மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில்
ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் மாநில அரசின் பங்களிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.அனைத்து வகை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளிகளில் தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 13 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். இவர்களுக்காக 200 சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான ஊதியம் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் எஸ்எஸ்ஏ, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் ஆர்எம்எஸ்ஏ, ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் டயட் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு சமக்ஷ சிக்ஷான் அபியான், எஸ்எம்எஸ்ஏ என்று மாற்றம் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கல்வித்திட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தினாலும் சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய பங்கீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதேநேரத்தில் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதை காரணம் காட்டி மாநில அரசின் 40 சதவீத பங்களிப்பு நிறுத்தப்பட்டு
விட்டது.இதனால் சிறப்பாசிரியர்களின் ஊதியம் ₹34 ஆயிரத்து 148ல் இருந்து ₹25 ஆயிரமாக குறைந்துள்ளது. இது அவர்களுக்கு பெரும் சிரமத்தை தந்துள்ளது. அதோடு 2013-14, 2014-2015ம் கல்வி ஆண்டுகளில் 2012-13ம் ஆண்டு முழுவதற்கும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. 2013-14, 2014-15ம் ஆண்டுகளில் தலா 5 மாதங்கள் என 10 மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மொத்தம் 22 மாதங்களுக்கு நிலுவை சம்பள பாக்கி உள்ளது.
இதுபோன்ற சிக்கல்களால் சிறப்பாசிரியர்கள் படிப்படியாக பணியை விட்டு விலகி செல்கின்றனர். இவ்வாறு காலியான 59 பணியிடங்களில் சமீபத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு விதிப்படி ₹41 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்களுக்கான நியாயமான ஊதியத்தை நிர்ணயிப்பதுடன், நிலுவை ஊதியத்தையும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...