கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? வேண்டாமா? – உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள்!
உலகமே எதிர்நோக்கியிருந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கழைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து கோவிஷீல்ட் என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்திருக்கின்றன.
இந்தியாவில் இதனைத் தயாரிக்கும் உரிமையை புனேவிலுள்ள சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது 5 கோடி தடுப்பூசிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசுக்கு 1 தடுப்பூசியை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யவிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியிருந்தது.
உலக நாடுகளிடமிருந்து பல கோடி ஆர்டர்கள் வந்திருக்கின்றன. அதில் இந்தியா மட்டும் சுமார் 1 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களான சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசே முழுச் செலவையும் ஏற்கும் என கூறியிருக்கிறது. ஜனவரி 16ஆம் முதல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக வெவ்வேறு மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு பகிர்ந்தளித்திருக்கிறது. இந்தத் தடுப்பூசியைப் போடுமாறு மக்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என அரசு உறுதியளித்திருக்கிறது.
ஒரு காலத்தில் தடுப்பூசியை வரப்பிரசாதமாகப் பார்த்த மக்கள் இன்று மிரண்டு போயிருக்கிறார்கள். அதற்குச் சில போலி இயற்கை மருத்துவர்களே காரணம். சுயசார்பு மருத்துவம் என்கின்ற பெயரில் மக்களிடையே போலி பிரச்சாரம் செய்து பெரும் குழப்பத்தை உருவாக்கியுள்ளனர்.
உதாரணமாக, சுகப்பிரசவம் பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் உயிரிழக்க வைத்த (கிட்டத்தட்ட கொலைசெய்த) சம்பவங்கள் தமிழ்நாட்டில் சமீப காலமாக அரங்கேறிவருகின்றன. இதில் மண்ணில் கால் பதிக்காமல் உயிரிழந்த குழந்தைகளும் அடக்கம்.
தடுப்பூசி போட்டு ஏமாற்றுகிறார்கள் என்றால், ஒரு காலத்தில் குழந்தைகளை ஆட்டிப்படைத்த இளம்பிள்ளைவாதம் இப்போது எங்கே ஓடியது? முழுதாக எதையும் அறியாமல் அல்லது அறிந்துகொள்ள முற்படாமல் வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளை நம்பி உயிர்களைப் பலிகொடுக்க முனைகிறோம்.
இதற்கு இயற்கை மருத்துவமே வேண்டாம் என்று கூறுவது போல பொருள் கொள்ள வேண்டாம். நாம் உண்ணும் உணவே மருந்து என்பதை மறுப்பதற்கில்லை. சிறு, சிறு பிரச்சினைகளுக்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது.
ஆனால், உயிருக்கு ஆபத்திருக்கும் சூழலிலும் நான் மருத்துவமனை செல்ல மாட்டேன் என்று அடம்பிடிப்பது தற்கொலைக்குச் சமம். எதையும் ஆராயாமல் நம்பாதீர்கள் என்பதே இங்கே கூற விழையும் பொருள்.
தற்போது கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்ட் பக்கம் போவோம். அதில் சில சந்தேகங்கள் உங்களுக்கு நிச்சயமாக எழும். அதைத் தீர்க்கும் வகையில் இக்கட்டுரை இருக்கும் என நம்புகிறோம்.
எந்தெந்த தடுப்பூசிகளைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
கோவிஷீல்ட், கோவாக்சின் என்ற இரு தடுப்பூசிகளைப் பரிந்துரைத்துள்ளது. இதில் கோவிஷீல்ட் மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்தப்படும். கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை முடிவு இன்னும் வராததால் பேக்அப் தடுப்பூசியாக இருக்கும்.
எத்தனை டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்படும்? அதன் கால இடைவெளி என்ன?
இரண்டு தடுப்பூசிகளையும் இரு டோஸ்களாகச் செலுத்த அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன. முதல் டோஸ் போட்டுக்கொண்ட 28 நாள்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு டோஸ்கள் செலுத்திய பின் 14 நாள்களுக்குப் பிறகே உடலில் தடுப்பூசியின் செயல்பாடு தொடங்கும்.
எனவே, இரண்டாவது டோஸ் கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனையுடன் நீங்கள் போட்டுக்கொள்ள வேண்டும். அலட்சியம் வேண்டாம்.
தடுப்பூசி எவ்வாறு செயல்படும்? செயல்திறன் எப்படி இருக்கும்?
உட்செலுத்தப்படும் தடுப்பு மருந்து முதலில் உங்கள் உடலில் இருக்கும் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டிவிடும். அதன்பின் உடல் கொரோனா வைரஸை அழிக்கும் ஆண்டிபாடிகளை உருவாக்கும்.
கோவிஷீல்ட் தடுப்பூசி கடுமையாகச் செயல்படும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இரண்டு டோஸ்கள் போட்டுக்கொண்டவர்களில் 62 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
தடுப்பூசி இலவசமா?
மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற முன்கள பணியாளார்கள், 50 வயதைக் கடந்தவர்கள் உள்ளிட்ட 30 கோடி பேருக்கு மட்டுமே இலவச தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. மத்திய அரசுக்கு 200 ரூபாயும் தனியாருக்கு 1,000 ரூபாயும் தடுப்பூசி விலையாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இருப்பினும், தமிழ்நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்திருக்கிறார். வரும் காலங்களில் மாநில அரசு தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யலாம்.
கொரோனா தொற்று ஏற்பட்டவரோ அல்லது அறிகுறியுடன் இருப்பவரோ தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
அவர்கள் போட்டுக் கொள்ளலாம். ஆனாலும் தடுப்பூசி அவர்கள் போட வரும்போது மற்றவர்களுக்கு தொற்று பரவலாம் என்பதால் நோய் அறிகுறிகள் தென்பட்ட 14 நாள்களுக்குப் பிறகு மருத்துவ ஆலோசனையுடன் போட்டுக்கொள்வது சிறந்த வழிமுறை.
எந்த வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்?
அவசரகால பயன்பாட்டிற்காக 18 வயது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை போட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு இன்னும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அரசிடம் முறையான அறிவிப்பு வந்த பின் குழந்தைகளுக்குப் போடுவது குறித்து யோசியுங்கள்.
யார் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக் கூடாது?
*முதல் டோஸ் போட்டுக்கொண்ட பின் தீவிரமான அலர்ஜி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் இதுகுறித்து கூறிவிடுங்கள்.
*தடுப்பூசியின் மூலப்பொருள்களால் உங்களுக்கு ஏற்கனவே ஒவ்வாமை இருந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது.
இங்கே தான் தடுப்பூசியின் மூலப்பொருள்கள் குறித்து அறிவது அவசியமானதாகிறது. மூலப்பொருள்கள் பின்வருமாறு: L-Histidine, L-Histidine hydrochloride monohydrate, Magnesium chloride hexahydrate, Polysorbate 80, Ethanol, Sucrose, Sodium chloride, Disodium edetate dihydrate (EDTA), Water for injection.
மேற்குறிப்பட்டவற்றில் ஏதேனும் ஒன்றால் உங்களுக்கு அலர்ஜி இருந்தார் மருத்துவரிடம் கூறுங்கள்.
தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?
இந்தத் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் இருக்கும். அவை மிகவும் பொதுவானது, பொதுவானது, பொதுவற்றது என மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மிகவும் பொதுவானவை:
ஊசி போடும் இடத்தில் வலி, வீக்கம், அரிப்பு, உடல் சோர்வு, காய்ச்சல் உணர்வு, தலைவலி, உடல் வலி
பொதுவானவை:
ஊசி போடும் இடம் பெரியளவில் வீங்குதல், சற்று அதிகமான காய்ச்சல், வாந்தி, குமட்டல் , அதிக உடல் வெப்பநிலை, தொண்டைப் புண், மூக்கு ஒழுகுதல், இருமல், சளி
பொதுவற்றவை:
மயக்க உணர்வு, பசி எடுக்காமை, வயிறு வலி, அதிகமாக வியர்வை வெளியேறுதல், சொறி ஏற்படுதல்
*இந்த பக்க விளைவுகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் 10 நபர்களில் ஒருவருக்குத் தான் ஏற்படும் என்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை. இருப்பினும், எதிர்பாராத பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதால் முறையான மருத்துவ ஆலோசனை அவசியம்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் மது அருந்தலாமா?
மருத்துவ ஆராய்ச்சியின்படி மது அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையலாம் என்று கூறப்படுகிறது. ஆகவே இரண்டு டோஸ்கள் போடும் கால இடைவெளியான 42 நாட்களுக்கு மது அருந்துவதைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது.
தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் கவனத்தில் கொண்டு மருத்துவர்களிடம் கூற வேண்டியவை பின்வருமாறு:
*காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால்
*ரத்தப்போக்கு கோளாறு இருந்தால்
*நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால்
*பெண்கள் கர்ப்பமாக இருந்தால், கர்ப்பம் தரிக்க திட்டமிட்டிருந்தால்
*குழந்தைக்கு பாலூட்டும் தாய்மாராக இருந்தால்
இவையனைத்தும் கவனத்தில் கொண்டு சரியான தகவலை மருத்துவரிடம் கூறுங்கள்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் சீரம் நிறுவனத்தாலும் மத்திய அரசாலும் உறுதிப்படுத்தப்பட்டவை. முன்பே கூறியது போல எந்த ஒரு விசயத்தையும் கண்மூடித்தனமாக நம்பாமல் முடிந்த அளவிற்கு அதுகுறித்து தெரிந்துகொள்ளுங்கள். அரசே தடுப்பூசி போட்டுக்கொள்வது மக்களின் சாய்ஸ் என்று கூறியுள்ளது. மேற்கூறிய தகவல்களின் அடிப்படையில் நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...