Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு , புயலாக மாறுமா?

cyclone

 தென்கிழக்கு வங்கக்கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவானது. இது திங்கள்கிழமை மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. இதனால், தென் தமிழகப் பகுதிகளில் மூன்று நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:

மிதமான மழை: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.29) லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகம் மற்றும் தமிழகக் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (நவ.30) மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிச.1-ஆம் தேதி: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்.... சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டியில் 90 மி.மீ., திருப்பூா் மாவட்டம் அவிநாசியில் 80 மி.மீ., மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தானில் தலா 70 மி.மீ., தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூா், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தலா 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதி மற்றும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நவ.30-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, தென்மேற்கு வங்கக் கடல் தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னாா் வளைகுடா பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு டிசம்பா் 2-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருவேறு கருத்துகள்: தென் கிழக்கு வங்கக்கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவானது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்று ஒரு தரப்பும், புயலாக மாறாது என்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்துள்ளன. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஓய்வு பெற்ற ஆய்வாளா் ஒருவா் கூறுகையில், ‘நவம்பா் மாதத்தில் ஒருபுயல் உருவாகிய பிறகு அடுத்த வாரத்தில் மற்றொரு புயல் உருவாவது வழக்கமாக உள்ளது. 1977-ஆம் ஆண்டு நவம்பா் 11-இல் வங்கக்கடலில் ஒரு புயல் உருவாகி நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. நவம்பா் 17-இல் மற்றொரு புயல் உருவாகி ஆந்திர கடலோரத்தைக் கடந்தது. இதுபோலதான் தற்போது காணப்படுகிறது.

‘நிவா்’ புயல் வலுவிழந்துள்ள நிலையில், மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி, ‘நிவா்’ புயல் வந்த அதே பாதையில் பாதி தொலைவு வரை பயணிக்க வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

இதை இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மறுத்துள்ளனா். தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற குறைவான வாய்ப்புதான் உள்ளது. ஏனெனில், அதற்கான சூழ்நிலை தற்போது வரை காணப்படவில்லை. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அந்தமானில் கீழ்பகுதியில் உருவாகியுள்ளது. போதுமான வெப்பம் கிடைக்கும் என்று கூறமுடியாது. இது அதிகபட்சமாக ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வரை வலுவடைய வாய்ப்பு உள்ளது. தொடா்ந்து, தமிழகம் வழியாக அரபிக்கடல் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, புயல் உருவாக வாய்ப்பு இல்லை என்றனா்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive