மதிப்பெண் சான்றிதழ் வழங்க தாமதம்; அழகப்பா பல்கலை மாணவர்கள் தவிப்பு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கு உட்பட்டு
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 39 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
கடந்த ஏப்ரலில் இளங்கலை தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஜூலை முதல் வாரத்தில் முடிவு வெளியிடப்பட்டது. இரண்டு மாதம் கடந்த நிலையில் இதுவரை மதிப்பெண் மற்றும் பிற சான்றிதழ் வழங்கப்படாததால், உயர்கல்வி மற்றும் போட்டி தேர்வு எழுத முடியாமல் தவிக்கின்றனர்.
மாணவி உறவினர் வரதராஜன் கூறும்போது: என் பேத்தி பூவந்தி கல்லுாரியில் கடந்த ஏப்ரலில் இளநிலை பட்டப்படிப்புக்கான தேர்வெழுதினார். முடிவு வந்து பல நாட்களாகியும் தற்காலிக, ஒருங்கிணைந்த மதிப்பெண், டிகிரி சான்றிதழ் வரவில்லை. கல்லுாரியில் சென்று கேட்டால் பல்கலையில் கேட்க கூறுகின்றனர்.போனில் கேட்டால் ஏதாவது காரணம் கூறுகின்றனர்.
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதற்காக பல ஆயிரம் செலவழித்து பயிற்சி எடுத்தும் பலன் இல்லை. வரும் 20-ம் தேதி சட்ட கல்லுாரி நேர்முகத்தேர்வு உள்ளது. சான்றிதழ் இல்லை. பொறுப்பான பதில் சொல்லவும், துரித நடவடிக்கை எடுக்கவும் ஆள் இல்லை, என்றார்.
தேர்வாணையர் சக்திவேலிடம் கேட்டபோது, ''சான்றிதழ் சில பேருக்கு சென்று விட்டது. சிலருக்கு சென்று சேராமல் இருக்கும். ஒவ்வொரு நாளும் பிரின்ட் ஆகும் சான்றிதழ்களை அவ்வப்போது அனுப்பி வருகிறோம். அதிக பட்சம் ஒரு வாரத்தில் கல்லுாரி வழியாக அனைவருக்கும் வழங்கப்படும், என்றார்

Share this