நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் இன்று மாலை முதல் செயல்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

 தமிழகம் முழுவதும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை
சார்பாக அமைக்கப்பட்டுள்ள 412 மையங்களில் காணொலியில் நீட் தேர்வுக்கான பயிற்சி இன்று மாலை முதல் செயல்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு, பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவராணபொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவை இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து லாரிகள் மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு, நிவாராண பொருட்களை கொண்டுச் செல்லும் லாரிகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரலாறு காணாத மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, பள்ளி கல்வித்துறை சார்பாக ரூ.4 கோடி நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், பின்தங்கிய மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து குறைந்த பட்சம் ஆயிரம் மருத்துவ மாணவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த இலவச நீட் பயிற்சியை அளிக்க முடிவு செய்த தமிழக அரசு, இதற்காக தமிழகம் முழுவதும் 412 நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.


இந்த பயிற்சி மையங்கள் அனைத்தும் இன்று வெள்ளிக்கிழமை (செப் 7) மாலை முதல் செயல்படும். 412 மையங்களிலும் 3200 ஆசிரியர்கள் காணொலியில் பயிற்சி அளிப்பார்கள். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என்றார். மேலும், பெண் ஆசிரியர்கள், பாலியல் ரீதியான புகார்களுக்கு 14417 என்ற இலவச எண்ணிற்கு தகவல் கொடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Share this