நிலவின் தரைப்பகுதியில் மோதி கிடந்தது
* ஆர்பிட்டர் கேமராவில் பதிவாகி உள்ளது
சென்னை: நிலவின் தென்துருவத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தரை இறங்கும்போது திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கலன் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தகவல் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் எந்த நாடும் செல்லாத நிலவின் தென்துருவத்துக்கு கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று கலன்கள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்தது. பூமியை வெற்றிகரமாக சுற்றிவந்த விண்கலன் பூமியின் புகைப்படத்தை துல்லியமாக படம் பிடித்து அனுப்பியது. இதையடுத்து ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் வட்டப்பாதைக்கு விண்கலம் மாற்றப்பட்டது. இஸ்ரோ திட்டமிட்ட அனைத்து பணிகளும் சந்திரயான்-2 திட்டத்தில் நடைபெற்று வந்தது. பின்னர், விக்ரம் லேண்டர் கலனையும் வெற்றிகரமாக பிரித்தனர். இதற்கான அனைத்து பணிகளையும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நடைபெற்று வந்தது. அதன்படி, கடந்த 7ம் தேதி(சனிக்கிழமை) அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்குள் நிலவின் தென் துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பீலியஸ்-என் ஆகிய இரு பள்ளங்களுக்கு இடையே ஆர்பிட்டரில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கலனை தரை இறக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அனைத்து நிகழ்வுகளையும் பிரதமர் மோடி நேரடியாக பார்வையிட்டு வந்தார்.
தொடர்ந்து அதிகாலை 1.38 மணிக்கு விக்ரம் லேண்டரை தரை இறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். நிலவில் தரை இறங்குவதற்கு ஏதுவாக வேகத்தை படிப்படியாக குறைத்து வந்தனர். நிலவுக்கு அருகே தரைப்பகுதியில் இருந்து 35 கி.மீ உயரத்தில் லேண்டர் வந்ததும் எதிர்விசை வேகத்தை குறைக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்கு ஏற்றவாறு லேண்டரில் இருந்த திரவ இயந்திரங்கள் சீரான வேகத்தில் குறைக்கப்பட்டது. குறிப்பாக 1.45 மணியில் இருந்து 1.55 மணிக்குள் லேண்டர் கலன் தரை இறக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. லேண்டரை தரை இறக்கும் கடைசி 15 நிமிடங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலாக இருந்தது. லேண்டர் 7.1 கி.மீ தூரம் வரும் வரை அதன் திசை, வேகம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் சரியான முறையிலேயே இருந்தது. விக்ரம் லேண்டர் தரை இறங்குவதை நேரடியாக பார்த்து அனைவரும் ஒவ்வொரு கட்டத்திலும் ைக தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இந்தநிலையில், படிப்படியாக நிலவின் தரைப்பகுதியை நோக்கி திட்டமிட்டபடி இறங்கி வந்த விக்ரம் லேண்டர் சரியாக அதிகாலை 1.58 மணி அளவில் நிலவில் இருந்து 2.1 கி.மீ தொலைவில் இருந்தபோது அதில் இருந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு கிடைத்த சிக்னல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் துண்டிக்கப்பட்ட தொடர்பை மீட்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால், விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்துவதில் இஸ்ரோவுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் உட்பட அங்கிருந்த அனைவரும் பெரும் சோகம்
அடைந்தனர். உடனடியாக நிலமை குறித்து இஸ்ரோ தலைவர் சிவன், சிக்னல் தொடர்பு இழந்தது குறித்து பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்தார். பின்னர், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி அங்கிருந்து கிளம்பினார். இதைத்தொடர்ந்து, விடுபட்ட விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் எங்கிருக்கிறது, ஏன் சிக்னல் துண்டிக்கப்பட்டது உள்ளிட்டவைகளை ஆர்பிட்டர் உதவியுடன் கண்டறியும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், நேற்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரின் ‘தெர்மல் இமேஜ்’ கிடைத்துள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு ஏதும் கிடைக்கவில்லை. விடுபட்ட தகவல் தொடர்பை மீட்கும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...