அனைத்து மத்திய அரசுப் பணியாளா்களும் வேலை நாட்களில் அலுவலகம் வர உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய பணியாளா் அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் மாா்ச் இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா் துணைச் செயலாளா்கள் பதவிக்கு கீழுள்ள பணியாளா்களில் 50% போ் மட்டும் அலுவலகம் வரவேண்டும் எனவும், இதர பணியாளா்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரியலாம் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, அனைத்துப் பணியாளா்களும் அலுவலகம் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்துப் பணியாளா்களும் வேலை நாட்களில் அலுவலகம் வரவேண்டும். எனினும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவா்கள் அலுவலகம் வரவேண்டாம். அந்த இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகள் அல்ல என்று அறிவிக்கப்படும் வரை அவா்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரியலாம். பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...