NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தினம் ஒரு புத்தகம்- பழைய கணக்கு


எழுதியவர் : சாவி
பதிப்பகம் : Jeneral Publishers(ஜெனரல் பப்ளிஷர்ஸ்

இது எழுத்தாளர்/பத்திரிக்கையாளர்  சாவி தன்  வாழ்க்கையில் நடந்த  மறக்கமுடியாத நினைவுகளை தொகுத்து  எழுதியுள்ள புத்தகம்    .தமிழில் இவ்வளவு எளிமையாகவும்  சுவாரஸ்யமாகவும்  நகைச்சுவையோடும்  எழுதும் தனித்தன்மை  சாவிக்கு மட்டுமே உண்டு என தோன்றுகிறது .  அவ்வளவு இனிமை எழுத்தில் .

சிறுவயதில் இவர் மாடுமேய்த்தது , படிப்பை பாதியில்  நிறுத்தியது, முதல் சம்பளமாக ராமாயண உபன்யாசம் சொல்லி ஒரு அனாவும் தேங்காய் மூடியும்  வாங்கியது , வீட்டை விட்டு வெளியேறி  தெருக்களில் சுற்றி பின்பு சாப்பாடில்லாமல் மயங்கி விழுந்தது , பத்திரிக்கைகளின் மேலான காதல் எழும்பியது  , தேச விடுதலை வீரர்கள் மேலான ஈர்ப்பு வந்தது  ,  சென்னை பயணம் சென்றது என ஒவ்வொன்றாக தனக்கே உரிய நகைச்சுவையோடு சொல்கிறார் .

 விகடன் , கல்கி, தினமணி, வெள்ளிமணி ,பூவாளி  என பல பத்திரிக்கையில் அவரது பயணம் பற்றி சொல்லிக்கொண்டே வந்து பின்னர்  சொந்தமாக பத்திரிக்கைகளை எப்படியெல்லாம்  நடத்திவந்தார் என்பது பற்றி சொல்லி  , அவைகள்  என்ன சூழலில் மூடப்பட்டது என்பதும் விவரிக்கிறார் .

தமிழகத்தின் பெரும் புள்ளிகளான காமராஜர் , கலைஞர் , எம்ஜியார் , ஜி டி நாயுடு , எஸ்.எஸ் வாசன் , ஆதித்தனார் , மெய்யப்ப செட்டியார் , "தமிழ்ப்பண்ணை "சின்ன அண்ணாமலை , தனது குரு கல்கி , விகடன் பால சுப்பிரமணியன் என அனைவரோடும் தன வாழ்வின் நிகழ்ந்த  சுவையான நிகழ்வுகள்  , செல்ல சண்டைகள், ஆச்சர்யமூட்டும் அரட்டைகள்   என ஒவ்வொன்றாக   சொல்லி தனது  வெகு சுவாரஸ்யமான எழுத்துக்களால் நம்மை வசீகரிக்கிறார் .

பதின்பருவத்தில்  தன்  ஊருக்கு வந்த குறத்திமீது தனக்கெழுந்த ஒருதலை காதலை நயமாக சொல்லிவிட்டு  , அவளிடம் குத்திக்கொண்ட பச்சையை இப்போதும் வருடிப்பார்க்கும்போது அந்த குறத்தி நினைவு வருவதாக சொல்லி நம்மை ஒரு அத்தியாயத்தில் புன்னகைக்க வைக்கும் சாவி , அடுத்த அத்தியாயத்தில்  தனது சிறு வயதில் "பெரியவீட்டுக்காரர் " என்ற பெயரோடு வாழ்ந்த இவரது தகப்பனார் வறுமையின் காரணமாக சொந்த  வீட்டை விற்று விட்டு வெளியேறி  வந்த கதையையும்  , வசதியாக வாழ்ந்த  தனது தாயார் மாற்று சேலை கூட இல்லாமல்  ஒரே சேலையை இரண்டாய்  கிழித்து,  ஒன்றை உடுத்திக்கொண்டும் ஒன்றை துவைத்து காய வைத்தும் வாழ்ந்தார் எனவும்  சொல்லி    நம் நெஞ்சை  கனத்து போக செய்கிறார்  . ஆனால்  அவ்வளவு வறுமையிலும் வளர்ந்து பின்னாளில் பேர் சொல்லுமளவு  உயர்ந்தாலும் தனக்காக இவர் ஒருபோதும் தனக்கு மிக நெருக்கமாக இருந்த  கலைஞரிடமோ , காமராஜரிடமோ எதுவும் யாசிக்காத பண்பு மிக  அபாரமானது (கலைஞர் இவரை மாம்பலம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக நிறுத்த கேட்டபோது கூட மறுத்திருக்கிறார் ). தன்னை செம்மைப்படுத்திய ஒவ்வொருவரை பற்றியும் குறிப்பிடும் சாவி. யாரையும் இகழ்ந்தோ தூற்றியோ ஒரு வரி எழுதவில்லை .எல்லோரும் விரும்பும் எளிய மனிதராக வாழ்ந்திருக்கிறார் சாவி .

பெரியாரை புகழும் இந்த அக்ரஹாரத்துகாரர்,  காஞ்சி பெரியவரிடமும் பக்தி கொண்டவர் என்பது விஷேச முரண் .

இவரால் அறிமுகம் செய்யப்பட்ட, வளர்த்துவிடப்பட்ட  கலைஞர்களின்   பட்டியல் அனுமன் வால்  போல நீண்டாலும் இவர் யாரிடமும் அவர்களது வளர்ச்சிக்கு உரிமை கொண்டாடியதில்லை . அவரவர் திறமைக்கு  அவரவர் ஜெயித்தார்கள் என முடித்துக்கொண்டார் .

இவரது "வாஷிங்டனில் திருமணம்" கதை  அக்கால திருமணங்களில் தாம்பூல பையோடு போட்டு கொடுக்குமளவு வெகு பிரசித்தம் . 1000 தடவைகளுக்கு மேலாக மேடை கண்ட இந்த நாடகம் போல் இனியொன்றை தன்னால்  எழுத முடியுமா என சாவியே ஆச்சர்யமாய் சொல்கிறார் .

ஒரு கதை எப்படி தொடங்க வேண்டும் , எப்படி முடிக்க வேண்டும் , எங்கே துணுக்குகளை  சேர்க்க வேண்டும் , லே அவுட் எப்படி அமையவேண்டும் , தின இதழுக்கும் மாத இதழுக்கும் உள்ள வித்யாசம் என்ன என்று இவர் வளரும் நிருபர்களுக்கு இந்த புத்தகத்தில் எடுக்கும் வகுப்புகள் ஒவ்வொன்றும் பத்திரிக்கையாளராக விரும்பும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய வெற்றி சூத்திரங்கள் .

இவர் இந்த புத்தகத்தில் சொல்லும் ஒவ்வொரு நிகழ்வும் ,  இவர்  கதை சொல்லும்  விதமும்  படிக்க படிக்க இன்னும் சில பல ஆண்டுகள் இந்த மனிதர் நம்மோடு வாழ்ந்திருக்கலாமே என்ற எண்ணங்கள்  இந்த புத்தகத்தை நாம் முடிக்கும்போது மனதில் அலைமோதுகிறது  . சரி ...அதனால் என்ன ?  தனது புத்தகங்களின் மூலம் சாவி சாகாவரம் பெற்றுவிட்டார்  என எண்ணிக்கொள்ளவேண்டியது தான் .





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive