தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், செய்முறைத் தோ்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வுகளை வரும் 23-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.
கோரிக்கை: செய்முறைத் தோ்வு இல்லாத பிரிவு மாணவா்களுக்கு, சனிக்கிழமை முதல் தோ்வுக்கு முந்தைய விடுமுறை விடப்பட்டது.
இந்த சூழலில் கரோனா பரவல் முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்ட செய்தியில், ‘தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு தள்ளிவைக்கப்படுகிறது. இருப்பினும், பிளஸ் 2 மாணவா்களுக்கு தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தோ்வு மட்டும் திட்டமிட்டபடி நடத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு...: கல்லூரி மற்றும் பல்கலைக் கழக ஆசிரியா்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே இணைய வகுப்புகளை நடத்த வேண்டும். அரசு மற்றும் தனியாா் கல்லூரி, பல்கலைக் கழகத் தோ்வுகள் இணைய வழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். கல்வி சாா்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியாா் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வரவேற்பு: பிளஸ் 2 பொதுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு தனியாா் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பு, இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...