப்பிட்டு மகிழ்ந்தார் அறிவொளி இயக்க செயல்பாட்டாளரான தோழர்சந்திரமெளலி .
A3 - கடந்து வந்த பாதை
தொடர்ந்து A3 இன் கடந்த வந்த பாதை பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இதன் ஒருங்கிணைப்பாளர் உமா பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்தார். பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சிறு அறிமுகம் அவரே தர , A3 உடனான பயணம் தங்கள் பள்ளி மாணவருக்கு எத்தகைய அனுபவத்தைத் தந்தது என தஞ்சை மாவட்டஆசிரியர் ஜெயப்பிரபு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தலைமை ஆசிரியர் விசாலி இருவரும் பகிர்ந்தனர்.
பொம்மை செய்யலாம் வாங்க
அடுத்தபடியாக மண்பாண்டங்கள் செய்யும் கலைஞர்களுடனான ஒரு அமர்வில் நேரிடையான அனுபவம் பெற்றனர் பங்கேற்பாளர்கள் , பெரும்பாலோனோர் மண்ணில் பொருட்களையும் , உருவங்களையும் படைத்து தங்களைக் குழந்தைகள் போல படைப்பாற்றல் திறனை வெளிக்காட்டி மகிழ்ந்தது கண்டு மகிழ்வாக இருந்தது.
சென்னையிலிருந்து வந்திருந்த ஆசிரியர் லதா குதூகலத்துடன் பொம்மைகளைத் தொட்டு மகிழ்ந்தார் , மதுரை மாவட்ட தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தா கட கடவென பல பொம்மைகள் செய்தது , நீலகிரி மாவட்டத்திலிருந்து வந்திருந்த உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திர சேகர் தனது பாடப் பிரிவான வேதியியலில் இருந்து பென்சின் ரிங் செய்தது , சிவா உள்ளிட்ட மற்றவர்கள் பொம்மைகள் செய்து மகிழ்ந்தது என அந்த அமர்வு திறந்த வெளியில் மண்பாண்டம் செய்யும் கலைஞர்களோடு கழிந்தது.
உணவு இடைவேளை
மதிய உணவு இடைவேளை , உணவைப் பற்றிக் கூறியே ஆகவேண்டும் , பல வருஷமாச்சுக்கா பருப்பு உருண்டைக் குழம்பு சாப்பிட்டு , சூப்பர் எனக் கூறிய ஒரு குரலைக் கேட்டேன் , மிக நல்ல ருசி என எல்லோராலும் பாராட்டப்பட்ட உணவு ஏற்பாடும் அதைப் பரிமாறும் புன்னகை உள்ளங்கள் பிளாரன்ஸ் கல்லூரிப் பேராசிரியரும் , சிறப்புக் குழந்தைகளை கவனிக்கும் ஆசிரியர் பிலோமினா மேரி சகோதரியும் என கல்யாண விருந்து போல ஜமாய்த்து விட்டார் குழந்தை சாமி .
நாணயக் கண்காட்சி
அதே நேரம் உணவு பரிமாறும் அரங்கின் மறுபுறம் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாணயங்களின் அணிவரிசை , எத்தனை விதமான நாணயங்கள் ,வெள்ளி இரும்பு செம்பு உலோக நாணயங்கள் , மன்னர் காலம், இந்தியா - வெளி நாட்டு நாணயங்கள் , ரூபாய் நோட்டுகள் ..அப்பப்பா !!!! இதைப் பார்க்கவே அதைப் பற்றி அறிந்து கொள்ளவே ஒரு நாள் போதாது , அவ்வளவு சேகரிப்புகள்
இது பற்றி விரைவில் ஒரு விரிவான புத்தகம் எழுத உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி வரும் தலைமுறையினருக்குத் தர வேண்டும் என இந்த நாணயக் கண்காட்சியின் முழு சேகரிப்புக்குச் சொந்தக்காரரான தோழர் குழந்தைசாமியிடம் A3 சார்பாக ஒரு கோரிக்கையை வைத்தார் மாநில ஒருங்கிணைப்பாளர் உமா .
பாம்புடன் ஒரு அமர்வு
பாம்புகள் உயிர்ச் சூழலின் ஒரு பிரிவு நண்பர்கள் , அவற்றைப் பார்த்து பயப்பட்டு நாம் ஏதோ செய்யப் போக அதனால் அது நம்மைக் கடித்து விடுகிறது. அவர்களைப் பாதுகாப்பதே எனது முதன்மையான பணி என நம்முடன் ஏராளமான செய்திகளைப் படங்கள் வழியாகவும் அனுபவங்கள் வழியாகவும் பகிர்ந்து கொண்டார் முனைவர் சதீஸ்குமார் .
தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் சூழலியல் பாதுகாப்புக்காக பாம்புகளைப் பாதுகாத்து , விவசாயிகளுக்கு உதவி வயல்களில் பாம்புகளை வளர்த்து வருவதாகப் பதிவு செய்தார். நூற்றுக் கணக்கான பாம்புகளை கணினி வழியே திரையில் காட்டி , பெயர்களையும் அவற்றின் இயல்புகளையும் விவரித்ததுடன், அவருடைய தங்கையும் இவரும் உயிரோடு சாரைப் பாம்பை எடுத்து வந்து சுமார் 15 நிமிடங்கள் டெமோ செய்தது அனைவரையும் ஆச்சர்யம் கலந்த பயத்துடன் இருக்க வைத்தது.
கல்வி குறித்த உரையாடல்
நீங்கள் குழந்தைகளாக மாறாவிட்டால்? அவர்களை எப்படிப் புரிந்து கொள்ள முடியும் ? என்பதாக , திருச்சியிலிருந்து நமக்காக வந்த ஊற்றுக் கண் மாத இதழின்ஆசிரியர் ஏராணிமஸ் சுமார் ஒரு மணி நேரம் ஆசிரியர்களை தன் வசப்படுத்தியது சிறப்பாக இருந்தது.
கேள்விகள் கேட்டு , புதிர்களைப் போட்டு ஆசிரியர்களது தேடலை தன் வசப்படுத்தி , கற்பித்தல் என்பது தேடலுக்கான சூழலை அமைத்துக் கொடுப்பதே என்றும் , கற்றல் என்பது தேடுதலில் விளையும் படைப்பாற்றல் என்றும் ஆசிரியர்களை உணர வைத்த அமர்வு இது.
கல்வி என்றால் என்ன என்பதை அவர்கள் வழியாகவே உரையாடலில் தந்து , வாழ்வியலுக்கு தேவையில்லாத பாடங்கள் குழந்தைகளுக்குத் தருவதில் தேவை என்ன என்ற நம் மனதில் உள்ள அதே வினாவை ஒவ்வொரு ஆசிரியரும் வெளிப்படையாக மனம் திறந்தனர் இந்த அமர்வில் .
குழந்தைகளுக்கு எது உரியதோ எது உகந்ததோ , எது உதவுதோ அதையே கற்றிட கை கொடுப்போம் என கலந்துரையாடலின் இறுதியில்
எறோணிமஸ் ஆசிரியர்களிடம் புரிய வைத்தார்.
உள்ளபடியே எங்கள் தேடலுக்கான அமர்வாக இதைப் பார்க்கிறோம் என்றனர் ஆசிரியர்கள்.
பத்திரிகையாளர் சந்திப்பு
கலந்துரையாடல் நிகழ்வு அரங்கிற்குள் நிகழ்ந்து கொண்டு இருக்கும் போதே அரங்கின் வெளியே 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் சில பத்திரிகை ஊடகங்களிலிருந்து ( தமிழன் , வெளிச்சம் , புதிய நம்பிக்கை , மெகா டிவி அவற்றுள் சில ) செய்தி சேகரிக்க வந்திருக்க விழா பற்றிய செய்தியை A3 ஒருங்கிணைப்பாளர் உமாவும் , அதோடு பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் பற்றிய விழிப்புணர்வை இந்த விழாவில் ஏன் ஆசிரியர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் , அரசுப் பள்ளிகளை ஏன் பாதுகாக்க வேண்டும் என , இயக்கத்தின் மாநில செயலாளர் JK அவர்கள் செய்தியாளர்களிடம் பகிர்ந்தார். பத்திரிகை செய்திக்கு ஏற்பாடு செய்திருந்த தஞ்சை விழா ஒருங்கிணைப்பாளர் குழந்தைசாமி உடனிருந்தார்.
பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் - அரசுப் பள்ளிகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் ?
பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்த இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் கல்வியாளருமான JK என அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி இந்த அமர்வின் கருத்தாளரானார்.
இயக்கத்தின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இதய ராஜா , மற்றும் உறுப்பினர்கள் புவனேஸ்வரி , ஜெயப்பிரபு ஆகியோரும்
இணைந்து கொண்டனர்.
பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் உருவாைனதன் அவசியம் என்ன ? முதன் முதலில் ஆரம்பம் எப்போது , இன்று வரை அதன் பணிகள் , ஜூன் 3 அன்று சென்னை லயோலா கல்லூரியில் இதற்கான ஆசிரியர் சந்திப்பு மிக முக்கியமானதாக எவ்வாறு மாறியது , அன்று அங்கு தன்னார்வமாக முன் வந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக இணைந்தவரைத் தொடர்ந்து ,
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும் உருவாகி இன்று எவ்வாறு அங்குள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களது உதவியோடு செயல்பாடுகளை முன்னெடுத்து தொடர்ந்து இயங்குகிறது என்பதை மிக விரிவாகப் பகிர்ந்தார்.
கல்வி உரிமைச் சட்டம் பற்றியும் SMC , கிராம சபைகளின் வலிமை பற்றியும் , முனைவர்வசந்தி தேவியின் மக்களுக்கான அதிகாரம் பற்றியும் அரசுப் பள்ளிகளின் பாதுகாப்பு ஏன் அவசியம் எனவும் மிக விளக்கமாகப் பகிர்ந்தார்.
சென்னை மேன்மைப் பதிப்பகத்திலிருந்து ஏற்கனவே பிரசுரங்கள் லதா ஆசிரியர் உதவியுடன் எடுத்துச் செல்லப்பட்டிருந்ததால் அவை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பேரா மாடசாமி அவர்களுடைய உதவியுடன் பிரசுரங்கள் நக்கீரன் ஆசிரியர் அச்சடித்துத் தந்தது வரை செயலர் விபரம் கூறினார்.
அமர்வின் இறுதியில் கேள்விகள் வரவேற்கப் பட , அந்த 25% அரசுப் பள்ளி மாணவர்கள் அரசாலேயே
தனியார் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவது குறித்து வினா எழும்பியது. விவாதிக்கப்பட்டது.
அமர்வின்இறுதியில் இந்த ஆசிரியர்களை அவரவர் மாவட்ட பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கக் குழுவுடன் இணைந்து செயலாற்றுமாறு JK கேட்டுக் கொண்டு , அவர்களது சம்மதத்தின் பேரில் மாநிலக் கட்செவிக் (What's app) குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
மாறுவேடமும் தனித்திறனும் :
மாலை பள்ளிக் கல்வி பாதுகாப்பு கூட்ட அமர்வு முடிந்த உடன் ஆசிரியர்களுக்கு குலுக்கல் முறையில் அவரவர்க்கு கிடைத்த சீட்டில் எழுதப்பட்டிருந்த பெயரில் மாறுவேடமிடப்பட்டது.
தத்ரூபமாக பலருக்கும் அது பொருந்தியிருந்தது தான் சிறப்பு
விவேகானந்தராக நாகராஜன் , வ.உ.சியாக சரவணன் , குறத்தியாக சாந்தா , ஜான்சி ராணியாக பிந்து , மன்னராக சிவா , வேலு நாச்சியாராக தனம் , வீர சிவாஜியாக விசாலி , இராணுவ அதிகாரியாக லதா , நேருவாக அற்புத ராஜ் , சர்தார் வல்லபாய் படேலாக மூஸா, காந்தியாக உமா என அனைவரும் ஏறக்குறைய 3 மணி நேரம் மாறு வேடத்தில் அவரவர் தனித்திறனை வெளிக்கொணர குறத்தியும் பட்டேலும் அந்த அமர்வை ஒரு நாடகமாக மாற்றி கலகலப்பாக்கிட ,
குழந்தைசாமி அவர்களின் நாடக, நடன மாணவர்கள் அற்புதமான நடனங்களை , பாட்டுகளை அரங்கேற்றிட , அந்த இடம் அரச தர்பார் போலவும் , மாறுவேடத்தில் இருந்த அனைவரும் தர்பாரின் அரசவை முக்கியஸ்தவர் போலவும் கலைஞர் சூழ அந்த இரவு மறக்க முடியாத ஒரு அமர்வானது.
பால் கொழுக்கட்டையும் முருங்கை சூப்பும் தரப்பட்டு மதிய தேநீர் இடைவேளை இனிமைையாக, அருமையான உணவும் , கற்கண்டு பாலும் இரவு முடிந்தது.
காகிதப் பாவைகள்
க்ரியா பதிப்பக ராமகிருஷ்ணன் அவர்கள் தனது மனைவியின் நினைவேந்தலுக்காக
வழங்கிய 30 புத்தகங்களை நேரடியாக ஆசிரியர்களை சந்திக்கும் போது கொடுக்கக் கூறியிருந்தார். அதில் 15 புத்தகங்கள் விழாவில் பங்கேற்றவரின் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் (2-9-18)
பறவைகள் சரணாலயம்
அடுத்த நாள் காலை 6 மணிக்கு எல்லாம் பயணம் வடுவூரை நோக்கியிருக்க , அங்கு இயற்கை சூழலியல் ஆர்வலரும் பறவைகள் ஆய்வில் முனைவருமான தஞ்சை மாவட்ட சுற்றுச் சூழல் அமைப்பின் ஒருங்கிகிணைப்பாளர் முனைவர் இராம் மனோகர்
நம்முடன் இணைந்து கொண்டார் , அவரைப் செய்திகளை JK அவர்களும் கூடுதலாகக் கூறிட , பறவைகள் பற்றி அவர் கூறிய செய்திகள் அனைவருக்கும் தேவையான தாக இருந்தது.
பறவைகளின் வகைகள் - பெயர்கள் , அவற்றின் பயணங்கள் , இனப் பெருக்க முறைகள் ,வாழ்தல் முறை , அவற்றின் ஒலிகள் உள்ளிட்ட பல செய்திகளை நம்மோடு பகிர்ந்தது சிறப்பு.
மேலும் நாகையில் ஒரு அரசுப் பள்ளியைத் தத்தெடுத்து நல்ல நிலையில் கொண்டு வந்திருக்கும் ஒய்வு பெற்ற ஆசிரியரும் இணைந்து கொள்ள அப்பள்ளி பற்றியும் பகிரப்பட்டது.
, அன்று நாகையில் நடக்க இருக்கும் பகபாஇயக்க கூட்டத்தின் பொருட்டு சரணாலய நிகழ்வு முடிந்ததும் JK அவருடன் இணைந்து கொள்ள மற்றவர்
தஞ்சை பெரிய கோவில் நோக்கி பிரயாணம் செய்தோம்.
தஞ்சை பெரிய கோவிலும் _ lNTACH இன் வழிகாட்டலும் :
எல்லோரும் தஞ்சை என்றால் பெரிய கோவிலையும் இராஜராஜனையும் மறக்க முடியாது நினைவில் நிற்கும் என்றாலும் இந்த அனுபவம் மிக வித்யாசமானதாக எங்களுக்கு அமைந்தது.
இந்திய கலாச்சாரம் மற்றும் கலைகளுக்கான அறக்கட்டளை (INTACH) சமயம் சார்பற்ற , இது சமயம் மதம் சார்பற்ற மனித நேயம் சார்ந்த அமைப்பு.
INTACH ..லிருந்து முனைவர் ராமநாதன் எங்களுக்கு அந்த நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில் நிறைய விளக்கங்கள் கொடுத்தார்
அவற்றுள் சில ...
தஞ்சை கோவிலின் முன் நுழை வாயில் ... மராட்டியர் கட்டியது .அகழி அனைத்தும் இணைந்தது சின்னக் கோட்டை எனப்படும். ராஜ ராஜன் வாயில் கட்டி 8 வருடம் கழித்து கட்டப்பட்டது இந்த நுழைவாயில்.உள்ளே இருப்பதே ராஜ ராஜன் கட்டிய நுழைவாயில் .
கோவிலின் சுற்றுச் சுவர் கூழாங்கல் பாறையிலிருந்து வல்லம் என்ற பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்டது
கேரளாந்தகன் திருவாயில் எனப்படுவது ஒரே கல்தூண் 22 அடி உயரங்கள் .
சுவாமிசிலைகள்கொல்லி
மலையிலிருந்தும் ,இந்த வாயில் கற்கள் புதுக்கோட்டையிலிருந்தும் வந்தது,காளி நடனம் , 16 துவாரபாலகர் ஜோடிகள் உள்ளன,6 அடி அஸ்திவாரம் கொண்டதே இக்கோவில்.
150 கோடி மதிப்புடைய ராஜ ராஜன் சிலை , லோகமாதேவி சிலை போலீஸ் காவலுடன் வைக்கப்பட்டுள்ளதுஇந்த சிலையை அரசிடமிருந்து அரச மரியாதை செய்து பெற்று கோவிலுள் வைத்த பணியை இந்த INTACH முனைவர் ராமநாதன் அவரே ஆற்றியுள்ளார். நமக்கு ஆரம்பம் முதல் விளக்கம் தந்து வருகிறார்.
தமிழகத்தில் ஏறத்தாழ 400 ஆண்டுகள் சோழர் ஆட்சி நடைபெற்று இருக்கிறது.
150 கோடி மதிப்புள்ள சிலையில் வேலைப்பாடுகள் அவ்வளவும் அருமை ,
தியாகராஜ சாமி , கமலாம்பாள் ... வருடம் ஒரு முறை தேரில் வரும் சிலை உற்சவ மூர்த்தி, ஆகியவை உள் நடையில் வைக்கப்பட்டுள்ளன.
சோழர்க்கு பிறகு நாயக்கர் , மராட்டியர் என பலரும் ஆட்சிக்கு வந்தனர் ,
வேறு வேறு மாற்றங்கள் செய்தனர்.
UNESCO வந்த பிறகே இதைத் தூய்மை செய்து பல மாற்றங்கள் செய்து வருகிறது.
உலக மக்கள் வியக்கும் வண்ணமாக , இக்கோயில் விளங்கி வருகிறது.கோவில் கட்டுமானப் பணியின் போது மோர் கொண்டு வந்து தந்த பாட்டியின் பெயர் அழகிய கிழவி.
INTACH அமைப்பு கையேடு அனைத்து A3 ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.
முதல் பிரதி முனைவர் ராம நாதன் அவர்கள் A3 மாநில ஒருங்கிணைப்பாளர் உமா அவர்களிடம் வழங்குகியதைத்
தொடர்ந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. பள்ளிகளில் இதற்கான அமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டது.
விருது ஆசிரியர்கள் :
நமது திருவாரூர் மாவட்டம் செல்வசிதம்பரம் , திருச்சி மாவட்டம் குருமூர்த்தி இருவரும் கோவிலில் இணைந்து கொண்டனர் ,
நமது அசத்தும்
அரசுப் பள்ளி ஆசிரிரியர்களான இவர்கள் கடந்த வாரம் காவேரி தொலைக்காட்சியால் ஆசான் விருது அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர் .
நமது கல்வி அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் இவர்கள் இருவருக்கும் தமிழக அரசின் ராதா கிருஷ்ணன் விருது அளிக்க அன்றைய மேடையிலேயே அறிவித்தது சிறப்பு .
மண் வாசம் - நண்டம்பட்டி கிராமம் :
தஞ்சையின் பல பகுதிகள் தொல்லியல் எச்சங்களாக இருக்கின்றன. அப்படி ஒரு கிராமமே நண்டம்பட்டி , அந்த கிராமத்து அழைப்பை ஏற்று நம் ஆசிரியர்களை அங்கு அழைத்துச் செல்கிறார் குழந்தைசாமி .
நுழையும் முன்னரே வரவேற்புத் தோரணம் , வெண் துணியில் A3 ஆசிரியர்களை நண்டம்பட்டி மக்கள் வரவேற்பதாக எழுதி மாவிலை கட்டி ஆரத்தி எடுத்து ,மஞ்சள் குங்குமம் தந்து பொன்னாடைப் போர்த்தி வரவேற்று அங்கிருந்த தேவாலயம் அழைத்துச் சென்றது யாரும் எதிர்பார்க்காத ஒரு வரவேற்பு .அந்த கிராமத்தின் வரலாற்றுச் சிறப்புகளை குழந்தைசாமி அவர்கள் விவரித்து நம்மோடு வந்த சுமதி தலைமை ஆசிரியர் தான் படித்த காலத்தில் பாடிய பாடல் ஒன்றை மிக அழகாகப் பாட , தலைமை ஆசிரியர் மூஸா அவர்களும் ஒரு பாடல் தந்தார்.
அங்கிருந்து ஆசிரியர் பன்நீர் செல்வம் அவரது இல்லத்தில் துவரம் பருப்பு தோல் பிரிய கையுரலில் சுற்ற , அம்மியில் துவையல் அரைத்து , உலக்கை வைத்து நெல் குத்தி அரிசி புடைத்து எடுக்க என யாவரும் பாரம்பரிய முறைகளை ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக மகிழ்வுடன் கொண்டாட , ராகிக் கூழ் உணவு தந்து வழியனுப்ப ,
அங்கிருந்து உரியடிக்கும் நிகழ்வு கிராமத்துப் பண்டிகை போல் ஆரவாரமாக நடக்க , இறுதியில் வயதான பாட்டி மார் முதல் இளம் பெண்கள் வரை கும்மிப்பாட்டு பாடி , கும்மி அடித்து அவர்களுடன்ஆசிரியர்களும் இணைய , திருவிழா கோலம் பூண்ட விருந்தினராக உபசரிக்கப்பட்டனர் .
அங்கிருந்து வெள்ளந்தியான பாசக்கார குழந்தை பெரியோர் அனைவரிடமும் விடை பெற்று ஒரு காட்டு வழியில் அழைத்துச் செல்ல வழி நெடுக உடைந்த ஒடுகள் , புதைபொருட்கள் , சிதிலமடைந்த கற்சிலைகள் என ஆச்சர்யஉண்மைகள் , அவை பற்றிய விளக்கங்களை குழந்தைசாமி , BRT சிவகுமார் , சிவா ஆகியோர் தர ,
இறுதியாக கட வுள் உருவ சிலைகள் மாலை அணிவித்து வணங்கியும் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை , ஏன் இவ்வாறு சிதிலமடைந்து இருக்கின்றது எனவும் அங்கே தொல்லியல் துறையின் பல செய்திகள் பகிரப்பட்டன . நிறைய உடைந்த ஒடு , பொருட்களை தத்தமது மாணவருக்கான கண்டறி பொருளாக ஆசிரியர்கள் சேகரித்து அங்கிருந்து கிளம்பி தமது விழா அரங்கை திரும்ப அடைந்தனர்.
காலை உணவு 11.30 மணியளவிலும்
மதிய உணவு 4.30 மணியளவிலும் நேரம் தவறிற்று பல்வேறு ஆர்வங்களால் .
நிறைவு விழா
அத்தனைக்கும் முத்தாய்ப்பாய் நிறைவு விழா ஆரம்பமானது.
நிகழ்வின் பின்னூட்டமாக மேற்பார்வையாளர் சூசை அவர்களும் , தலைமை ஆசிரியர் சாந்தா அவர்களும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
சிவராமன் மற்ற அமர்வுகளை வழி நடத்தியது போல நிறைவு விழாவையும் வழி நடத்த ,
INTACH நெறியாளர் முனைவர் இராமநாதன் , நமக்கு பேருந்து உதவி யளித்த தனியார் பள்ளியின் தாளாளர் இவர்களுடன் தஞ்சை மாவட்ட உதவி ஆட்சியர் திரு ராஜா ராம் அவர்கள் அனைவரும் நிறைவு விழா மேடையை அலங்கரிக்க வரவேற்று அன்பு பாராட்டினார் விழா ஒருங்கிணைப்பாளர் குழந்தைசாமி .
தாளாளர் வாழ்த்துரை கூறும் போது நானும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன் எனப் பெருமிதத்துடன் பகிர்ந்தது சிறப்பு.
முனைவர் இராமநாதன் தனது வாழ்த்துரையில் காலை முதல் ஆசிரியர்களுடன் இருந்த நேரத்தை எண்ணி மகிழ்ந்ததோடு மாநில ஒருங்கிணைப்பாளர் உமா , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைசாமி இருவரையும் பொன்னாடை போர்த்தி பாராட்டிடச் செய்தது நெகிழ்ச்சி .
தொடர்ந்து கற்றதும் பெற்றதும் என்ற தலைப்பில் தனது அனுபவங்களை உயிரோட்டமாகப் பகிர்ந்து அனைவரது மனதையும் முழுமைையாக ஆட்கொண்டார் துணை ஆட்சியர் .
பேச்சிலும் அணுகு முறையிலும் எளிமை, தான் எவ்வாறு ஒரு ஆசிரியராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து இந்நிலையை எட்டி உயர்ந்திருக்கிறேன் என உணர்வு பூர்வமாக நம்மோடு பகிர்ந்தார். அவரது வாழ்வின் தேடலும் , ஒரு ஆசிரியராகப் பள்ளிக் குழந்தைகளிடம் ஏற்படுத்திய மாற்றங்களும் , பின்தங்கிய தேர்ச்சி பெறாத 3 மாணவர்கள் இவரது அணுகுமுறையால் மருத்துவர்களாக வளர்ந்து சமூக அந்தஸ்து பெற்றிருப்பதோடு இவரது ஊக்கத்தை இந்நாள் வரைக் கொண்டாடுவதும் என எத்தனையோ பகிர்வுகளை அவர் காட்சிப்படுத்திய விதம் என்றென்றும் மனதை விட்டு அகலாது. ஒரு ஆசிரியராக இருந்து ஆட்சியராய் மாறிய இவரது சிறப்புரை போற்றத்தக்கது.
அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துரையும் வழங்கிய ஆட்சியர் ஆசான் விருதுகள் பெற்ற செல்வ சிதம்பரம் , குருமூர்த்தி இவர்களைக் கூடுதலாகப் பாராட்டினார். மேலும் அவர் இந்த அமைப்பு தனியாக ஒரு இணையப் பகுதி துவங்கி பெரும் அமைப்பாக வளர வேண்டும் எனவும் சில ஆலோசனைகளைக் கூறினார்.
நினைவுப்பரிசு வழங்குதல்
வந்திருந்த அத்துணை விருந்தினரும் ஒருங்கே இணைந்து மகிழ்வுடன் நினைவுப் பரிசை அனைவருக்கும் வழங்கிய தருணம் உள்ளபடியே சிறப்பான தருணம்.
சென்னை விஷன் 101லயன்ஸ் தான் இந்த நினைவுப் பரிசினை தர பொருள் செலவு ஏற்றது. இதன் பிரதிநிதியாக அதன் பொருளாளர் உமா (A3ஒருங்கிணைப்பாளர்) வந்திருந்தார்.
இந்த நினைவுப் பரிசு தயாரிப்புப் பணிகள் அனைத்தும் குழந்தைசாமி அவர்களுடைய குழுவினது பாராட்டத்தக்க பணி .
வழங்கிக் கொண்டு இருக்கும் போதே ஆசான் விருது பெற்ற நமது ஆசிரியர் செல்வ சிதம்பரம் , தனது இந்தப் பயணத்தில் A3 க்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும் , ஆசிரியர்களிடம் நேர்மறை மாற்றங்கள் ஏற்பட்டு கல்வியில்
புதிய விளைவுகள் ஏற்பட மிகப் பெரிய காரணம் A3 எனவும் பகிர்ந்து , உமா , குழந்தைசாமி ஆகிய இருவருக்கும் பாராட்டி பொன்னாடை அணிவித்தது எதிர்பாராது மகிழ்விக்க , இது எல்லோருக்குமான உழைப்பு எனக் கூறி ஏற்றுக் கொண்டார் உமா .
வந்திருந்த முதன்மை விருந்தினர் உட்பட இவ் விழாவிற்கு உழைத்த அத்துணை நல் உள்ளங்களுக்கும் நினைவுப்பரிசு மாநில
ஒருங்கிணைப்பாளரால் வழங்கப்பட்டது. ஆசிரியர்களும் உடனிருந்தனர்.
மொத்த இரு நாட்கள் நிகழ்வையும் ஒளி-ஒலிப்பதிவு செய்து , புகைப்படம் எடுத்த பணியை குழந்தைசாமி அவர்களின் மகன் அசோக் ஏற்க , அவரையும் நினைவுப் பரிசு தந்து பாராட்டினார் ஆட்சியர் .
நன்றியுரை
இரண்டு நாட்கள் நிகழ்ந்த அத்துணை நிகழ்வின் இயக்கங்களுக்குக் காரணமான ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு மாநில ஒருங்கிணைப்பாளர் நன்றி பாராட்டினார்.
ஒட்டு மொத்த நன்றி , விழாவை ஒருங்கிணைத்த குழந்தைசாமி அவர்களுக்கும் ,உதவி செய்த சிவராமன் அவர்களுக்கும் உரித்தானது.
வந்திருந்த சிறப்பு விருந்தினர் தஞ்சை மாவட்ட உதவி ஆட்சியர் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது, கலந்து கொண்ட ஆசிரியர்கள் , அமர்வுகளைக் கையாண்ட இலக்கியா , தாமரைச்செல்வன் , மண்பாண்ட பொம்மை செய்யும் உழைப்பாளிகள் , பாம்பு சதீஸ், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்க செயலர் JK , ஏறோனிமஸ் , மாறுவேடம் போட உதவியவர்கள் கதிரவன் மற்றும் உதவியாளர் , பறவை சரணாலய ஊழியர் ,முனைவர் இராம் மனோகர் , நண்டம்பட்டி மக்கள் ,ஆசிரியர் பன்நீர் செல்வம் , உணவு ஏற்பாடு செய்தவர்கள் , அரங்கு ஏற்பாடு செய்தவர்கள் , பள்ளி வாகனம் கொடுத்து உதவியவர் , பேனர் வடிவமைப்பு செய்த நமது கடலூர் ஆசிரியர் அஜய் , அதில் PKPl யினுடையதை பிரிண்ட் செய்து தந்த தலைமை ஆசிரியர் சந்திரமெளலி , சென்னை விஷன் 101 லயன்ஸ் அமைப்பு சத்ய நாராயணன் என அனைவருக்கும் பாராட்டி நன்றி தெரிவித்த உமா , இத்துணை ஏற்பாடுகளுக்கும் அடி நாதமாக இருந்து பெரும் விழா நடத்திய ஆசிரியர் குழந்தைசாமிக்கு A3 என்ன கைம்மாறு செய்ய முடியும் , எங்கள் அன்பை மட்டுமே தர முடியும் , பேரன்பு தங்களுக்கு என நன்றி கூற ,
குழுப் புகைப்படத்துடன் மனமின்றி அவரவர் இல்லம் நோக்கிப் பயணப் பட்டனர் .
தொகுப்பு
உமா
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...