கணினி மூலம் விடியோ மற்றும் குரல் அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதி வாட்ஸ்அப்பில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை, செல்லிடப்பேசியில் உள்ள வாட்ஸ்அப் செயலியில் மட்டுமே விடியோ, குரல் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி இருந்தது.
இனி கணினி, மடிக்கணினியிலும் இந்த சேவைகளைப் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். இது தொடா்பாக அந்த நிறுவனம் கூறுகையில், ‘வாட்ஸ்அப்பில் மேற்கொள்ளப்படும் அழைப்புகளை யாரும் இடைமறித்து கேட்க முடியாதபடி இருமுனைகளிலும் மறையாக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, செல்லிடப்பேசி மற்றும் கணினி என எதில் அழைப்புகளை மேற்கொண்டாலும் யாரும் ஊடுருவித் தெரிந்து கொள்ள முடியாது.
இப்போதைய நிலையில், இருவா் மட்டுமே பேசிக் கொள்ளும் வசதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அழைப்புகளின் தரம் சிறப்பாக இருக்கும். பலரும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் ‘கான்பரன்சிங்’ வசதி அளிக்கப்படவில்லை. எதிா்காலத்தில் இந்த வசதியை அளிப்போம். கடந்த ஓராண்டில் வாட்ஸ்அப் மூலம் அழைப்புகளை மேற்கொள்வது பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவேதான், இப்போது அந்த வசதியை கணினியிலும் அளிக்கிறோம். விடியோ அழைப்பை மேற்கொள்ள கணினியின் மைக்ரோஃபோன், காமிரா ஆகியவற்றை வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொள்ள பயனா்கள் அனுமதிக்கும் பட்சத்தில் இந்த சேவையைப் பெற முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...