தமிழகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கு பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம்' என, மாநில பிறப்பு, இறப்பு பதிவாளரும், பொது சுகாதாரத்துறை இயக்குனருமான செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், அவர் அனுப்பியுள்ள கடிதம்:
தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கும், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதில், பொதுமக்கள் பதிவேடு கட்டமைப்பு என்ற சி.ஆர்.எஸ்., முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடைவதை உறுதிப்படுத்த, சி.ஆர்.எஸ்., அமைப்பின் கீழ் பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவு செய்யும் போது, ஆதார் எண்ணையும் சேர்ப்பது முக்கியம்.
அந்த சான்றிதழ்கள் தனிநபரின் அடையாள ஆவணமாக ஏற்று கொள்ள கூடியவை என, இந்திய பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். எனவே, பிறப்பு சான்றிதழ் கோரி பதியும் போது, தாய் அல்லது தந்தையின் ஆதார் எண்ணையும், இறப்பு சான்றிதழுக்கு உயிரிழந்தவரின் ஆதார் எண்ணையும் பதிவேற்ற வேண்டும்.
அவ்வாறு கடந்த மாதம் மேற்கொண்ட ஆதாருடன் இணைந்த பிறப்பு, இறப்பு பதிவின் விபரங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தமிழகம் முழுதும், மாவட்டங்கள், நகராட்சிகள், ஊராட்சிகள், மருத்துவமனை வாரியாக அனுப்பப்பட்டுள்ளன. அதில், சென்னை உட்பட சில மாவட்டங்களில், மிக குறைந்த விகித ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்குவதுடன், பதிவு நடவடிக்கைகளில் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதை உறுதிபடுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...