காணொலி மூலம் புதிய பாட வகுப்புகள்'

பாடநூல்களை தாண்டி மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கத்தில், புதிய பாடப் பகுதிகள் காணொலி வகுப்புகளாகவும், இணைய வளங்களாகவும் தயாரிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி தெரிவித்தார்.
சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (எஸ்சிஇஆர்டி) புதிய பாடத்திட்டம், பாடநூல்களை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆர்.ராமானுஜம், ஈ.சுந்தரமூர்த்தி, கு.ராமசாமி, கலா விஜயகுமார், எஸ்சிஇஆர்டி இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான புதிய பாடத் திட்ட நூல்கள் தயாரித்தல், பணிகளின் முன்னேற்றம் சார்ந்து ஆய்வு செய்யப்பட்டது.
2.25 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி: இதுகுறித்து க.அறிவொளி கூறியது:
புதிய பாடத்திட்டத்தின்படி, முதல்கட்டமாக வெளியிடப்பட்ட பாடநூல்களை மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்றுவிப்பதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 2.25 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்முறையாக 80 ஆயிரம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பிளஸ் 1 பாடநூல் பயிற்றுவித்தலில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில்: பாடநூல்களைத் தாண்டியும் மாணவர்களின் அறிவுத்திறன் வளரும் நோக்கத்தில் பாடப் பகுதிகள் காணொலி வகுப்புகளாகவும், இணைய வளங்களாகவும் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பாடங்களை மின்னியல் காட்சிகளாக உருவாக்கும் பணியில் ஆசிரியர்களும் மாணவர்களும் சிறந்த முறையில் பங்காற்றியுள்ளனர். ஒவ்வொரு பாட நூலும் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு தேவைக்கேற்ப உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்

Share this