TEACHER'S DAY SPECIAL - ஆட்சியாளரானாலும் என்றென்றும் ஆசிரியன்!


ஆசிரியர் தினம்: செப் 5 ‘என்னுடைய
பிறந்தநாளுக்கு விழா எடுப்பதற்குப் பதிலாக, செப்டம்பர் 5 என்ற தினத்தை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் நான் பெருமிதம் கொள்வேன்’ என்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட அனுமதி கேட்ட மாணவர்கள், நண்பர்களிடம் சொன்னவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
அவருக்கு நாளை 130-வது பிறந்த நாள். உயர்கல்வித் துறையில் உயரிய பதவியான துணை வேந்தர் பொறுப்பை எட்டிய பிறகும் ஆசிரியராக வகுப்பெடுக்கச் செல்லும் பேராசிரியப் பெருந்தகைகள் அரிது.
 அப்படி இருக்க ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 1931- முதல் 36 வரை பதவி வகித்த பிறகும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ‘ஆசியச் சமயம் மற்றும் அறம்’ கற்பித்தவர். 
அதன் பிறகு பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தின் முதல் இந்தியத் துணைவேந்தர் என்ற பெருமைக்கும் உரியவராவர். ஆசானுக்குப் பூ பல்லக்கு
மேற்கத்திய மற்றும் இந்தியத் தத்துவ அறிஞர்.
 நாளொன்றுக்கு 2 மணிநேரம் மட்டுமே உறங்கி பகவத்கீதை, உபநிடதங்கள், பிரம்மச் சூத்திரம் ஆகியவற்றுக்கு விளக்கவுரைகள் எழுதியவர்.
 வேதாந்தத் தத்துவ ஆய்வு மாணவர்களுக்கு அவருடைய இந்துத் தத்துவ எழுத்துகள் மகத்தான கையேடு. மைசூர் பல்கலைக்கழகத்தின் பணியிலிருந்து விடுபட்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக அவர் பொறுப்பேற்க முடிவெடுத்தபோது, அவருடைய மாணவர்கள் பூ பல்லக்கு ஒன்றைத் தயாரித்தனர். 
அதில் அவரை உட்காரவைத்து ரயில் நிலையம்வரை தூக்கிச் சென்று தங்களுடைய ஆதர்ச ஆசானை வழியனுப்பிவைத்தனர். தேசங்கள் இடையில் நட்பு தன்னுடைய பணி வாழ்க்கையின் பிற்பாதியில்தான் கல்விப் புலத்துக்கு வெளியே பொதுவாழ்க்கையில் கால்பதித்தவர் அவர்.
 அதேநேரம் இந்திய அரசியல் சூழலில் அவருடைய வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய தங்கையும் அரசியல் தலைவருமான விஜயலட்சுமி பண்டிட்டை இந்தியாவின் முதல் அரசியல் தூதுவராக ஜவாஹர்லால் நேரு நியமித்தார். 
ஆனால், விஜயலட்சுமி பண்டிட் ராஜப் பரம்பரையைச் சேர்ந்தவர், தலைக்கனம் பிடித்தவர் என்றெல்லாம் கருதி அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார் ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின். 
இதனால் கலக்கம் அடைந்த நேரு 1949-ல் ராதாகிருஷ்ணனை ரஷ்யாவுக்கான இந்தியத் தூதுவராக மாஸ்கோவுக்கு அனுப்பிவைத்தார்.
 அதிலிருந்து மூன்றே ஆண்டுகளில் இந்தியா – ரஷ்யாவுக்கு இடையில் சுமுகமான அரசியல் உறவு மலர்ந்தது. 
இந்த மாற்றத்துக்குக் காரணம் சோவியத்தின் அதிபர் ஸ்டாலினுக்கும் தத்துவ அறிஞர் ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் பரிமாறப்பட்ட இரு நாடுகளின் சமூக-பண்பாட்டுச் சிந்தனைகள், பொருளாதாரக் கொள்கைகள் குறித்த உரையாடல்கள்தாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 
1952-ல் இந்தியா திரும்பியதும் தேசத்தின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ராதாகிருஷ்ணன்.
 அடுத்த பத்தாண்டுகளில் தேசத்தின் இரண்டாவது குடியரசுத் தலைவர் ஆனார். தேசத்தின் தலைமகனாக ஆன பிறகும் ஆழ்மனத்தில் அவர் பேராசிரியராகவே திகழ்ந்தார். 
இதற்குச் சான்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 1966-ல் அவர் ஆற்றிய சிறப்புரை. அதன் சுருக்கம் இதோ:
 பல்கலைக்கழகம் எதற்கு? மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்த ஓர் சமூகத்துக்குப் பெயர்தான் பல்கலைக்கழகம்.
 அறிவை வளர்த்தெடுத்து எல்லோரிடமும் அதைக் கொண்டுசேர்ப்பதே இந்தச் சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினரின் ஒற்றை இலக்காக இருந்திட வேண்டும்.
 உண்மையைக் கண்டடையும் நோக்கத்தில் இருந்து இவர்கள் சிறிதளவு தடம் புரண்டாலும் ஒட்டுமொத்தப் பல்கலைக்கழகத்துக்கும் அது ஆபத்தாக முடிந்துவிடும்.
 நம்முடைய தேசத்தின் கட்டுமானத்தை வலுப்படுத்தத் தேவையான அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்ளவே நாம் பல்கலைக்கழகங்களுக்கு வந்திருக்கிறோம்.
 ஆனால், அப்படித்தான் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோமா? தேசக் கட்டுமானத் திட்டத்துக்கு அவசியமான அறிவையும் திறனையும் நம்முடைய பல்கலைக்கழகங்கள் நமக்கு வழங்குகின்றனவா?
 நீங்கள் இங்கு வந்திருப்பது அறிவியல் படிக்க, மனிதவியல் படிக்க, இறையியல் படிக்கவும்தான் (அது அறிவியல் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாதபோதும்கூட). அறிவியல் அத்தியாவசியம். ஏனென்றால், அறிவியலின் அற்புதங்கள் இவ்வுலகை மாற்றியுள்ளன.
 போக்குவரத்துக்காகக் குதிரைகளில் சவாரிசெய்துகொண்டிருந்த நாம், மிதிவண்டி, மோட்டார் வாகனங்கள் என அடுத்தடுத்து நகர்ந்திருக்கிறோம். இத்தகைய மகத்தான சாதனைகளில் நாம் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டும். இனி நிகழவிருக்கும் அறிவியல் சாதனைகளில் நம்முடைய பங்கும் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
 அறிவியலும் தேவை மனிதவியலும் தேவை ஆங்கிலக் கவிஞரும் ஓவியருமான வில்லியம் பிளேக் ஒருமுறை சொன்னார், ‘வாழ்க்கை எனும் மரத்தைத் தாங்கி நிற்பது கலை, மரணம் எனும் மரத்தைச் சுமந்திருப்பது அறிவியல்’ என்று.
 ஆனால் அப்படி யோசிப்பது தவறான பார்வை. அறிவியலைத் தவறாகக் கையாளலாம்.
 ஆனால், அது மனிதனின் குறையே தவிர, அறிவியலின் குற்றம் இல்லை. ஆகையால், சிறந்த அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் நம்முடைய மாணவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டியது நம்மைப் போன்ற ஆசிரியர்களின் பொறுப்பு. 
அதன் மூலமாகத்தான் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய நம்மால் உதவ முடியும்.
 அதேபோல மனிதவியலும் இன்றியமையாதது. ஏனென்றால், நம்முடைய இயல்பையும் அனுதினம் நாம் எவ்வாறு மேம்பட வேண்டும் என்பதையும் சொல்லித் தருவது மனிதவியல் படிப்புகள்தாம்.
 கொள்கைகளையும் லட்சியங்களையும் வார்த்தெடுக்கும் வழிமுறைகளை மனிதவியல் படிப்புகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உறுதிமொழி எடுப்போம்! 
ஆனால், அறிவியலோ அல்லது மனிதவியலோ, அது பொது அறிவியலாகவும் இருக்கலாம் அல்லது சமூக அறிவியலாகவும் இருக்கலாம். இவை அனைத்தும் உண்மையின் விளிம்பை மட்டுமே தொடக்கூடியவை.
 அவை வெளிப்புறத்தை, வெளிப்பாடுகளை, பன்முகத் தோற்றங்களை மட்டுமே தொடக்கூடியவை.
 இவற்றைக் கடந்து நம்மை நாமே உற்று நோக்க வேண்டும்.
 நம் மனத்தை அலச வேண்டும். அறிவியல் என்ன செய்கிறது? அது மதிப்பீடு செய்கிறது. மனத்தின் கற்பனையான சாகசம்தான் அறிவியல்.
 அறிவியலுக்கு அறியாமை பிடிக்காது. அது அறியாமையை முறியடித்து அறிவைப் பரப்ப முயல்கிறது. மனிதவியல் செய்வது என்ன?
 அதுவும் மனித மனத்தின் ஆற்றலைத்தான் பயன்படுத்துகிறது. ஆனால், வேறு கோணத்தில் அதைச் செய்கிறது. மனிதர் களுக்கு இடையிலான உறவுமுறையைப் பேசுகிறது. 
ஆனாலும் அறிவியலோ, மனிதவியலோ மனிதனின் உயிர்நாடியை வெளிக்கொணருவதில்லை. ஆகையால், கலை, இலக்கியம், சமயம் ஆகியவை இன்றியமையாதவை. 
சமயம் என்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கத் தூண்டும் வரட்டுப் பிடிவாதமான கொள்கைகள் அல்ல. 
சக மனிதர்களைக் கரிசனத்தோடு பாவிக்கும், தன்னைத் தானே அறியத் தூண்டும் தத்துவார்த்தச் சிந்தனை. 
இந்தப் பல்கலைக்கழகத்தில் அறிவியல், மனிதவியல் மற்றும் சமயம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து பூர்ணத்தின் அங்கங்களாகச் செயல்படும் என்று நம்புகிறேன்.
 பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நாகரிகம் தொடங்கியது. அப்போதிலிருந்து ஒவ்வொரு கட்டமாக நாம் முன்னேறி இன்றைய நிலையை வந்தடைந்திருக்கிறோம்.
 நாம் என்னதான் படித்திருந்தாலும், எவ்வளவுதான் கற்றுத் தெளிந்திருந்தாலும், எத்தனை திறன்களைக் கைவரப் பெற்றிருந்தாலும் அவை அத்தனையும் மனிதத்தின், மனித இனத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை எடுப்போம். இதுவே ஒவ்வொரு மாணவரின் வாக்குறுதியாக இருக்க வேண்டும்.

Share this