புதிதாக துவங்கிய அரசுப்பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை : பாடம் நடத்த முன்னாள் ஆசிரியரை நியமித்த கிராம மக்கள்பண்ருட்டி அருகே புதிதாக துவங்கிய இணைப்பு துவக்கப்பள்ளிக்கு  ஆசிரியர்கள் வர மறுத்ததால் தற்போது முன்னாள் ஆசிரியரை கிராம மக்கள் நியமித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காவனூர் ஊராட்சி உளுந்தாம்பட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அப்பகுதி மாணவர்கள் பயின்று வருகின்றனர். 
அருகில் உள்ள காவனூர் கிராம மக்கள் தங்கள் பகுதியிலிருந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனியாக பள்ளி  வேண்டும் என பத்து வருடமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உளுந்தாம்பட்டு பள்ளிக்கு  காவனூர் மாணவர்களை அனுப்ப மறுத்துவிட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட  ஆட்சியரிடம் மனுவும் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 4ம் தேதி நடந்த குறைகேட்பு  கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில், காவனூர், உளுந்தாம்பட்டு, மக்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக உளுந்தாம்பட்டில் உள்ள பள்ளியில் காவனூர் மாணவர்கள்  செல்வதில் சிக்கல் உள்ளது என அதில் கூறியிருந்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி காவனூர்  கிராமத்துக்கு இணைப்பு பள்ளியை வட்டார கல்வி அலுவலர் துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் வந்தபோது ஆசிரியர்களும் துவங்கிய நாள் மட்டுமே வந்து கல்வி போதித்தனர். 4, 5, ஆகிய இரு தினங்களில் பாடம் சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்கள் வர மறுத்துவிட்டனர்.
இதனால் மாணவர்கள் வகுப்பறையில் கல்வி கற்க முடியாமல் அமர்ந்திருந்தனர். இதனால் பெற்றோர்கள் அவசர கூட்டம் கூட்டி முடிவெடுத்தனர். இதில் ஆசிரியர்கள் வராததால் நமது கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியரும், பத்திரிகையாளருமான சகுந்தலாநாராயணன் என்பவரை கல்வி போதிக்க செய்தனர். சத்துணவு சமைப்பதற்கும் உள்ளூர் சமையலரை வைத்து சமையல் செய்து வழங்கப்பட்டது. நேற்று ஆசிரியர்கள் தினம் என்பதால் ஆசிரியர்கள் வருவார்கள் என நினைத்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து  காவனூர் கிராம பெற்றோர்கள் கூறியதாவது: உளுந்தாம்பட்டில் இயங்கி வரும் பள்ளிக்கு எங்கள் கிராமத்திலிருந்து பிள்ளைகள் செல்வதில் மிகுந்த சிரமம்  உள்ளது.
நாங்கள் தனியாக கேட்ட பள்ளி தற்போது கிடைத்துள்ளது, இந்த பள்ளிக்கு தேவையான இடங்கள் 20 சென்ட் 2009ம் ஆண்டே வாங்கி வைத்துள்ளோம். காவனூர்  பகுதி பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் வரவில்லை என உளுந்தாம்பட்டு பள்ளியில் கேட்டபோது எங்களுக்கு போதிய அளவிற்கு மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். மீறி ஆசிரியர்கள் சென்றால் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை என கூறினர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவனூர் பள்ளிக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this

0 Comment to "புதிதாக துவங்கிய அரசுப்பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை : பாடம் நடத்த முன்னாள் ஆசிரியரை நியமித்த கிராம மக்கள்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...