நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது பலரின் ஆசைதான். ஆனால், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான் அறிவார்ந்தவர்களின் ஆசையாக இருக்கும்.
பல உடல் உபாதைகளுடன் இருப்பவர்களும்கூட, இந்த நோயெல்லாம் தீர்ந்து இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்துவிடவேண்டும்தான் என்று நினைப்பார்கள். தவிப்பார்கள்.
சரி பலரும் விரும்பும் நீண்ட ஆரோக்கிய வாழ்க்கையை கைகொள்வது எப்படி?
நீண்ட காலம் வாழ வேண்டியதை விடவும், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே அவசியம். எனவே, இவ்விரண்டையும் சாகும்காலத்தில் போய் தேடக் கூடாது.
அந்த காலத்தை அடைவதற்கு முன்பே, அதாவது உயரம் தாண்ட எப்படி தூரத்திலிருந்து ஓடி வருகிறோமோ அப்படி நாமும் இளமையிலிருந்தே இந்த ஐந்து விஷயங்களைக் கட்டாயம் பின்பற்றினால் நிச்சயம் வயதில் சதமடிக்கலாம். மருத்துவமனைக்குப் போகாமலே.
1. மன நிம்மதி
என்னடா? எடுத்த எடுப்பிலேயே மன நிம்மதி என்று சொல்கிறார்களே என எண்ண வேண்டாம்.. அதுதான் இப்போதைய நிலையில் மிகக் காஸ்ட்லி. எவ்வளவு செலவிட்டாலும் கிடைக்காத அரிதானதாகவும் மாறிவிட்டது.
எதற்கும் கோபப்படாதீர்கள். அளவுக்கு அதிகமாக கோபப்படாதீர்கள். கோபமே படாதீர்கள். யாரையும் மதிப்பிடாதீர்கள். யாரையும் வெறுக்காதீர்கள். பொறாமை படாதீர்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். இவையெல்லாம் சாத்தியமானால் மன நிம்மதி இதோ என்று ஓடோடி வந்து உங்களிடம் உட்கார்ந்து கொள்ளும்.
2. ஆரோக்கியமான உணவு
இது எங்கே கிடைக்கும் என்று கேட்கும் தலைமுறைதான் இப்போது உருவாகிக் கொண்டே இருக்கிறது. சாப்பிடுவது கொஞ்சமாக இருந்தாலும் அது ஆரோக்கியமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை உணவாவது வீட்டில், சமைத்த நல்ல காய்கறிகளைக் கொண்டதாக இருக்கட்டும்.
ஆரோக்கியமான சாப்பாடு பற்றி யாருக்கும் எதுவும் சொல்லத் தேவையேயில்லை. எல்லோருக்குமே தெரியும். யாராலும் சாப்பிடத்தான் முடியவில்லை.
3. உடல் இயக்கம்
உழைப்போ அல்லது பயிற்சியோ அல்லது ஊர் சுற்றுகிறீர்களோ.. உடல் இயக்கம் சீராக இருக்கும்படி உங்கள் வாழ்முறையை வைத்துக் கொள்ளுங்கள். அதிகம் நடக்கவும். அதிகம் ஓடவும், சைக்கிள் ஓட்டவும், அதிகம் உழைக்கவும் முனையுங்கள். முடிந்தால்.. உங்கள் விருப்பமும் சாத்தியம்.
4. உடல் எடை
உங்கள் உடல் உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை கண்டறிந்துகொள்ளுங்கள். மிகத் துல்லியமாக அதே அளவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூடக் குறைய இருக்கலாம். அதிகமாக இருக்கிறோம் என்று எதையும் சாப்பிடாமல் மெலிவதோ, ஒல்லியாக இருக்கிறோம் என்று கவலைப்பட்டு தலைமுடியைக் கொட்ட விடுவதோ வேண்டாம். ஆனால் அதிகப்படியான உடல் எடையை அதிகரிக்காமல் காத்துக் கொள்ளுங்கள். இருந்தால் மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள்.
5. தீய பழக்க வழக்கம்
புகை முதல் மது வரை தீய பழக்க வழக்கங்களை ஒழித்துவிடுங்கள். இல்லைங்க விடவே முடியவில்லை என்றால் அளவோடு என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் கெட்டதுக்கு எப்படி இருக்கும் அளவு.. ஆனால் உங்களுக்கு நீங்கள் விதித்துக் கொள்ளும் மிகக் குறைந்த அளவில் தீய பழக்கங்களை மெல்ல குறைத்து, அதற்குப் பழகிவிட்ட பிறகு அதனை மறக்க முயலுங்கள். அதிலும் எந்த கட்டாயமும் வேண்டாம்.
இந்த ஐந்து பழக்கங்கள்தான் நீண்ட ஆயுளுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்த ஐந்து விஷயங்களில் ஏதேனும் ஒரு விஷயத்தை மட்டும் கட்டாயமாக பின்பற்றினாலே ஒரு மனிதனின் ஆயுள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்குமாம். அனைத்தையும் கைகொண்டால் நிச்சயம் 100 வயதை எட்டலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...