அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும், இறை வணக்கப் பாடலாக "கஜவதனா
கருணாகரனா" "வாதாபி கணபதே" போன்ற விநாயகர் பாடல்களே பாடப்பட்டது. சிலர்
தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடினார்கள்.
1970 மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று, சென்னையில் நடைபெற்ற திரைப்படக்
கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் "நீராருங் கடலுடுத்த" பாடலே
இனிமேல் அரசு விழாக்களில் பாடவேண்டும் என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.
கலைஞர் இதை அறிவித்தவுடன் 'கலைமகள்' மாத இதழின் ஆசிரியர் கி.வா.ஜெகநாதன்
எதிர்ப்புத் தெரிவித்தார். கடவுளும், தமிழ்த்தாயும் ஒன்றல்ல என்றும்,
அதற்குப் பதிலாக தாயுமானவர் எழுதிய 'அங்கிங்கெனாதபடி' என்ற பாடலையே பாட
வேண்டும் என்றார். பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை, ம.பொ.சி,
டாக்டர்.மு.வரதராஜனார் உள்ளிட்டோர் கலைஞரின் முடிவை வரவேற்றனர்.
எதிர்ப்புகள் அடங்கிப் போனது.
தேசிய கீதம் இருக்கும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது சரியல்ல
என்றும், இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று சமர்குஹா என்பவர்
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். ஆனால் இது இறையாண்மைக்கு எதிரானது
அல்ல என்று அன்றைய துணை உள்துறை அமைச்சர் கே.ஆர்.இராமசாமி பதிலளித்தார்.
1970 ஜூன் 17 அரசு உத்தரவாக வெளியிடப்பட்டது, 1970 நவம்பர் 23 முதல்
அமுல்படுத்தப்பட்டது.
'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே,
தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!வாழ்த்துதுமே!!!
திருநெல்வேலி இந்துக்கல்லூரி முதல்வராக இருந்த சுந்தரம் பிள்ளையின்
மணோன்மனீயம் நாடகத்தில் இடம் பெற்றப் பாடலே "நீராருங் கடலுடுத்த" எனத்
தொடங்கும் இந்தப் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டு,
டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலாவால் பாடப்பட்டு, இசைத்தட்டுகள்
வெளியிடப்பட்டது.
இந்தப்பாடல் 50 ஆண்டுகளாக தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாடலை
எழுதிய மணோன்மணீயம் சுந்தரனாரையும், அதை தமிழகமெங்கும் பாட வைத்த
கலைஞரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...