கீரைகள் இயற்கை நமக்களித்த கொடை. முளைக்கீரை, சிறுகீரை என நாமறிந்தது மிகவும் குறைவு. இப்போது பெய்யும் மழையில் புத்தம்புதிதாகத் துளிர்விட்டு தானாக வளரும் கீரைகள் மகத்துவம் மிக்கவை. சத்துகள் நிறைந்த இந்தக் கீரைகள் பல்வேறு நோய் மற்றும் குறைபாடுகளைப் போக்கக்கூடியவை. ஆனால் அவற்றையெல்லாம் நாம் சீண்டுவதில்லை.
கீரைகளை பற்றி தெரியும். ஆனால் கீரையில் என்னென்ன வகைகள் இருக்கின்றன, அவை உடலுக்கு எத்தகைய நன்மை அளிக்கின்றன என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. சித்த மருத்துவ அடிப்படையில் சில கீரைகளின் மருத்துவப்பண்புகளையும் அவற்றை அன்றாடம் பயன்படுத்தும்விதம் பற்றியும் பார்ப்போம்.
கரிசலாங்கண்ணி
பூக்களின் நிறங்களின் அடிப்படையில் மஞ்சள், வெள்ளை, நீலம், சிவப்பு என கரிசலாங்கண்ணி நான்கு வகைப்படும். கரிசாலை எனப்படும் கரிசலாங்கண்ணியின் சமூலத்தைச் (whole plant) சூரணம் செய்து இளநீர் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் இளம் வயதில் வரும் நரை மாறும்.
கண்களைப் பாதுகாப்பதில் மிக முக்கியமான மூலிகையாக கரிசாலையைச் சொல்கிறார்கள். கிராமங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கள் கண்களில் மையிட்டுக் கொள்ளப் பயன்படுத்தும் கண் மை' இதன் சாற்றிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
கரிசலாங்கண்ணியை அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தடவி வந்தால் கூந்தல் கறுமை நிறத்துடன் செழித்து வளரும். கரிசலாங்கண்ணியைச் சமைத்துச் சாப்பிட்டு வருவதன்மூலம் மஞ்சள்காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குணமாகும்.
பொன்னாங்கண்ணி
நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமைப் பொன்னாங்கண்ணி என இதில் இரண்டு வகைகள் உள்ளன. சித்த மருத்துவத்தின்படி, இந்தக் கீரை மேனியை பொன் போல ஜொலிக்கச் செய்யும். அதன் காரணமாகவே இந்த பெயர் அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கீரையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்தக் கீரையைக் கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதே இதற்குக் காரணமாகும். சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்தும்.
பொன்னாங்கண்ணிக்கு இயல்பாகவே குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு என்பதால், உடலின் உள்சூட்டை தணிக்கும். அதீத சூட்டினால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குணப்படுத்த இந்தக் கீரை பயன்படும். அத்துடன் கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
மூக்கிரட்டை
இது கிராமம், நகரம் என்றில்லாமல் நீர்வளம் நிறைந்த பகுதிகளில் படர்ந்து காணப்படும். குறிப்பாக, நகரங்களில் பூங்காக்களில் இந்தச் செடிகளைக் காணலாம். சிறு செடிவகையைச் சார்ந்த இந்தக் கீரையை பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. ஒரு களைச்செடியாகவே பார்க்கப்பார்கள். இந்தக் கீரையை சிலர் கலவைக்கீரைகளுடன் சேர்த்துப் பயன்படுத்துவார்கள். இதை கூட்டுபோல் சமைத்து தாளித்துச் சாப்பிடலாம்.
ரத்த தட்டணுக்களை (blood cells)அதிகப்படுத்தக் கூடியது என்பதால் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கசாயமாகவோ, உணவாகவோ பயன்படுத்தலாம். அதிகரித்த யூரியா மற்றும் கிரியாட்டினின் அளவைக் குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. கட்டுக்குள் இல்லாத சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு ஆகியவற்றால் ஏற்படும் சிறுநீரகப் பாதிப்பையும் தடுக்கும்.
முடக்கறுத்தான்
முடக்கு+அறுத்தான்-உடலில் தோன்றும் முடக்குகளை நீக்கக்கூடியது. வயதானவர்களைப் பாதிக்கும் மூட்டு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு நல்ல தீர்வு தரும். மழைக்காலங்களில் காலியிடங்கள், வேலிகள் என எங்கும் படர்ந்திருக்கும் கொடிவகை இது. கிராமங்களில் மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் இந்தக் கீரை பெருநகரங்களில் விலைக்கு விற்கப்படுகிறது.
முடக்கத்தான் எனப்படும் முடக்கறுத்தானை தோசை மாவுடன் கலந்தோ, ரசம் வைக்கும்போது சேர்த்தோ பயன்படுத்தலாம். குழம்பு வகைகளில் இதைச் சேர்த்தும் சாப்பிடலாம். இதைச் சாப்பிடுவதால் எலும்புகள் பலம்பெறுவதுடன் மூட்டு வலிகள் நீங்கும்.
பசலை
சதுப்பு நிலங்களில் வளரும் பசலைக்கீரை, நீர்ச் சத்து நிறைந்தது. இதில் கொடிப்பசலை, செடிப்பசலை, தரைப்பசலை போன்ற பலவகைகள் உள்ளன. இதை சாப்பிடுவதால் இரும்புச் சத்துக் குறைபாடு அகலும். இது குறைந்த கலோரி உள்ள கீரை என்பதால் அனைத்து வயதினரும் இதைத் தாராளமாகச் சாப்பிடலாம். வைட்டமின் சத்துகள் அதிகமாகக் காணப்படுகிறது.
இதனை பருப்புச் சேர்த்து சமையல் செய்து உண்ண நீர்எரிச்சல், வாந்தி தீரும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் டெஸ்டோஸ்டிரோன்' ஹார்மோன் சீராகும். இதன்மூலம் ஆண்மைக் குறைபாடுகள் நீங்கும்.
வல்லாரை
இது நீரோட்டம் நிறைந்த பகுதிகளின் அருகே படர்ந்து வளரும். இதற்கு 'யோசனவல்லி' என்ற பெயரும் உண்டு. இது நரம்புகளை வலுவாக்கி ஞாபக சக்தியைப் பெருக்கும். இதனை பருப்புகளுடன் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கலாம். சித்த மருத்துவத்தில் வல்லாரை நெய் முக்கியமானதாக உள்ளது . இதனை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச்சூடு, மாந்தம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும். வல்லாரை சாப்பிடுவதால் உடலுக்கு வன்மை அதிகரித்து நோய் அணுகாமல் காக்கும்.
இன்றைய சூழலில் நவீன அறிவியல் வளர்ச்சியால் பலரும் உடல் நலத்துடன் வாழவும், உறுதியான உடல்வாகு பெறவும் இணைஉணவுகள்(டயட்டெரி சப்ளிமெண்ட்) என்று விற்கப்படும் மருந்துகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இயற்கையாக விளைந்த கீரைகளுடன் உண்ணும் பாரம்பர்ய உணவுகளுக்கு இணையான வேறு இணை உணவுகள் எதுவுமில்லை.
இன்றைய இளம்வயது பெற்றோர் தம் குழந்தைகளுக்கு நற்பண்பு, நற்சிந்தனைகளை விதைப்பதோடு விட்டுவிடாமல் நற்கீரைகளைப் பற்றிய புரிதலையும் ஏற்படுத்த வேண்டும். அவற்றை உங்கள் வீட்டுத் தோட்டங்களில் விதைப்பதற்கான ஆர்வத்தை இளம் பருவத்திலேயே கற்பியுங்கள். அது தலைமுறைகளைத் தாண்டி கீரைகளோடு தமிழ் பண்பாட்டையும் பாரம்பர்யத்தையும் வளர்க்கும். பாரம்பர்ய வகை நாட்டுக் கீரை விதைகளைத் தேடி அவற்றைப் பயிரிடுவதன்மூலம் நம் மரபைக் காத்த பெருமை கிடைக்கும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments