இதன்படி, முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்சமாக, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில், வினாத்தாள் கசிவது, ஆள்மாறாட்டம் நடப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.
இது போன்ற சம்பவங்களால், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த காலங்களில் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இது போன்ற மோசடியில், மாபியா கும்பலைச் சேர்ந்தோர் உள்ளிட்டோர் ஈடுபடுவது தெரிய வந்தது.
இந்நிலையில், தேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில், பொதுத் தேர்வுகள் மசோதா - 2024ஐ, லோக்சபாவில் நேற்று, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்தார்.இந்த மசோதாவின்படி, போட்டி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு, அதிகபட்சம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மேலும், கணினி மயமாக்கப்பட்ட தேர்வு செயல்முறையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற, பொதுத் தேர்வுகளுக்கான உயர்மட்ட தேசிய தொழில்நுட்பக் குழு அமைக்க, இந்த மசோதா முன்மொழிகிறது.
தேர்வு மையங்களின் மின்னணு கண்காணிப்பை உறுதி செய்தல், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை வகுத்தல், தேசிய தரநிலைகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல் போன்ற அம்சங்களை, இந்த குழு ஆராயும். ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களை தடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரயில்வே தேர்வு வாரியம், நீட், ஜே.இ. இ., க்யூட் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள், இந்த மசோதா வரம்பிற்குள் வரும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...