ஆசிரியர் இன்றி அமையாது கல்வி!


 
ஆசிரியர் இன்றி அமையாது கல்வி
மணி.கணேசன்
     தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதியுதவி, சுயநிதிப் பள்ளிகள் என 44214 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் 8949 உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் மொத்தம் 14 லட்சத்து 88 ஆயிரத்து 235 மாணவர்கள் தொடக்கக் கல்வி பயில்கின்றனர். ஒரு பள்ளிக்கான சராசரி மாணவர்களின் எண்ணிக்கை 61.88 சதவீதம் ஆகும்.       
     அதேபோல, தமிழகத்தில் மொத்தம் தனியார் சார்பில் 6,202 நர்சரி, பிரைமரிப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 279 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளில், ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 123.39 சதவீதம் ஆகும். இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள 3,046 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 631 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான மாணவர்களின் சராசரி 214.58 ஆக உள்ளது.
     அதேவேளையில் 1,955 தனியார் உயர்நிலைப் பள்ளிகளில் 8 லட்சத்து 40 ஆயிரத்து 835 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளியில் சராசரியாக 430 மாணவர்கள் பயில்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  அரசுப் பள்ளிகளில் அதிகமான பள்ளிகளில் குறைந்த மாணவர்கள் படிக்கிறார்கள் எனவும், தனியார் பள்ளிகளில் குறைந்த பள்ளிகளில் அதிக அளவு மாணவர்கள் படிக்கிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது.
     இவற்றை ஒப்புநோக்கும்போது அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.
     பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் செய்யப்பட்ட பதிவுகளின்படி நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
     இந்தப் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 57,208 பள்ளிகளில் 1 கோடியே 31 லட்சத்து 93 ஆயிரத்து 950 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 743 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 37,141 அரசுப் பள்ளிகளில் 55 லட்சத்து 40 ஆயிரத்து 425 மாணவர்கள் படிக்கின்றனர். 8,409 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 29 லட்சத்து 98 ஆயிரத்து 255 மாணவர்களும், 11,658 தனியார் பள்ளிகளில் 46 லட்சத்து 55 ஆயிரத்து 270 மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
     இவற்றிற்கு அடிப்படைக் காரணங்களாக, கல்வியில் அரசின் தனியார்மய ஊக்குவிப்புகளும் சாமானிய மக்களிடையே திணிக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வி மீதான மோகமும் அரசுப் பள்ளிகள் மீதான  அவநம்பிக்கைகளும்  உள்ளன. எனினும், ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் புகலிடங்களாக இன்றுவரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளே திகழ்ந்து வருகின்றன. மேலும், அங்கு பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களின் அயராத உழைப்பின் விளைவாக அரசுப் பொதுத் தேர்வுகளில் சராசரியாக 75 சதவீத அடைவை ஆண்டுதோறும் உறுதிப்படுத்திக் கொண்டு வருவது அறிந்ததே.
     மத்திய, மாநில அரசுகள் பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திய போதும் இன்னும் எத்தனையோ கிராமப்புற பள்ளிகள் அடிப்படை வசதிகளின்றிக் காணப்படுவது வேதனை தரும் சேதியாகும்.
     அத்தகைய பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஆசிரியைகள் மற்றும் பதின்பருவ மாணவிகள் படும் இன்னல்கள் சொல்லவொணாதவையாக இருக்கின்றன. மேலும், கிராமப்புறங்களில் 2001 ஆம் ஆண்டில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் கல்வித் திட்டம் காரணமாக, ஒரு கி.மீ. தொலைவில் தொடக்கப் பள்ளிகளும், மூன்று கி.மீ. தொலைவிற்குள் உயர்தொடக்கப் பள்ளிகளும், ஐந்து கி.மீ. தொலைவிற்குள் உயர்நிலைப் பள்ளிகளும் தோற்றுவிக்கப்பட்டன. தவிர, இப்பள்ளிகளுக்குப் பாட வாரியாக பல்லாயிரக்கணக்கில் உயர்தகுதிகள் பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
     அதன்பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முறையாலும் இலவசக் கட்டாய தரமான கல்வி அனைவருக்கும் தொடர்ந்து கிடைக்கப்பெற்று வந்தது. அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடத் திறன்கள் இவற்றால் மாணாக்கரிடம் கூடின. இதன்விளைவாக, கிராம மற்றும் நகர்ப்புற அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் உயர்ந்து விளங்கும் நல்ல சூழல்கள் உருவாயின. அவர்களின் வாழ்க்கை முறையிலும் சிறந்ததொரு மாற்றம் ஏற்பட்டது.
     இத்தகைய சூழலில், கல்வி மீதான அரசின் நோக்கும் போக்கும் அண்மைக்காலமாக உலகமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கல் நெருக்கடிகள் காரணமாக மாறிவருவது வருந்தத்தக்கது. கல்வியை எதிர்காலத்திற்கான கட்டாய முதலீட்டு அத்தியாவசிய செலவு என்று எண்ணாமல் துரித வளர்ச்சிக்கு உதவாத வீண் அநாவசிய செலவு என்று பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
     
     இதன் காரணமாக, பெருவணிகத்தை அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டு விளங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல்களாகப் பெருக மறைமுகமாகப் பச்சைக்கொடி காட்டுவதில் அரசு அக்கறைக் காட்டத் தொடங்கியுள்ளதோ என்னும் ஐயப்பாடு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசுப் பள்ளிகள் மூடப்படும் என்றும் ஆசிரியர் மாணவர் விகிதத்திற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் செய்யப்படும் என்றும் இருவேறு அபாய அறிவிப்புகள் துரிதகதியில் வெளியிடப்பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக, பள்ளிகளுக்கு மூடுவிழா நிகழ்வுகள் ஆமை வேகத்தில் நிகழ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     அதேவேளையில், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிட ஒழிப்பில் பள்ளிக்கல்வித் துறை அதீத வேகம் காட்டி ஆட்குறைப்பு நடவடிக்கையினை இப்போதே தொடங்கி விட்டது. மாவட்டம் முழுவதும் அனைத்து விதமான பள்ளிகளிலும் பணிபுரிந்து வரும் நிரந்தர, நிலையான ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியருடன் உபரிப் பணியிடங்களாக மாற்றி தற்போது நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வில் ஆணை பிறப்பித்துள்ளது தக்க சான்றாகும்.
     மேலும், இனிவரும் காலங்களில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது எனவும் அப்பணியிடங்களை பட்டியலிலுள்ள உபரி ஆசிரியர்களைக் கொண்டே நிரப்பப்படும் எனவும் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் எனலாம்.
     இந்நடவடிக்கை மூலமாக மாநிலம் முழுவதிலுமுள்ள பள்ளிகளில் காணப்படும் இலட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் ஒழிக்கப்படுவதுடன் ஆசிரியப் பணி வேலைவாய்ப்புக் கனவானது எதிர்கால தலைமுறையினரிடத்துக் கானல் நீர் போலாகிவிடும்.
     இதுதவிர, புதிய பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் சம்பந்தப்பட்ட தகுதியும் திறமையும் கொண்ட ஆசிரியர்களுக்கு அறைகூவல் விடுக்கும் விதமாக இருப்பது மறுப்பதற்கில்லை. இந்நிலையில், பணியிட ஒழிப்பால் ஏற்பட்ட பாட வெற்றிடத்தை பாட சம்பந்தமற்ற ஆசிரியரைக் கட்டாயப்படுத்திக் கற்பிக்க அறிவுறுத்துவது என்பது நல்லறமாகா. வேறுவழியின்றி ஒப்புக்குக் கற்பித்தல் நிகழ்ந்தாலும் மாணவர்கள் கற்றலை முழுமையாக அடைவுபெறுவார்களா என்பது கேள்விக்குறியே.
     இதன்மூலம் ஏழை, எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமூகத்தினரின் பிள்ளைகளுக்கான இலவச கட்டாய தரமான கல்வி கிடைப்பதில் ஊறு நேர அதிகம் வாய்ப்புண்டு. ஆசிரியர் இன்றி அமையாது கல்வி என்பதை அனைவரும் ஆழ்ந்து புரிந்து கொள்ளுதல் நலம்.
     மேலும், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களிடையே அரசுப் பள்ளிகள் மீதான நாட்டமும் அக்கறையும் வெகுவாகக் குறையும். பள்ளி அடிப்படை வசதிகளில் குறிப்பிடத்தக்க தன்னிறைவும் பாடத்திற்கு அல்லது வகுப்பிற்கு ஓராசிரியர் என்கிற தற்போதைய நிலையில்கூட போதிய மாணவர் சேர்க்கையின்மையால் நடப்பில் பல்வேறு அரசுப்பள்ளிகள் கவலைக்கிடமாகக் காணப்படுகின்றன.
    

     கடந்த சில ஆண்டுகளாகவே அரசுப் பள்ளிகளில் படித்த, பணியிலுள்ள, நடுத்தர வர்க்கத்தினர் தம் பிள்ளைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் தொடர்ந்து புறக்கணித்து வரும் போக்குகள் அவை நலிவடைவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. இதனால், மாணவர் விகிதம் வெகுவாக வீழ்ச்சியுற்று ஆசிரியர் பணியிடக் குறைப்பிற்கு வழிகோலுகிறது. அரசும் அதற்கேற்ப ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 என்பதிலிருந்து உயர்த்தி 1:30 என்று நிர்ணயம் செய்துள்ளதும் இங்கு நோக்கத்தக்கது.
     மேலும், தனியார் பள்ளிகளில் கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்தும் 25 சதவீதத்திற்கும் மிகுதியாக அரசுக் கட்டண சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களை தன்வயப்படுத்திக் கொள்ளுதல் என்பது ஏற்கத்தக்கதல்ல. இது தனியார் பள்ளிகளை நேரடியாக ஊக்குவிக்கும் கொடும்செயலாகும். இத்தகு நடவடிக்கைக்கு ஈடாக அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேலும் வலுவுடையதாக்கி, போதுமான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி வளப்படுத்துதல் என்பது பாராட்டத்தக்க செயல் ஆகும்.
     கல்விக்கு ஆகும் செலவுகளை ஈடுகட்ட வரி வருவாயில் திரட்டப்படும் மூன்று சதவீத கல்வி வரி போதுமானது. பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்புகளை அதன்மூலம் உருவாக்கும் முயற்சியில் ஆசிரியர் பணியிடங்களும் அடங்குதல் நல்லது. கற்றலுக்கான உந்துவிசை வெறும் கட்டடங்கள் அல்ல. ஆசிரியர்களே ஆவர்.
    
     அதுபோல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாமல் மூடப்படும் அரசுப் பள்ளிகளின் மரணம் என்பது மீளவும் கல்வி எட்டாக்கனியாக மாறிடும் அவலநிலைக்கே இட்டுச்செல்லும். இதில் எல்லோருக்கும் பங்குண்டு. அடித்தட்டு மக்களின் எதிர்கால சந்ததியினர் கட்டணம் செலுத்திக் கல்வி கற்க வழியின்றி வாழ வக்கற்றவர்களாக ஆகிடும் கொடுமை தவிர்க்க இயலாத ஒன்றாக விளங்கும். அப்போது அனைவருக்கும் கல்வி என்பது வெற்று முழக்கமாக இருக்கும்.
     இந்த இழிநிலைகளைக் களைந்து அரசுப் பள்ளிகளையும் ஆசிரியர் பணியிடங்களையும் காத்து அடிப்படைப் பிறப்புரிமையான கல்வி எல்லோருக்கும் எளிதாகவும் விலையில்லாமலும் கிடைத்திடச் செய்வதில் தொலைநோக்குடன் அரசும் பொதுமக்களும் நல்லெண்ணத்துடன் முன்வருவதென்பது மெய்யான நாட்டு நலப்பணியாகும். அதுபோல, பள்ளியில் அச்சாணிகளாகத் திகழும் ஆசிரியர்களின் பணியிடப் பாதுகாப்பு ஒன்றே அரசுப் பள்ளிகளை அழிவிலிருந்து மீட்கும் என்பது திண்ணம்.

மணி.கணேசன்
ராஜீவ் காந்தி நகர்
மன்னார்குடி – 614001
திருவாரூர் மாவட்டம்
9442965431.

Share this