சமுதாயத்தை பற்றி நினைக்கும் அளவிற்கு
மாணவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்: அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர் அரு.பொன்னழகு பேச்சு..
அன்னவாசல்,செப்.7: சமுதாயத்தை பற்றி நினைக்கும் அளவிற்கு மாணவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் என அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் அரு பொன்னழகு ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசினார்..
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மேலூர் அரசுப் பள்ளியில் சர்வீஸ் டூ சொசைட்டி அமைப்பின் மூலம் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது..
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித் தலைமை ஆசிரியர் அ.கிறிஸ்டி வரவேற்றுப் பேசினார்..வட்டாரக் கல்வி அலுவலர் பெ.துரையரசன் தலைமை வகித்தார்..
விழாவில் ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிப் பேசியதாவது:ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டுவது கல்வித்துறையின் கடமைகளில் ஒன்றாகும்.மத்திய அரசுப் பணியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு கொடுத்து இன்று துபாயில் உள்ள கன்ஸ்ட்ரக்ஷன் ஒன்றில் தரக்கட்டுப்பாடு அதிகாரியாக இருந்து கொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டும் ரவிசொக்கலிங்கத்தின் பணி மகத்தான பணி ஆகும் .தாய்நாட்டில் இல்லாது வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அவரது ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பற்றிய சிந்தனை உயர்வானது..அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்து அரசுப் பள்ளியின் நிலையை உயர்த்த ரவி சொக்கலிங்கம் எடுத்துள்ள முயற்சிகள்,வகுத்துள்ள திட்டங்கள் ,அவர் இது வரை செய்துள்ள உதவிகள் மற்றவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் ,முன்னோடியாகவும் உள்ளது..அதைப் போல ஓர் பள்ளி சிறப்பாக அமைய அந்த பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர் மட்டும் காரணம் அல்ல இங்குள்ள பெற்றோர்களாகிய நீங்களும் தான்..இங்கு வந்துள்ள பெற்றோர்களாகிய உங்களுக்கு பொறுப்பு உள்ளது,மேலும் சமுதாயத்தை பற்றி நினைக்கும் அளவிற்கு மாணவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்.மாணவர்களை நன்றி கூறவும்,பிறரை பாராட்டவும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்..
இது குறித்து சர்வீஸ் டூ சொசைட்டி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி சொக்கலிங்கம் கூறியதாவது:மனித மனம் அன்பு,பாசம் போன்ற அங்கீகாரத்துக்கு ஏங்கும் ..சென்ற தலைமுறை ஆசிரியர்களுக்கு இன்றைய முகநூல்,வாட்ஸ்அப் போன்ற வலைதளங்கள் கிடையாது.இன்று நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாய தலைவர்கள் நேற்றைய ஆசிரியர்களின் உழைப்பிற்கு எடுத்துக்காட்டு..ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் வெளிச்சமும் கிடைக்கவில்லை.அதனால் அவர்கள் எல்லோரையும் எங்கள் அமைப்பின் மூலம் பாராட்ட நினைத்தோம்..தற்பொழுது முதற்கட்டமாக மாவட்டத்திற்கு இரண்டு ஓய்வு பெற்ற ஒரு ஆண்,பெண் தலைமை ஆசிரியர்களை பாராட்டி உள்ளோம்..இனி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இது போல தமிழகத்தில் உள்ள சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்படுவார்கள்..
உழைத்து ஓய்வெடுக்கும் உன்னத ஆசிரியர்களை அங்கீகரிப்பது தனது நோக்கம் ..வாழ்க்கையில் முதுமை போற்றப்பட வேண்டியது.இது போன்ற பாராட்டு விழா ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தும்..இன்னும் பல இடங்களில் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுச் சென்றாலும் அவர்களது பணி முன்பு பணிபுரிந்த பள்ளியோடு தொடர்பில் இருந்து கொண்டே தான் இருக்கிறது...எனவே அவர்களது செயல்பாடை பாராட்டுவது எனது கடமை என்றார்...
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி பள்ளி முன்னாள் தலைமைஆசிரியர் சி.கண்ணன்,பொன்னமராவதி ஒன்றியம் கட்டையன்பட்டி முன்னாள் தலைமைஆசிரியை லெ.பரிபூரணம் ஆகியோருக்கு மாலைஅணிவித்தும்,பொன்னாடை போரத்தியும் விருது வழங்கியும் அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர்கள் கௌரவித்தனர்..
பின்னர் மேலூர் பள்ளியில் புதிதாக கருத்துப் பெட்டி வைக்கப்பட்டது..மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அவ்வூரைச் சேர்ந்த சக்திவேல்- கனகதீபா தம்பதியினர் அனைத்து மாணவர்களுக்கும் உண்டியல் வழங்கி சிறுசேமிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தனர்..
வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் கண்ணன் ,பரிபூரணம் ஆகியோர் கூட்டாக கூறியதாவது: ஓய்வு பெற்று வீட்டில் இருக்க கூடியவர்களை நினைத்து இவ்விருதுனை வழங்கி எங்களை உற்சாகப்படுத்திய அந்த நல்ல எண்ணத்தை நினைத்து பார்க்கிறோம்..அரசாங்கத்துடன் எங்களது உறவு 58 வயதுவரை என நினைத்த எங்களுக்கு இந்த விருதின் மூலம் ஆயுள்வரை உள்ளது என்ற எண்ணத்தை எங்கள் மனதில் கொடுத்துள்ளது..இது போன்ற விருதுகள் எங்களுக்கு வழங்குவதன் மூலம் தொடர்ந்து ஆசிரியர் பணியில் உள்ள இளைஞர்கள் உற்சாகமாக செயல்பட ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்.
விழாவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு,பள்ளி ஆசிரியை ரா.சுஜாமெர்லின்,பெற்றோர் ஆசிரியர் கழக நியமன ஆசிரியை பாரதி பிரியா மற்றும் ஏராளமான பெற்றோர்கள் ,மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியை இரா.வான்மதி நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...