கரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. நடப்புக் கல்வி ஆண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டன. இதற்கிடையே அக்.15-ம் தேதி முதல், பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுகுறித்து மாநில அரசுகளே முடிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுகின்றன. தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து மீண்டும் அவை மூடப்படுகின்றன.
அந்த வகையில், மும்பை மாநகராட்சி மற்றும் குஜராத் மாநிலத்தில் நவ.23 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அனுமதி அளித்தன. ஆனால், தொற்று அதிகரிக்கும் சூழலில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்தராகண்டில் கல்லூரிகள் திறக்கப்படுவதும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பட்னேகர் 'ஏஎன்ஐ' செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''நவ.23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தன. தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுகிறது. டிசம்பர் 31-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது'' என்று தெரிவித்தார்.
அதேபோல குஜராத் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தற்போதைய கரோனா வைரஸ் சூழலால் பள்ளி, கல்லூரிகள் நவ.23-ம் தேதி திறக்கப்படுவது ஒத்தி வைக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்டில் கல்லூரிகள் திறப்பும் தள்ளிவைப்பு
இதற்கிடையே பாரி மாவட்டத்தில் நவ.6ஆம் தேதி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட்டதில் 84 பள்ளிகள் 5 நாட்களுக்கு மூடப்பட்டன. இதற்கிடையே கல்லூரிகள் திறக்கப்படுவதாக இருந்த நிலையில், அதை ஒத்தி வைப்பதாக கேபினட் அமைச்சர் மதன் கவுசிக் தெரிவித்தார்.
கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் நீண்ட விவாதத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் டிசம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...