தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிகழாண்டு முதல் நடத்தப்பட்டாலும் தேர்வின் முடிவில் எந்தவொரு
மாணவரும் அதே வகுப்பில் தங்கவைக்கப்பட மாட்டார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காகவே 5,8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. நிகழாண்டு முதலே பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தேர்ச்சி முறையில் ஏற்கெனவே உள்ள நடைமுறையே அடுத்த மூன்றாண்டுகளுக்கும் அமலில் இருக்கும்.
உலக நாடுகளில் உள்ள கல்வி முறைக்கும், இந்திய கல்வி முறைக்கும் இருக்கக் கூடிய இடைவெளியை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை செயல்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு முதலே பொதுத்தேர்வை முறையாக செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிலிருந்த நிலையிலும் தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மூன்று ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இடைப்பட்ட ஆண்டுகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் மெருகேற்றுவதற்கான செயல்பாடுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ளும். மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழக மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
எனவே ஏற்கெனவே அறிவித்தபடி 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு; ஆனால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு எந்தவொரு மாணவரும் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி, அதே வகுப்பில் தங்க வைக்கப்பட மாட்டார்கள்.
மாறாக, வழக்கம்போல் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி வழங்கப்படும். இந்த விவகாரத்தில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...