பள்ளிகளில் சத்துணவு முட்டைக் கொள்முதல் டெண்டருக்கு தடைகோரி வழக்கு!

தமிழக அரசின் சத்துணவு
திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை விதிக்க கோரிய மனுவிற்கு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2017-18 ஆண்டுக்கு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் புள்ளிகளை கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
அதில் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வெளி மாநில கோழி பண்ணைகள் பங்கு பெறுவதை தடை செய்தும், தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகள் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதன் காரணமாக தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி டெண்டருக்கு தடை விதித்து வெளி மாநில கோழி பண்ணைகளையும்அனுமதிக்கக் கோரி கரூரை சேர்ந்த வாசுகி கோழி பண்ணை உள்ளிட்ட 4 பண்ணைகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, கொள்முதல் விவகாரத்தில் அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள உரிமை உள்ளது. குறிப்பிட்ட நபருக்கு சாதகமாக செயல்பட இந்த அரசாணை பிறப்பிக்கப்படவில்லை, ஆரோக்கியமான போட்டிக்காவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இடைத்தரகர்களை தவிர்ப்பதற்காகவே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தமிழக அரசு நாளை பதிலளிக்க நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

Share this