நாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4.24 லட்சத்தை கடந்து உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33 லட்சத்து 36 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், 38 லட்சத்து 52 ஆயிரம் பேர் இதுவரை குணமாகி உள்ளனர். உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதேபோல் பிற நாடுகளிலும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி பிரேசில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பல்வேறு வகையான அறிகுறிகளை காட்டுகிறது. அதுபோல் பல்வேறுபட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அன்னல்ஸ் ஆஃப் நியூரோலஜி இதழில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுபவருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் தலைவலி, தலைச்சுற்றல், விழிப்புணர்வு குறைதல், கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை மற்றும் சுவையின் கோளாறுகள், வலிப்பு தாக்கங்கள், பக்கவாதம், பலவீனம் மற்றும் தசைவலி போன்ற நரம்பியல் பிரச்சினை வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளனர். "பொதுமக்களும் மருத்துவர்களும் இதை அறிந்திருப்பது முக்கியம், ஏனென்றால் சார்ஸ், கோவ்-2 நோய்த்தொற்று ஆரம்பத்தில் நரம்பியல் அறிகுறிகளுடன் இருக்கலாம், ஏதேனும் காய்ச்சல், இருமல் அல்லது சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பு," என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் இகோர் கோரல்னிக் கூறினார். பகுப்பாய்வில், விஞ்ஞானிகள் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய வெவ்வேறு நரம்பியல் நிலைமைகள் மற்றும் அவற்றை எவ்வாறு கண்டறிவது குறித்த வழிமுறைகள் ஆகியவற்றை விவரிக்கின்றனர்.
ஆய்வின்படி, இந்த நோய் மூளை, முதுகெலும்பு, நரம்புகள் மற்றும் தசைகள் உட்பட முழு நரம்பு மண்டலத்தையும் பாதிக்கலாம். மூளை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடிய உறைதல் கோளாறுகளால் பாதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். கூடுதலாக, வைரஸ் மூளை, மெனிங்கேஸ் - நரம்பு மண்டலத்தின் பல பகுதிகளை இணைக்கும் ஒரு திசு மற்றும் மண்டைக்கு அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படும் செரிப்ரோஸ்பைனல் திரவம் (CSF) ஆகியவற்றில் நேரடி தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் கூறினர். நோய்த்தொற்றுக்கான நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்விளைவு மூளை மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும் அழற்சியையும் ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Source Maalaimalar
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...