தமிழகத்தில் நடந்த போலீஸ் எழுத்துத்தேர்வில் 20க்கும் மேற்பட்ட
வினாக்கள் தவறுதலாக கேட்கப்பட்டதால் தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தவறான வினாக்களுக்குரிய மதிப்பெண் வழங்க வேண்டும், என சீருடை பணியாளர்
தேர்வாணைய குழுமத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.ஆக.,25ல்
நடந்த இத்தேர்வில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் கேட்கப்பட்ட
வினாக்களில் பல எழுத்துப்பிழையாகவும், தவறுதலாகவும் இருந்தன. ஆனால்
இதுகுறித்து யாரும் அப்போதைக்கு தேர்வு நடத்திய சீருடை பணியாளர்
தேர்வாணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.
இருப்பினும் தேர்வு
குறித்து முறையீடு இருந்தால் செப்.,9க்குள் தெரிவிக்கலாம் என தேர்வாணையம்
தெரிவித்தது.இதைதொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கடிதம் மூலமாக ஆதாரங்களுடன்
தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பொது
அறிவு பிரிவில் 36வது கேள்வியாக 'சார் அமைப்பின் முதல் மாநாடு நடந்த இடம்'
என கேட்கப்பட்டுள்ளது. சார்க் என்பதை தவறுதலாக 'சார்' என கேட்டுள்ளனர்.
50வது கேள்வியில் 'மதரையில் அறுவை வீதி என அழைக்கப்பட்ட வீதி' என
கேட்டுள்ளனர். மதுரையைதான் 'மதரை' என்று குறிப்பிட்டுள்ளனர். வெறிநாய்
கடிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்வி எண் 57,59ல் மிகப்பெரிய அநீதி
இழைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ். அகர்வால் நுாலில் பக்கம் 203ல் இருந்து
கேள்வி கேட்டுள்ளனர்.அவர் எழுதிய பத்தியை கொடுத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் கேள்வியை உள்வாங்கி சரியான பதிலை தெரிவித்திருக்க
முடியும்.கேள்வி எண் 63ல் 'ஒற்றைப்படை எண்ணை கண்டுபிடி' என்பதற்கு பதில்
'ஒற்றைப்படை மனிதனை கண்டுபிடி' என கேட்டுள்ளனர். அதேபோல் 'புகையிலையில்
உள்ள தீங்கு தரும் வேதிப்பொருள் எவை' என கேட்பதற்கு பதில் 'புகையில் உள்ள'
என கேட்டுள்ளனர். இதுபோன்ற வினாக்கள் எங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை எழுதுவதில் சிரமம்
ஏற்பட்டது.இப்படி உளவியல், பொது அறிவு பிரிவில் 20க்கும் மேற்பட்ட
வினாக்கள் தவறுதலாகவும், குழப்பமாகவும் கேட்டுள்ளனர். இதுகுறித்து
தேர்வாணையத்திற்கு தெரிவித்துவிட்டோம். விரைவில் இவ்வினாக்களுக்குரிய
மதிப்பெண் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இல்லாதபட்சத்தில்
நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை, என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...