பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் இருப்பது தவறில்லை: உயர் நீதிமன்றம்

பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் இருப்பது தவறில்லை என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் மாணவர்களின் அந்தரங்க உரிமை (பிரைவஸி) பாதிக்கப்படும் என்ற வாதத்தையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

தில்லி அரசு பள்ளிகளில் 1.4 லட்சம் சிசிடிவி கேமராக்கள் நிறுவ தில்லி அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் டேனியல் ஜார்ஜ் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெய் திஹத்ராய், "இந்தத் திட்டத்துக்கான சிசிடிவி கேமராக்களை கொள்முதல் செய்வதற்கு உடனடி தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் இருப்பது மாணவர்களின் உடல் நலத்துக்கு கேடு ஏற்படுத்தும். வகுப்பறையில் மாணவர்களும், மாணவிகளும் தங்களின் தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பார்கள். இது மாணவர்களின் அந்தரங்க உரிமையை பாதிக்கும் செயலாகும்' என்று தெரிவித்தார்.
தில்லி அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சஞ்சய் கவுஸ், "பள்ளி வகுப்பறை சிசிடிவி கேமராக்களில் வெளியாகும் விடியோ பெற்றோர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் கடவுச் சொல் பாதுகாப்பு உள்ளது. இந்த விவகாரத்தில் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகிறது. வேண்டுமென்றால் மனுதாரரும் தனது ஆலோசனைகளை வழங்கலாம்' என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிசிடிவி கேமராக்கள் கொள்முதல் செய்வதற்கு உடனடி தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தனர். நீதிபதிகள் மேலும் கூறியதாவது:
பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் இருப்பது தவறில்லை. அங்கு தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து மாணவர்கள் ஆலோசிப்பதற்கு ஒன்றுமில்லை. இதனால் மாணவர்களின் அந்தரங்க உரிமை ஏதும் பாதிக்கப்படாது. சில நேரங்களில் ஆசிரியர்கள் சரிவர பாடம் எடுப்பதில்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவிப்பதுண்டு. அதுபோன்ற சமயங்களில் வகுப்பறைகளில் உள்ள இந்த சிசிடிவி கேமராக்கள் உண்மை நிலையை காண்பிக்கும்.  நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்றமே சிசிடிவி கேமராக்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. நல்ல காரியங்கள் நடைபெறும்போது அதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

Share this