புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கே.ஆனந்தராஜ். இவர், புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே (பிப்.14) ஒரு பிளக்ஸ் பேனர் வைத்தார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெற்றிகரமாக 24 ஆண்டு பதிவு மூப்பை பதிவு செய்தும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. நலம் விசாரித்தும்கூட ஒரு கடிதமும் வந்ததில்லை" என்று அவரது பதிவு எண்ணுடன் ஒரு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். இது, பார்வையாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வருவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஆனந்தராஜ் கூறுகையில், "சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான் கடந்த 1997-ல் எஸ்எஸ்எல்சியையும், 1999-ல் பிளஸ் 2 படித்து முடித்து புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். அதன் பிறகு, ஆசிரியர் பயிற்சி முடித்து அதையும் பதிவு செய்தேன். எந்த வேலையும் வரவில்லை.
அதன்பிறகு, இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்து அதையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு ஓட்டுநர் பணியாவது கிடைக்கும் என்று காத்திருந்தும் வேலை கிடைக்கவில்லை. தற்போது குறைந்த கூலிக்கு தனியார் வாகனம் ஓட்டி, குடும்பத்தை நடத்தி வருகிறேன்.
இந்நிலையில், எனது கல்விச் சான்றுகளோடு பல முறை அரசிடம் மனு அளித்தும் அரசு வேலை கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டதால் இவ்வாறு செய்தேன்" என்றார்.
sema bro satai adi for tamilnadu govt....
ReplyDelete