நர்சரி பள்ளிகளுக்கு 3 ஏக்கர் நிலம் கட்டாயம்: தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவிப்பு.

 

மெட்ரிக் பள்ளிகளை போல, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை நடத்தும் நர்சரி பள்ளிகளுக்கும், கிராம புறங்களில் 3 ஏக்கர் நிலம் கட்டாயம்' என தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 'எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை நடத்தும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, நிலத்தின் தேவை, அடிப்படை வசதிகள் குறித்த விபரங்களை ஆய்வு செய்த பிறகே, அங்கீகாரம் வழங்குவதற்கான கருத்துருவை பரிந்துரைக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அங்கீகார விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:

* அங்கீகாரம் கோரும் பள்ளி, நிர்வாகி, அறக்கட்டளை பெயர், பதிவு செய்த நாள், பள்ளியின் இட விபரம், சொந்த இடமா, குத்தகை என்றால், 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்த ஆவணத்தை பள்ளிகள் தாக்கல் செய்ய வேண்டும்

* பள்ளி அமைந்துள்ள இடம் மாநகராட்சி என்றால் 6 கிரவுண்ட்; மாவட்ட தலைமையிடம் என்றால், 8 கிரவுண்ட்; நகராட்சி என்றால், 10 கிரவுண்ட்; பேரூராட்சி என்றால் 1 ஏக்கர்; ஊராட்சி என்றால் 3 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்

* பள்ளி துவங்குவதற்கு பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். ஒன்று முதல் 100 மாணவர்கள் என்றால் 1,500 ரூபாய்; 101 முதல் 250 வரை என்றால் 3,750 ரூபாய்; 251 முதல் 500 வரை 7,500 ரூபாய்; 500 மாணவர்களுக்கு மேல் என்றால் 7,500 ரூபாயுடன் ஒரு மாணவருக்கு தலா 15 ரூபாய் வீதம் கூடுதலாக செலுத்த வேண்டும்

* மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வைப்புத் தொகையும் செலுத்த வேண்டும். 100 மாணவர்கள் என்றால் 5,000 ரூபாய்; 250 வரை 7,500 ரூபாய்; 500 வரை 15 ஆயிரம் ரூபாய்; 500க்கு மேல், 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆசிரியர்களின் மாத ஊதியத்தை, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்

* பள்ளி கட்டட உரிம சான்றுக்கு, வட்டாட்சியரால் வழங்கப்பட்டுள்ள ஆவணம்; கட்டடத்துக்கான உள்ளூர் திட்ட குழும அனுமதி விபரம் தாக்கல் செய்யப்பட வேண்டும். 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை; 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிவறை இருக்க வேண்டும். நுாலக வசதி, உயர் மின்னழுத்த கம்பி குறுக்கே செல்கிறதா என்ற விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் எதிர்ப்பு

ஊராட்சி பகுதிகளில், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, 10 முதல் 25 சென்ட் வரையிலான இடம் இருந்தால் கூட அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. பிளஸ் 2 வரை செயல்படும் மெட்ரிக் பள்ளிகளுக்கு மட்டுமே, 3 ஏக்கர் நிலம் தேவை என்ற விதி பின்பற்றப்பட்டது. தற்போது முதன்முறையாக, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகளை போல, 3 ஏக்கர் நிலம் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. வெறும், 100 மாணவர்களை வைத்து, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற வகுப்புகள் நடத்துவதற்கு கூட, 3 ஏக்கர் நிலம் எதற்கு தேவை என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறிய அளவிலான நர்சரி பள்ளிகள், 3 ஏக்கரில் இருந்தால், பள்ளி கட்டடங்கள் போக மீதமுள்ள, 2.5 ஏக்கர் இடங்கள் புதர் மண்டியும், குப்பைகள் சேர்ந்தும், பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தும் என்று பள்ளி நிர்வாகிகள் கருதுகின்றனர். 

எனவே, ஏற்கனவே உள்ள நடைமுறையையும், கள சூழலையும் தெரிந்து கொண்டு, நர்சரி பள்ளிகளுக்கு சரியாக தேவைப்படும், நில அளவை மட்டுமே வரையறுக்க வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனருக்கு பள்ளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive